புதிய அத்தியாயம்! | ஆஸ்திரேலியாவுடனான ஒப்பந்தத்தின் கட்டாயம் குறித்த தலையங்கம்

இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் அவசியமானதும், அவசரமானதும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுவதைக் க

இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையே கடந்த நூற்றாண்டில் இருந்த நெருக்கமான உறவு என்பது கிரிக்கெட்டாக மட்டும்தான் இருந்தது. ஆங்கிலம் பேசும் நாடுகள், ஜனநாயக நாடுகள், காமன்வெல்த் அமைப்பில் அங்கத்தினர்கள் என்பதைத் தவிர இரு நாடுகளுக்கும் இடையே பெரிய அளவிலான நட்புறவு இருக்கவில்லை. 

1986-இல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆஸ்திரேலிய அரசு முறைப் பயணத்துக்குப் பின் 28 ஆண்டுகளுக்குப் பிறகு, 2014-இல் பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அதுமுதல் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகமும் அதிகரித்திருக்கிறது, நட்புறவும் மேம்பட்டிருக்கிறது.

சுமார் இரண்டரைக் கோடி மட்டுமே மக்கள்தொகையுள்ள ஆஸ்திரேலியாவில் ஏழு லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வாழ்கிறார்கள். இந்தியர்களின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவின் அனைத்துத் துறைகளிலும் அதிகரித்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக சர்வதேச அரசியல் நிகழ்வுகளில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பெரும்பாலான பிரச்னைகளில் ஒத்த கருத்து உடையவையாக இணைந்து செயல்பட்டிருக்கின்றன. 

இந்தப் பின்னணியில்தான் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிஸனுக்கும் இடையிலான காணொலி மாநாடு அண்மையில் நடந்தது. மாநாட்டைத் தொடர்ந்து வெளியிடப்பட்டிருக்கும் கூட்டறிக்கை இருதரப்புப் பேச்சுவார்த்தையின் வெற்றியை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 

காணொலி மாநாட்டின் மிக முக்கியமான அம்சம் ராணுவ, பாதுகாப்பு ஒப்பந்தங்கள். அதிலும் குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பகுதி குறித்த இரு நாடுகளின் கருத்தொற்றுமையும், பாதுகாப்பு அக்கறையும் ஒப்பந்தத்தின் சிறப்பு அம்சங்கள். அமெரிக்காவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், ஆசியப் பகுதியிலுள்ள பல்வேறு நாடுகளும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஒன்றிணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் பகுதியிலுள்ள ஜப்பான், தென் கொரியா, வியத்நாம், இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனான தங்களது நட்புறவையும், கூட்டுறவையும் அதிகரித்து வருவதன் காரணம் அதுதான்.

இரண்டு நாடுகளுக்கும் இடையே ராணுவ அளவிலான கூட்டுறவு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இரண்டு நாடுகளும் பரஸ்பரம் தங்களது ராணுவ வசதிகளைப் பகிர்ந்து கொள்ளவும், இரு நாட்டு கடற்படையும் இணைந்து செயல்படவும் வழிகோலப்பட்டிருக்கிறது. இன்னொரு முக்கியமான ஒப்பந்தம், தொலைத்தொடர்பு, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்பட இசைந்திருப்பது.

பிரதமர்களின் பேச்சுவார்த்தையில் சீனா குறித்து எதுவும் பேசப்படாவிட்டாலும், வெளியில் கூறப்படாத பிரச்னையாக இருந்தது சீனாவுடன் இரு நாடுகளுக்கும் இருக்கும் கருத்துவேறுபாடுகள் என்பது தெளிவு. கொவைட் 19 தீநுண்மி கொள்ளை நோய் தொடர்பான சீனாவின் செயல்பாடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று முதலில் குரல் எழுப்பியது ஆஸ்திரேலியாதான். இந்தியாவின் எல்லையில் மோதலுக்குத் தயாராக சீன ராணுவம் நின்று கொண்டிருக்கிறது. இந்தப் பின்னணியில் பேச்சுவார்த்தையில்  சீனாவின் நிழல் மறைமுகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது. 

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியாவுடன் இணைந்து இந்தியப் பெருங்கடல், பசிபிக் கடல் பகுதிகளில் அமைதி நிலவவும், பதற்றம் ஏற்படாமல் இருக்கவும் செய்துகொண்ட ஒப்பந்தத்தில் இந்தியா கையொப்பமிட்டிருக்கிறது. அதன் நீட்சியாகத்தான் இப்போதைய இந்திய - ஆஸ்திரேலிய பாதுகாப்புக் கூட்டுறவு ஒப்பந்தத்தைப் பார்க்க வேண்டியிருக்கிறது. 

இரண்டு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு குறித்த ஒப்பந்தம் அவசியமானதும், அவசரமானதும் என்பதில் ஐயமில்லை. அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுவதைக் குறிப்பிட்டாக வேண்டும். 

முக்கியமாக தாதுப் பொருள்களை இறக்குமதி செய்வதில் சீனாவை மட்டுமே நம்பியிருக்காமல் ஆஸ்திரேலியாவையும் சார்ந்திருப்பது என்கிற இந்தியாவின் முடிவு வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், இரண்டு தலைவர்களும் தடைபட்டு நிற்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் செல்லாதது குறை.

இந்தியாவுடன் ஏழு ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டு நட்புறவை மேம்படுத்த ஆஸ்திரேலியா முன்வந்திருப்பதற்கு சில காரணங்கள் இருக்கின்றன. ஆஸ்திரேலியாவிலிருந்து பார்லி இறக்குமதிக்கு 80% வரி விதித்திருக்கிறது சீனா. ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான நான்கு இறைச்சி ஏற்றுமதியாளர்களுக்கு சீனா தடை விதித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவின் மூன்றில் ஒரு பங்கு ஏற்றுமதி சீனாவுக்குத்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அதேபோல, ஆஸ்திரேலியப் பல்கலைக்கழகங்களில் சீன  மாணவர்கள் படிப்பதற்கும் தடை விதிக்க முற்பட்டிருக்கிறது. 

ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளி சீனா (8,240 கோடி டாலர் - ரூ.6,21,581 கோடி). ஆறாவது இடத்தில் இருக்கும் இந்திய - ஆஸ்திரேலிய வர்த்தகம் வெறும் 2,050 கோடி டாலர் (ரூ.1,54,641 கோடி) மட்டுமே. அதனால், பொருளாதார ரீதியாக சீனாவுக்கு மாற்றாக இந்தியா ஒருநாளும் இருக்க முடியாது. அதே நிலைதான் இந்தியாவைப் பொருத்தவரை ஆஸ்திரேலியாவும்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் ராஜபட்ச சகோதரர்கள் வரவால் வலுப்பெற்றிருக்கும் நிலையில், இந்தியப் பெருங்கடல் பகுதியில் நம்மைப் பலப்படுத்திக்கொள்ள ஆஸ்திரேலியாவுடனான இந்த ஒப்பந்தம் காலத்தின் கட்டாயம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com