எங்கேதான் போவார்கள்? ! மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய கௌரவம், சலுகைகள் குறித்த தலையங்கம்

அரசும் சரி, ஊடகங்களும் சரி, சமூகமும் சரி, பாராமுகமாக இருக்கும் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் அவலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல.


கொவைட்-19 கொள்ளை நோய்ப் பரவலாலும், பொது முடக்கத்தாலும் மிக அதிகமாகப் பாதிக்கப்பட்டிருப்பது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. சாலைகளிலும், ரயில் பாதைகளிலும் சாரிசாரியாகக் குழந்தைகளைத் தோள்களில் சுமந்துகொண்டு குடும்பத்துடன் சொந்த ஊருக்குப் போய்ச்சேர அவர்கள் பட்ட பாடு மனித இன வரலாற்றில் அழிக்க முடியாத பெருந்துயராக நிலைத்து விட்டிருக்கிறது.

புலம்பெயர்ந்தவர்களுடைய பிரச்னைகளும் அவலங்களும் ஊடகங்களிலும் பொது வெளியிலும் பரவலாகப் பேசப்படுகின்றன, விவாதிக்கப்படுகின்றன. ஆனால்,  வெளியுலகுக்குத் தெரியாமல் தங்களுக்குள்ளேயே குமுறிக் கொண்டிருக்கும் ஒரு பிரிவினர் குறித்து அதிகம்  விவாதிக்கப்படுவதில்லை. அரசும் சரி, ஊடகங்களும் சரி, சமூகமும் சரி, பாராமுகமாக இருக்கும் மூத்த குடிமக்கள் எதிர்கொள்ளும் அவலம், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல.

அறுபது வயதைக் கடந்த முதியோர் ஏனைய வயதுப் பிரிவினரைவிட, கொவைட்-19 நோய்த் தொற்றால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்புடையவர்கள். ஏற்கெனவே வயோதிகத்தால் உடல் வலுவிழந்து, எதிர்ப்பு சக்தியும் குறைந்திருக்கும் மூத்த குடிமக்கள்  நோய்த் தொற்றுக்கு ஆளாவதும் உயிரிழப்பதும்  உலகளாவிய அளவில் அதிகமாகக் காணப்படுவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.  அவர்களில் பெரும்பாலோர் ரத்த அழுத்தம், நீரிழிவு, மூச்சிரைப்பு, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதால்  நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகக் கூடிய வாய்ப்பு அதிகரிக்கிறது.

குடும்பத்துடன் வாழ்பவர்களாக இருந்தாலும்கூட அவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. படிப்படியாகப் பொதுமுடக்கம் விலக்கப்படும் நிலையில் அவர்கள் எதிர்கொள்ளும் இடர் (ரிஸ்க்) மேலும் அதிகரிக்கிறது. வீட்டிலுள்ள இளம் வயதினர் வேலை நிமித்தமாக வெளியில் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். எதிர்ப்புசக்தி காரணமாக வயது குறைந்தவர்களை நோய்த்தொற்று பாதிக்காவிட்டாலும், அவர்கள் வெளியில் இருந்து கொண்டுவரும் தொற்றால் வீட்டிலுள்ள முதியோர் பாதிக்கப்படும் அபாயம்  அதிகரித்திருக்கிறது.

அதுமட்டுமல்ல, மூத்த குடிமக்கள் நடைப்பயிற்சி உள்ளிட்ட ஓரளவு உடற்பயிற்சியையும் வீட்டுக்குள் அடைந்து கிடப்பதால் மேற்கொள்ள முடிவதில்லை. நோய்த் தொற்று அச்சத்தால் அறைக்குள்ளேயே அடைந்து கிடப்பதும்கூட அவர்களது மன அழுத்தத்தை அதிகரித்து விடுகிறது. இதுகுறித்து வெளியில் சொல்ல முடியாமல் தங்களுக்குள்ளேயே பலர் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்கிற எதார்த்தத்தை யாரும் உணர்வதாகத் தெரியவில்லை.

குழந்தைகள், குடும்பத்தினர் என்று யாரும் இல்லாமல் தனித்து வாழும் முதியோரின் நிலைமை அதைவிடக் கொடுமையானது.  தங்களது அன்றாடத் தேவைக்கான மளிகைப் பொருள்களுக்கும் மருந்துகளுக்கும் வெளியில் செல்லும்போது, அவர்கள் நோய்த் தொற்று பாதிப்புக்கு ஆளாகும் அபாயம் அதிகரிக்கிறது.  வீட்டு வேலைக்கும், சமையலுக்கும் உதவியாளர்கள் வராமல் இருப்பது அவர்களை மேலும் சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. 

கடைகளிலும், மருந்துக் கடைகளிலும் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது காரணமாக நீண்ட நேரம் அவர்கள் வரிசையில் காக்க வைக்கப்படுகிறார்கள் என்பதை யாரும் பொருட்படுத்துவதில்லை. அவர்களுக்குத் தனி வரிசை ஏற்படுத்தி, முன்னுரிமை அளிக்க வேண்டும் என்கிற சாமானிய மனிதாபிமானம்கூட நம்மிடையே இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

மருத்துவமனைகளிலும், முதியோருக்கு நோய்த்தொற்று வந்தால் போதிய கவனம் செலுத்தப்படுவதில்லை  என்கிற உண்மையை எடுத்தியம்பாமல் இருக்க முடியவில்லை. மருத்துவமனைப் படுக்கையாகட்டும், பிராணவாயு தேவையாகட்டும், வென்டிலேட்டர் வசதியாகட்டும் இளம் வயதினருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மூத்த குடிமக்களாக இருந்தால் புறக்கணிக்கப்படுகிறார்கள்.  உலகம் முழுவதும்  இதில் இதே நடைமுறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது. அதில் நியாயம் இருந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. 

மூத்த குடிமக்களுக்கான மருத்துவக் காப்பீடு சாமானியர்களுக்கு எட்டாக்கனி. நடுத்தர வருமானத்தினர் நினைத்துப் பார்க்க முடியாது. எழுபது வயதுக்கும் மேற்பட்ட தம்பதியாக இருந்தால், தலா ரூ.3 லட்சம் மருத்துவக் காப்பீட்டுக்கு ஆண்டுக் கட்டணம் ரூ.60 ஆயிரம். அப்படியே கட்டினாலும்கூட, எல்லா மருத்துவச் செலவுகளும்  காப்பீட்டு நிறுவனங்களால் வழங்கப்படுவதில்லை. 20% - 30% மருத்துவமனைக் கட்டணம் காப்பீட்டுத் தொகைக்கு மேல்  தரவேண்டிய  அவலம் காணப்படுகிறது.

வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள ஏழைகளாக இருந்தால் பிரதமரின் "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தின் கீழ் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் வரை ஓராண்டில் காப்பீடு வழங்கப்படுகிறது. நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அவர்கள்  "ஆயுஷ்மான் பாரத்' திட்டத்தில் சேர முடியாது. முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டமும் அவர்களுக்குக் கைகொடுக்காது.

 இவையெல்லாம் போதாதென்று வாழ்நாள் முழுவதும் உழைத்து சேமித்த பணத்தை வங்கியில்  வைப்புத் தொகையாக வைத்தால் அதற்கான  வட்டியும் தொடர்ந்து குறைந்து வருகிறது.  முன்பெல்லாம் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. விலைவாசி ஏற்றத்துக்கேற்ப ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டது. இப்போது  வங்கி வைப்புத் தொகைக்கான வட்டித் தொகை குறைக்கப்படுகிறது.  அதேநேரத்தில் மருந்துக்கான செலவு அதிகரிக்கிறது.

எங்கேதான் போவார்கள் மூத்த குடிமக்கள்? குறைந்தபட்சம் அனைத்து மூத்த குடிமக்களுக்கும் "ஆயுஷ்மான் பாரத்'  மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் வழங்கப்பட வேண்டும். அதிக வருவாய் உள்ளவர்கள் மனசாட்சிப்படி விலகிக் கொள்ளட்டும்.  எல்லா தரப்பினருக்கும் நிவாரணம் வழங்கும் மத்திய, மாநில அரசுகள் மூத்த குடிமக்களுக்கு கௌரவத்தையும், சலுகைகளையும் வழங்கினால், குறைந்தா போய்விடும்? ஆட்சியாளர்கள் யோசிப்பார்களாக! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com