சரியான முடிவு! | ஊர்ப் பெயர்களின் உச்சரிப்பை மாற்றுவது குறித்த தலையங்கம்

ஏனைய ஆட்சி முறைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் உள்ள பல வேறுபாடுகளில், மிக முக்கியமான வேறுபாடு தவறுகள் திருத்தப்படுவது.


ஏனைய ஆட்சி முறைகளுக்கும், ஜனநாயகத்துக்கும் உள்ள பல வேறுபாடுகளில், மிக முக்கியமான வேறுபாடு தவறுகள் திருத்தப்படுவது. மக்களாட்சி முறையில் அவசரப்பட்டு எந்தவொரு முடிவையும் எடுத்துவிட முடியாது. சக அமைச்சர்கள், அதிகாரிகள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் என்று பலதரப்பட்ட கருத்துகள் கேட்கப்பட்டுத்தான் முடிவு எட்டப்படும்.

நல்லாட்சியின் அழகு தவறே இல்லாமல் ஆட்சி செய்வதல்ல. தவறு நேரும்போது, விமர்சனங்களை ஆக்கபூர்வ ஆலோசனைகளாகக் கருதி ஏற்றுக்கொள்வதும், தவறைத் திருத்திக் கொள்வதும்தான் நல்லாட்சியின் அடையாளங்கள். அந்த விதத்தில் கண்ணியத்துடனும், திறந்த மனத்துடனும் தமிழக அரசு எடுத்திருக்கும் ஒரு முடிவு வரவேற்புக்கும் பாராட்டுக்கும் உரியது.

தமிழகத்தில் உள்ள ஊர்களின் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் எழுதுவது என்று தமிழக அரசு அண்மையில் ஓர் அரசாணை வெளியிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள 1,018 ஊர்களின் பெயர்களைத் தமிழில் உச்சரிப்பது போலவே ஆங்கிலத்திலும் எழுதுவது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த அறிவிப்பைத் திரும்பப் பெறுவதாக தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க. பாண்டியராஜன் தெரிவித்திருக்கிறார். வறட்டுப் பிடிவாதம் பிடிக்காமல், கௌரவம் பார்க்காமல், விமர்சனங்களுக்குக் களங்கம் கற்பிக்காமல் அரசின் முடிவை மாற்றிக் கொண்ட அவரின் செயல்பாடு மெச்சுதற்குரியது. தன்னை ஒரு ஜனநாயகவாதி என்பதை அமைச்சர் க. பாண்டியராஜன் வெளிப்படுத்தியிருக்கிறார். 

இப்படியொரு முயற்சியே தவறு என்று  கூறிவிட முடியாது. ஆனால், அப்படியொரு முயற்சியை மேற்கொள்வதற்கான நேரம் இதுவல்ல. கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிர்கொள்ள மாநிலம் முழுவதும் போராடிக் கொண்டிருக்கும் நிலையில், ஊர்ப் பெயர்களின் உச்சரிப்பை மாற்றுவது என்கிற அறிவிப்பு அவசியமில்லாதது. அதேபோல, எல்லா ஊர்களின் பெயர்களையும் மாற்றுவது என்பதும் முன்னோக்கிப் பயணிக்கும் சமுதாயத்துக்கு வீண் வேலை.

அடிப்படையில் மூன்று காரணங்களுக்காகப் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதுண்டு. ஓர் இனத்தின் பெருமையையும், சுய மரியாதையையும் பாதிக்கும் வகையில் ஒரு தெருவின் பெயரோ, ஊரின் பெயரோ அமைந்தால் அதை மாற்றியாக வேண்டும். அப்படி மாற்றும்போது மக்கள் மன்றம் அதை வரவேற்று ஏற்றுக்கொள்ளும். 

ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான ஜெனரல் டயரின் பெயரில் இருந்த சாலையின் பெயரை மாற்றாமல் எப்படி இருக்க முடியும்? அதேபோல, நம்மை அடிமைப்படுத்திய பல மொகலாய, ஆங்கிலேய ஆட்சியாளர்களின் பெயர்களை உடைய சாலைகளும் கட்டடங்களும் பெயர் மாற்றப்பட்டன. அவை வரவேற்கப்பட்டன.

இரண்டாவதாக, விடுதலைக்கு முன்பு ஆட்சியில் இருந்த ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக ஏற்படுத்திய மாநில, மாவட்டப் பெயர்கள் மாற்றப்பட்டன. 1967-இல் திமுக ஆட்சிக்கு வந்தபோது, "சிலம்புச் செல்வர்' ம.பொ.சி. சட்டப்பேரவையில் ஒரு தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தார். பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சூட்டப்பட்ட "மெட்ராஸ் ஸ்டேட்' (சென்னை மாகாணம்) என்ற பெயரைத் "தமிழ்நாடு' என்று மாற்ற வேண்டும் என்கிற அவரது தனிநபர் தீர்
மானத்தை, அவரின் ஒப்புதலுடன் அரசுத் தீர்மானமாகவே கொண்டுவந்தது, அண்ணாதுரை தலைமையிலான அன்றைய திமுக அரசு. அது சட்டப்பேரவையிலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. மக்கள் மன்றத்தாலும் வரவேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது.

தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதுபோன்ற பெயர் மாற்றங்கள் செய்யப்பட்டன. "மைசூர் ஸ்டேட்' கர்நாடக மாநிலமானது. "சென்ட்ரல் ப்ராவின்ஸ்' மத்தியப் பிரதேசமானது. 

மூன்றாவதாக, வாக்கு வங்கி அரசியலுக்காகவும், மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்காகவும் பெயர் மாற்ற அறிவிப்புகளில் ஆட்சியாளர்கள் ஈடுபடுவதுண்டு. அவற்றில் சில ஏற்புடையவை, பல அவசியமற்றவை. புது தில்லியிலுள்ள "கன்னாட் பிளேஸ்', "கன்னாட் சர்க்கஸ்' பகுதிகள் இந்திரா சௌக், ராஜீவ் சௌக் என்று மாற்றப்பட்டதும், ஔரங்கசீப் சாலை ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சாலை என்று மாற்றப்பட்டதும் அந்த வகையைச் சாரும்.

எம்.ஜி.ஆர். ஆட்சியிலும், கருணாநிதி ஆட்சியிலும் மாவட்டங்களுக்கு அரசியல் தலைவர்களின் பெயர்களை மாற்றி மாற்றி சூட்டி வரிப் பணம் விரயமாக்கப்பட்டது. கவனத்தைத் திசைதிருப்புவதும், வாக்கு வங்கி அரசியலும் அதற்குக் காரணம். எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஜாதிப் பெயர்களை அகற்றுகிறோம் என்று கூறி, பல சாதனையாளர்களின் நினைவுகளை நிரந்தரமாக அழித்துவிட்ட சோகத்தைச் சொல்லி மாளாது.

இப்போது அரசு மேற்கொள்ள நினைத்த ஆங்கில உச்சரிப்பு அகற்றல் முயற்சிக்குப் பின்னால், எந்த அரசியல் ஆதாயமும் இருப்பதாகத் தெரியவில்லை, மக்களைத் திசைதிருப்பும் எண்ணமும் தெரியவில்லை. பிறகு எதற்காக இந்த விபரீத அரசாணை என்பது புதிராக இருந்தது.

அரசாணை வெளியிடப்பட்டதாலேயே முடிந்துவிடாது. மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். "மௌண்ட் ரோடு' அண்ணா சாலையானது. மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். பூந்தமல்லி நெடுஞ்சாலை ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையானதை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போதும் பூந்தமல்லி நெடுஞ்சாலை என்றுதான் அழைக்கிறார்கள். கலைஞர் கருணாநிதி நகர் கே.கே. நகர் என்றுதான் அறியப்படுகிறது. 

எத்தனையோ மக்கள் பிரச்னைகள் காத்துக் கிடக்கின்றன. ஆங்கில உச்சரிப்பை மாற்றுவதில் நேரத்தை வீணாக்காமல், ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடுவோம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com