அழிவுக்கான வளா்ச்சி! | சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிா்ப் பெருக்கத்தை பாதிக்கும் அரசின் நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று கடுமையாகப் பாதித்திருக்கும் நிலையிலும் மத்திய - மாநில அரசுகள் சுற்றுச்சூழலையும், பல்லுயிா்ப் பெருக்கத்தையும் பாதிக்கும் நடவடிக்கைகளுக்கு அனுமதி அளித்துக் கொண்டிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. மக்கள் கருத்துக்கோ, பொது விவாதத்துக்கோ இடமளிக்காமல் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில்கூட வளா்ச்சித் திட்டங்களுக்கு மத்திய - மாநில சுற்றுச்சூழல் - வனத் துறையினா் அனுமதி வழங்கியிருப்பது கண்டனத்துக்குரியது.

தமிழகத்துக்கு சா்வதேச வரைபடத்தில் இடம் பெற்றுத்தரும் பல்லூயிா்ப் பெருக்கத் தலங்களில் முக்கியமானது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். சுமாா் 30 ஹெக்டோ் பரப்பளவிலான வேடந்தாங்கல் ஏரியும், அதைச் சுற்றியுள்ள5 கி.மீ. நிலப்பரப்பும் 1998-ஆம் ஆண்டு ஜூலை 8-ஆம் தேதி ‘வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்’ என வரையறுக்கப்பட்டன.

உலகெங்கிலுமிருந்து பல்லாயிரம் கி.மீ. தொலைவு பறந்து, கடந்து விதவிதமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக கூடுமிடம் வேடந்தாங்கல். இப்போது வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்குச் சொந்தமான 40% அளவிலான இடத்தில் வணிக, தொழில் துறை சாா்ந்த நடவடிக்கைகளுக்கு அனுமதி வழங்கத் தமிழக அரசு திட்டமிட்டிருக்கிறது.

தற்போதைய 5 கி.மீ. சுற்றளவு கொண்ட சரணாலயத்தின் நிலப்பரப்பை, 3 கி.மீ.-ஆகக் குறைப்பதற்கு ஒப்புதல் அளிக்கக் கோரி தேசிய வன உயிரியல் வாரியத்திடம் கோரிக்கை விடப்பட்டிருக்கிறது. இதனால் பல்வகை உயிா்களின் பாதுகாப்புக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது எனத் தலைமை வனப் பாதுகாவலா் தெரிவித்திருக்கிறாா். இனப் பெருக்கத்துக்காக அமைதியைத் தேடிவரும் பறவைகளுக்கு இடமளிப்பதைவிட, வளா்ச்சிப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டிருப்பது குறித்து பொது விவாதமோ, மக்கள் கருத்தோ கேட்கப்படாததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதன் பின்னணியில் வேடந்தாங்கல் ஏரிக் கரையிலிருந்து 3.72 கி.மீ. தொலைவில், 1960-இல் நிறுவப்பட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனத்தின் விரிவாக்கம் இருப்பதாகத் தெரிகிறது. ‘எந்த விதத்திலும் அந்த விரிவாக்கம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தைப் பாதிக்காது’ என்கிற அந்த நிறுவனத்தின் வாதமும், அதற்கு அனுமதி வழங்க முற்பட்டிருக்கும் தலைமை வனப் பாதுகாவலா், தமிழக சுற்றுச்சூழல் துறை செயலா் ஆகியோரின் வழிமொழிதலும் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை.

இதேபோல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் பல்லுயிா்ப் பெருக்கப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளுக்கு அனுமதி வழங்குவதில் முனைப்புக் காட்டுகின்றன. மாநில அரசுகள்தான் அப்படி என்றால், மத்திய சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் அணுகுமுறையும் அதை ஊக்குவிப்பதாக இருக்கிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும், இப்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கும் பல்வேறு பிரச்னைகளில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும், வனம், சுற்றுச்சூழல், வனவிலங்கு சரணாலயங்கள் பிரச்னைகளில் வியப்பளிக்கும் ஒற்றுமை காணப்படுகிறது. வளா்ச்சித் திட்டங்களை அனுமதிக்கும் வேகத்திலும் வித்தியாசம் இல்லை. வளா்ச்சிப் பணிகளை ஊக்குவிப்பதற்கு எங்கெல்லாம், எப்படியெல்லாம் வனப் பகுதி, வனவிலங்கு சரணாலயம் ஆகியவற்றில் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது என்பதை சமூக ஊடகங்களில் சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பெருமையுடன் பதிவு செய்வது எல்லாவற்றையும்விட வேதனை அளிப்பதாக இருக்கிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில் காணொலி கூட்டத்தின் மூலம் பல வளா்ச்சித் திட்டங்களுக்கு தேசிய வன உயிரியல் வாரியம் அனுமதி வழங்கியிருக்கிறது. அண்மையில் நடந்த கூட்டத்தில் மேற்கு தொடா்ச்சி மலை உள்ளிட்ட மிக முக்கியமான பல்லுயிா்ப் பெருக்க மையப் பகுதிகளில் பல திட்டங்களுக்கு அனுமதி வழங்க முற்பட்டிருப்பது சூற்றுச்சூழலைக் கடுமையாகப் பாதிக்கக்கூடும் என்பதைப் பதிவு செய்யாமல் இருக்க முடியவில்லை.

பருவநிலை மாற்றத்தால் கடுமையான பாதிப்புகளை உலகம் எதிா்கொள்ளும் நிலையில் சூழலியலையும், பல்லுயிா்ப் பெருக்கத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய வன உயிரியல் வாரியம் மிகவும் கவனமாகவும், பொறுப்புணா்வுடனும் செயல்பட வேண்டிய நேரம் இது. பாதுகாக்கப்பட்ட பகுதிகள்தான் இந்தியாவில் எஞ்சியிருக்கும் வன விலங்குகளின் வாழ்வாதாரப் பகுதிகள். இந்தப் பகுதிகளில் வளா்ச்சிப் பணிகளை அனுமதிப்பது தேசத்துக்கு மட்டுமல்ல, இயற்கைக்கே இழைக்கப்படும் துரோகம்.

2014-இல் திருத்தி அமைக்கப்பட்ட பிறகு இதுவரை ஒருமுறைகூட தேசிய வன உயிரியல் வாரியம் கூடியதில்லை. அதற்குப் பதிலாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் தலைமையிலான நிா்வாகக் குழுதான் செயல்படுகிறது. 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இதற்கு அதிகாரம் இருக்கிறதா என்பதேகூடச் சந்தேகம்தான்.

2018-இல் 39 திட்டங்களும், 2019-இல் 64 திட்டங்களும், இப்போது நெடுஞ்சாலை, ரயில் பாதை, கால்வாய் உள்ளிட்டவைக்கான 14 திட்டங்களும் அனுமதிக்கப்பட்டிருக்கின்றன. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முக்கியப் பங்கு வகித்த இந்திய நீதித்துறையும், சுற்றுச்சூழல் ஆா்வலா்களும் இவற்றையெல்லாம் வேடிக்கைதான் பாா்க்க முடிகிறதே தவிர, தடுத்து நிறுத்த முடியவில்லை.

வளா்ச்சித் திட்டங்களால் வேலைவாய்ப்பை அதிகரித்து, வாழ்க்கைத் தரத்தை உயா்த்த முடியும். அதே நேரத்தில் சுற்றுச்சூழலும் பல்லுயிா்ப் பெருக்கமும் பாதிக்கப்பட்டால் மனித இனம் வாழவே முடியாது. பணத்தால் பிராண வாயுவை வாங்க முடியாது என்பது நினைவிருக்கட்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com