எதிர்பார்த்தது போலவே... | பத்து மாநிலங்களில் நடந்து முடிந்த மாநிலங்களவைக்கான தேர்தல் குறித்த தலையங்கம்

பத்து மாநிலங்களில் நடந்த மாநிலங்களவைக்கான தேர்தல் முடிவுகள் காங்கிரஸூக்கு சற்று ஆறுதலையும், பாஜகவுக்கு முன்பைவிட பலத்தையும் வழங்கியிருக்கின்றன.


எதிர்பார்த்த அளவிலான பரபரப்போ, அதிர்ச்சித் திருப்பங்களோ இல்லாமல் மாநிலங்களவைக்கான தேர்தல் நடந்து முடிந்திருக்கிறது. இந்த சுற்றுத் தேர்தலிலும் ஆளும் பாஜகவோ அதன் தேசிய ஜனநாயகக் கூட்டணியோ பெரும்பான்மை பலம் பெற்றுவிடவில்லை என்றாலும், முந்தைய நிலையைவிட இப்போது தன்னை பலப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றுதான் கூற வேண்டும்.

பல பொருளாதார சீர்திருத்தத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கு, முந்தைய ஆட்சியில் மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாதது நரேந்திர மோடி அரசுக்கு முட்டுக்கட்டையாக இருந்தது. நிதி மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவையின் ஒப்புதல் தேவையில்லை என்கிற விதியைப் பயன்படுத்தி, சில மசோதாக்களை நிதி மசோதாக்களாக நிறைவேற்றியது. அவை இப்போது நீதிமன்றத் தீர்ப்புக்குக் காத்திருக்கின்றன என்பது வேறு விஷயம்.

2019-இல் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தபோது, மக்களவையில் தனிப் பெரும்பான்மை கிடைத்தது பாஜகவுக்கு மிகப் பெரிய ஆறுதல். அதன் அடிப்படையில் விவாதத்துக்கும், விமர்சனங்களுக்கும் உரிய பல மசோதாக்களை மக்களவையில் எளிதாகவும், மாநிலங்களவையில் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற்றும் நிறைவேற்ற முடிந்தது. முத்தலாக் தடைச் சட்டம், குடியுரிமை திருத்தச் சட்டம், ஜம்மு - காஷ்மீர் மறு சீரமைப்புச் சட்டம் உள்ளிட்ட மசோதாக்களை எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேற்றியது பாஜகவின் சாமர்த்தியம் என்றுதான் கூற வேண்டும்.

இப்போது நடந்து முடிந்திருக்கும் மாநிலங்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, பாஜகவின் பலம் 75-இல் இருந்து 86-ஆக அதிகரித்திருக்கிறது. கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல், நியமன உறுப்பினர்கள், சுயேச்சைகள் ஆகியோரின் ஆதரவையும் பெற முடிந்தால், 245 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் 122 உறுப்பினர்களின் ஆதரவு ஆளும் கட்சிக்கு இருக்கும். ஓர் உறுப்பினர் இடம் காலியாக இருப்பதால் தெலங்கானா ராஷ்டிர சமிதி (7), பிஜு ஜனதா தளம் (9), பகுஜன் சமாஜ் கட்சி (4), சமாஜவாதி கட்சி (8) போன்ற ஏதாவது ஒரு கட்சியின் ஆதரவைப் பெற்றாலும்கூடப் பிரச்னை இல்லாமல் மசோதாக்களை நிறைவேற்றிவிட முடியும்.

தேர்தல் அறிவிக்கப்பட்ட 61 இடங்களில் 42 இடங்கள் போட்டியில்லாமல் நிரப்பப்பட்டன. போட்டி நடந்த 19 இடங்களில் பாஜக எட்டு இடங்களிலும், காங்கிரஸ் கட்சி நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. 

பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெற்ற 61 உறுப்பினர்களில் 17 பேர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். 15 பேர் பாஜகவினர். இந்த சுற்றுத் தேர்தலுக்குப் பிறகு பாஜக பெற்றிருக்கும் 86 இடங்கள்தான், மாநிலங்களவையில் இதுவரை அந்தக் கட்சி பெற்றிருக்கும் மிக அதிகமான இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எதிர்பார்த்தது போலவே, கர்நாடகத்திலிருந்து தேவெ கௌடாவும், மல்லிகார்ஜுன கார்கேயும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதேபோல, ஜோதிராதித்ய சிந்தியாவும், திக்விஜய் சிங்கும் மத்தியப் பிரதேசத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். பெருந்தலைகளான இந்த நான்கு பேருமே மக்களவைத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டவர்கள்.

ராஜஸ்தானிலுள்ள மூன்று இடங்களில் இரண்டை காங்கிரஸூம், ஒன்றை பாஜகவும் கைப்பற்றின. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் வெற்றி பெற்றிருக்கிறார்; அங்கு பாஜக ஓர் இடத்தில் வெற்றி பெற்றிருக்கிறது. மேகாலயத்தில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான தேசிய மக்கள் கட்சி வெற்றி பெற்றிருக்கிறது. மணிப்பூரில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்ட மகாராஜா லெய்ஷம்பா சனஜாவோபா தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

மாநிலங்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, கட்சித் தாவல் தடைச் சட்டம் உறுப்பினர்களைக் கட்டுப்படுத்தாது. உறுப்பினர்களுக்கு வாக்களிக்காமல் இருக்கும் உரிமை உண்டு. அதே நேரத்தில், வாக்குப் பதிவுக்கு முன்னால் இன்னாருக்குத்தான் வாக்களிக்கிறோம் என்பதைக் கட்சிக் கொறடாவிடம் காண்பித்தாக வேண்டும். சுயேச்சை உறுப்பினர்களுக்கு மட்டும்தான் இதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்த மாநிலங்களவைக்கான சுற்றில், மிக அதிகமான எதிர்பார்ப்பு ராஜஸ்தானில் குவிந்திருந்தது. ஆளுங்கட்சி உறுப்பினர்கள் விலைபோய்விடக் கூடாது என்பதில் முதல்வர் அசோக் கெலாட் ஆரம்பம் முதலே கவனமாக இருந்தார். கேளிக்கை விடுதி ஒன்றுக்கு அனைத்து உறுப்பினர்களையும் அழைத்துச் சென்று, அவர்களுடன் தங்கிவிட்டார் முதல்வர் கெலாட். விளைவு? மூன்று இடங்களில் இரண்டு இடங்களை ஆளும் காங்கிரஸ் கைப்பற்றியது.

குஜராத்தில் தனது ஆதரவாளரான சுயேச்சை உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானியைச் சேர்க்காமலேயே, எதிர்க்கட்சியான காங்கிரஸூக்கு 73 உறுப்பினர்கள் இருந்தார்கள். தேர்தல் நடக்கும் நான்கு இடங்களில் இரண்டு இடங்களைக் கைப்பற்ற 70 உறுப்பினர்களின் ஆதரவு போதும். சற்றும் எதிர்பாராத வகையில் எட்டு உறுப்பினர்கள் பதவி விலகியபோது, காங்கிரஸ் அதிர்ந்தது. அச்சமடைந்த காங்கிரஸ் தனது எஞ்சிய உறுப்பினர்களுடன் ராஜஸ்
தானில் உள்ள கேளிக்கை விடுதியில் தஞ்சம் புகுந்தது. என்ன செய்து என்ன பலன்? குதிரைகள் ஓடிவிட்ட பிறகு லாயத்தைப் பூட்டிய கதைதான். நான்கில் மூன்று இடங்களில் பாஜகவும், ஓர் இடத்தை காங்கிரஸூம் கைப்பற்றி முடிவுரை எழுதப்பட்டது.

பத்து மாநிலங்களில் நடந்த மாநிலங்களவைக்கான தேர்தல் முடிவுகள் காங்கிரஸூக்கு சற்று ஆறுதலையும், பாஜகவுக்கு முன்பைவிட பலத்தையும் வழங்கியிருக்கின்றன. இனிமேல் மசோதாக்களை நிறைவேற்றிக் கொள்வதில் ஆளும் கூட்டணிக்குப் பெரிய அளவிலான தடங்கல்கள் எதுவும் இருக்க வாய்ப்பில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com