நல்ல தொடக்கம்! | ரஃபேல் போர் விமானங்களின் வரவு குறித்த தலையங்கம்

ஒருபுறம் பாகிஸ்தானும் மறுபுறம் சீனாவும் வலிமையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தன்னை வலிமைப்படுத்திக்கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.


ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் அம்பாலா விமானப் படைத்தளத்தில் வந்து இறங்கியிருக்கின்றன. விரைவிலேயே இவை இந்திய விமானப் படையில் அதிகாரபூர்வமாக இணைய இருக்கின்றன. 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்திருக்கிறது. சீனாவுடன் எல்லையில் பிரச்னை நிலவும் நிலையில், இந்தியாவின் விமானப் படைக்கு ரஃபேல் போர் விமானங்கள் வலு சேர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இந்தியாவின் விமானப் படையின் தரம் உயர்த்தப்பட வேண்டும் என்கிற பல ஆண்டு கோரிக்கை, ரஃபேல் போர் விமானங்களின் வரவால் ஓரளவுக்கு நிறைவேறியிருக்கிறது. ரஷியாவிலிருந்து மிக், சுகோய் ஆகிய போர் விமானங்களை வாங்குவதிலும் இந்தியா மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது. 

நம்மிடமிருக்கும் பழைய மிக் போர் விமானங்கள் பயன்பாட்டிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டிருக்கின்றன. சுகோய் போர் விமானங்கள், சீனப் போர் விமானங்களுக்கு ஈடு கொடுக்குமா என்பது உறுதியில்லை. இந்த நிலையில், ஐந்து ரஃபேல் போர் விமானங்கள், முதல் கட்டமாக வந்திருப்பது மிகப் பெரிய ஆறுதல். 

இந்திய விமானப் படை வல்லுநர்கள், பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் இருக்கும் போர் விமானங்களைவிட, ரஃபேல் போர் விமானங்கள் அதிநவீனமானவை என்று கருதுகிறார்கள். ஆப்கானிஸ்தான், மாலி, லிபியா உள்ளிட்ட பல நாடுகளின் போர்ச் சூழல்களில் ரஃபேல் போர் விமானங்களின் செயல்பாடு எதிரிகளைக் கலகலக்க வைத்திருக்கிறது. அதே நேரத்தில், சீனாவுடன் நேரடியான மோதல் ஏற்பட்டால், அதை எதிர்கொள்வதற்கு ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் போதுமா என்கிற கேள்விக்கு பதில் கிடையாது. 

இந்தியாவைப் பொருத்தவரை, கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக நமது முப்படைகளை பலப்படுத்துவதில் மிகவும் பின்தங்கியிருக்கிறோம் என்கிற உண்மையை மறைப்பதற்கில்லை. பல்வேறு குற்றச்சாட்டுகளும் ஊழல்களும் தேசிய பாதுகாப்புக்காக ஆயுதங்கள் வாங்குவதிலும் முப்படைகளைப் பலப்படுத்துவதிலும் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றன. ரஃபேல் ஒப்பந்தங்கள்கூட, 2007-இல் பேச்சுவார்த்தை தொடங்கி இத்தனை காலமும் நீண்டு இருக்கிறது.

இப்போது ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவதுகூட நமது தேவையை முற்றிலுமாக பூர்த்தி செய்யுமா என்பது சந்தேகம்தான். ஆரம்பத்தில் 126 ரஃபேல் போர் விமானங்களுக்கான பேச்சுவார்த்தையில் தொடங்கி, அது இப்போது 36 விமானங்களாகக் குறைந்து, அதன் முதல் கட்டமாக ஐந்து விமானங்கள் இந்தியா வந்திருக்கின்றன. 

2015-இல் பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் தலைநகர் பாரீஸூக்குப் போய் பேச்சுவார்த்தை நடத்தி 36 ரஃபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டார். அது முடிந்து ஐந்து ஆண்டுகள் கடந்திருக்கின்றன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். முப்படைகளுக்கான பாதுகாப்புத் தேவைகள் என்பவை, சர்வதேசச் சந்தையில் உடனடியாகப் பணம் கொடுத்துப் பெறுபவையல்ல. முறையான ஒப்பந்தமும் அவற்றைத் தயாரித்து அனுப்புவதற்கு கால அவகாசமும் தேவைப்படுபவை. இவற்றை உணர்ந்து, தாமதத்தையும் இடைத்தரகர்களையும் ஊழலையும் அகற்றி, தளவாடங்களை வாங்குவதை உறுதிப்படுத்துவது என்பது அரசியல் துணிவும் தொலைநோக்குப் பார்வையும் இருந்தால் மட்டுமே சாத்தியம். 

இந்திய விமானப் படை பலவிதங்களிலும் தொழில்நுட்ப ரீதியாகவும் தளவாட ரீதியாகவும் பலவீனமாக இருக்கிறது என்பது அனைவருக்குமே தெரியும். மிக் போர் விமானங்களின் தொழில்நுட்பங்கள் காலாவதியானவை. 

இந்தியாவில் தயாரிக்கப்படும் தேஜஸ் விமானங்கள் நவீன போர் விமானங்களுக்கு எந்த விதத்திலும் நிகரல்ல. பல ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேசச் சந்தையில் மறு விற்பனைக்கு வந்த ஜாகுவார் விமானங்களை, உதிரி பாகங்களுக்காக இந்தியா விலைக்கு வாங்கியபோது, சர்வதேசக் கேலிக்குள்ளானது. அந்த நிலைமை மாறி, இப்போது முப்படைகளையும் பலப்படுத்துவதில் தீவிரமான அக்கறை காட்டப்படுகிறது என்கிற அளவில் மிகப் பெரிய ஆறுதல்.

இந்திய விமானப் படையில் "ஸ்க்வாட்ரன்' என்று அழைக்கப்படும் 42 படைப் பிரிவுகள் இருக்க வேண்டும். ஒவ்வொரு படைப் பிரிவிலும் 16 முதல் 18 வரை போர் விமானங்கள் இருக்கும். ஆனால், 42 படைப் பிரிவுகளுக்குப் பதிலாக, இந்தியாவில் இருப்பது 27 ஸ்க்வாட்ரன்கள்தான். இன்னும் ஓர் ஆண்டில், பாகிஸ்தான் தனது விமானப் படை ஸ்க்வாட்ரன்களின் எண்ணிக்கையை 25-ஆக அதிகரிக்கப் போகிறது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 36 ரஃபேல் போர் விமானங்கள் வந்தாலும்கூட, அது தேவைக்கு ஏற்ப இருக்குமா என்பது சந்தேகம்தான். 

கடந்த பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அரசுகள் முப்படைகளை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தாமல் இருந்தது மிகப் பெரிய பலவீனம். போஃபர்ஸ் பீரங்கி உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டின் பின்னணியில், ராணுவத்திற்குத் தளவாடங்கள் வாங்குவது கெட்ட பெயரை ஏற்படுத்திவிடும் என்கிற அச்சத்தில் ஆட்சியாளர்கள் பாதுகாப்புப் படைகளை வலுப்படுத்துவதில் மெத்தனமாக இருந்தனர். பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீட்டைக் குறைப்பது, அதிகரித்த ஓய்வூதியம் போன்றவையும் தளவாடங்கள் வாங்குவதிலும் அவற்றை மேம்படுத்துவதிலும் பின்னடைவை ஏற்படுத்தின.

அதிகரித்து வரும் பாதுகாப்பு பிரச்னைகள் நம்மை விழித்துக்கொள்ள வைக்கின்றன. இனிமேலும் நாம் மெத்தனமாக இருக்க முடியாது. ஒருபுறம் பாகிஸ்தானும் மறுபுறம் சீனாவும் வலிமையை அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், இந்தியா தன்னை வலிமைப்படுத்திக்கொண்டாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ரஃபேல் போர் விமானங்களின் வரவு ஒரு திருப்புமுனை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com