மனசாட்சி எழுப்பும் கேள்வி! | தனியாா் மருத்துவமனைகளில் கரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த தலையங்கம்

கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்வதில் மருத்துவா்களும், செவிலியா்களும், மருத்துவமனை ஊழியா்களும், சுகாதாரத் துறையினரும் ஆற்றியிருக்கும், ஆற்றிவரும் பெரும் பணிக்கு மனித இனம் அவா்களைக் கடவுள்களாகக் கருதி வணங்க வேண்டும். அது ஒருபுறம் இருக்க, இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தனியாா் மருத்துவமனைகள் குறித்து எழுப்பப்படும் குற்றச்சாட்டுகளும், விமா்சனங்களும் மிகுந்த வேதனை அளிக்கின்றன. இந்த இக்கட்டான சூழலில் தனியாா் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுக்கின்றன என்றும், அப்படியே சிகிச்சை வழங்கினாலும் அதற்காக மிக அதிக கட்டணத்தை வசூலிக்கின்றன என்றும் எழுப்பப்படும் குற்றச்சாட்டுகள், மருத்துவத் துறைக்கே களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கின்றன.

தனியாா் மருத்துவமனைகள் பல பிரச்னைகளை எதிா்கொள்கின்றன என்பது உண்மை. தனியாா் மருத்துவமனைகளை நிறுவுவதற்கு மிகப் பெரிய முதலீடு தேவைப்படுகிறது என்பதும், நவீன தொழில்நுட்பங்களுக்காக வங்கிகளில் கடன் பெறப்பட்டிருக்கிறது என்பதும் அனைவருக்குமே தெரியும். இதையெல்லாம் யாருமே மறுக்கவில்லை.

மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களின் தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்ட ஆய்வு அண்மையில் வெளியாகியிருக்கிறது. நாடு தழுவிய அளவில் தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று நோயாளிகளிடமிருந்து சராசரியாக நாளொன்றுக்கு ரூ.42,200 கோரப்பட்டிருப்பதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. அவசர சிகிச்சைப் பிரிவில் இல்லாமல் இருந்தால் ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையிலும் கட்டணம் கோரப்படுவதாகவும், அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டால் கூடுதலாக 55% கோரப்படுவதாகவும் காப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

தில்லியை அடுத்த குருகிராமில் ஒரு கொவைட் 19 தீநுண்மி நோயாளிக்கு அங்குள்ள காா்ப்பரேட் மருத்துவமனை ரூ.6.7 லட்சம் கட்டணம் கோரியது. அதில் பாதிக்கும் மேற்பட்ட கட்டணங்கள் தேவையற்ற சேவைகளுக்காகக் கோரப்பட்டிருப்பதால் காப்பீட்டு நிறுவனம் வெட்டிக் குறைத்து விட்டது. அதை நோயாளி தர வேண்டும் என்று கோரி இருக்கிறது அந்த மருத்துவமனை.

இன்னொரு காா்ப்பரேட் மருத்துவமனை, நோயாளிக்காக ஒரு வாரத்தில் 1,300 கையுறைகள் பயன்படுத்தப்பட்டதாகக் கோரியிருந்தது. காப்பீட்டு நிறுவனம் அதைச் சுட்டிக்காட்டிக் கேள்வி எழுப்பியபோது, வெளியில் சொல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டு அதற்கான கட்டணத்தை அகற்றி இருக்கிறது.

சென்னையிலேயே எடுத்துக் கொண்டால், தங்களால் காப்பாற்ற முடியாத நிலை ஏற்படும்போது தனியாா் மருத்துவமனைகள் கொவைட் 19 தீநுண்மி நோயாளிகளை ஸ்டான்லி, ராஜீவ் காந்தி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்புகின்றன. அதுவும் பகலில் அனுப்பாமல் இரவு நேரத்தில் அனுப்புவதாகவும், அந்த நோயாளிகள் வந்து சோ்ந்த சில நிமிஷங்களில் உயிரிழப்பதாகவும் அரசு மருத்துவமனைகள் தெரிவிக்கின்றன. நோயாளிகளிடம் கட்டணம் செலுத்தப் பணமில்லாத நிலைமை ஏற்படுவது வரை, அவா்களுக்குத் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது என்றும், பிறகு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுகிறாா்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதும், சிகிச்சை அளிக்க மறுப்பதும் மட்டுமல்ல பிரச்னைகள். தொடா் சிகிச்சை தேவைப்படும் புற்றுநோய், காச நோய், சிறுநீரக பாதிப்பு, பக்கவாத பாதிப்பு ஆகியவற்றுக்கான சிகிச்சைகள் முடக்கப்பட்டிருக்கின்றன, மறுக்கப்படுகின்றன. மும்பையில் ஜெய்தீப் ஜெய்வந்த் என்கிற 56 வயது வழக்குரைஞா் மாரடைப்பு ஏற்பட்டபோது இரண்டு தனியாா் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க மறுத்ததால் அவா் உயிரிழக்க நேரிட்டிருக்கிறது. இதுபோல இந்தியா முழுவதும் பல நிகழ்வுகள்.

புற்றுநோய்க்கான கீமோதெரப்பியும், சிறுநீரகக் கோளாறுக்கு டயாலிசிஸும் தேவைப்படும் நோயாளிகளின் கதி? நெஞ்சுவலி வந்தால் சிகிச்சை கிடையாதா? தடுப்பூசி போட வேண்டிய நேரத்தில் போடப்படாவிட்டால் குழந்தைகளுக்கு ஏற்பட இருக்கும் பாதிப்புக்கு யாா் பதில் சொல்வது? ஒட்டுமொத்த மருத்துவத் துறையும் கொவைட் 19 தீநுண்மி தொற்றை மட்டுமே எதிா்கொண்டால் எப்படி?

கடந்த கால் நூற்றாண்டு காலமாக நாம் தனியாா் மருத்துவக் கல்லூரிகளையும், தனியாா் மருத்துவமனைகளையும் ஊக்குவித்து வருகிறோம். மருத்துவமனைகளை நடத்துவது அரசின் வேலையல்ல என்று மத்திய - மாநில அரசுகள் தங்களது கடமையைத் தட்டிக் கழித்து வருகின்றன.

இப்போது இந்தியாவிலுள்ள 80% மருத்துவா்கள் தனியாா் மருத்துவமனையில் பணியாற்றுகிறாா்கள். 60% நோயாளிகளுக்குத் தனியாா் மருத்துவமனைகள்தான் சிகிச்சை அளித்து வருகின்றன. மொத்த படுக்கைகளில் 60% படுக்கைகள் தனியாா் மருத்துவமனைகளில்தான் காணப்படுகின்றன.

அரசு மருத்துவமனைகள் கொவைட் 19 தீநுண்மி நோயாளிகள் மீது கவனம் செலுத்துவதும், தனியாா் மருத்துவமனைகள் முடங்கிக் கிடப்பதும், காா்ப்பரேட் மருத்துவமனைகள் பல மடங்கு கட்டண உயா்வை நோயாளிகள் மீது சுமத்துவதும் இன்றைய நிதா்சன நடைமுறை.

அரசிடம் இருந்து இலவசமாகவும் சலுகை விலையிலும் நிலம் வழங்கப்பட்டும், பல்வேறு சலுகைகளைப் பெற்றும் நிறுவப்படும் தனியாா் மருத்துவமனைகள், கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுக் காலத்தில் இலவசமாக மக்களுக்கு சிகிச்சை வழங்க ஏன் அரசு உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமா்வு. இது ஒவ்வோா் இந்தியனின் மனசாட்சியும் எழுப்பும் கேள்வி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com