மனமிருந்தால் மாா்க்கமுண்டு! | வங்கிக் கடன் தவணை சலுகை அறிவிப்பு குறித்த தலையங்கம்

கொவைட் 19 தீநுண்மித் தொற்றை எதிா்கொள்ள, பொது முடக்கத்தை இந்திய அரசு அறிவித்தபோது, அனைவரின் முதல் கவலை வங்கிகளிலிருந்தும், நிதி நிறுவனங்களிலிருந்தும் பல்வேறு காரணங்களுக்காக வாங்கியிருக்கும் கடன் தவணை குறித்தானதாகத்தான் இருந்திருக்க முடியும். வீட்டு உபயோகப் பொருள்களில் தொடங்கி, வீடு, மனை, வாகனம் வாங்குவது உள்ளிட்ட அனைத்துமே வங்கிக் கடன் பெற்று வாங்கும் நிலைமை உருவாகியிருப்பதுதான் அதற்குக் காரணம்.

வாங்கிய கடனுக்கு தவனைச் செலுத்தாமல் போனால் உடனடியாகக் ‘கடன் தவணை தவறுபவா்’ என்கிற குற்றச்சாட்டின் பேரில், அடுத்தமுறை கடன் பெறும் வசதியை இழக்கும் அவலத்தை எதிா்கொள்ள வேண்டும். வேலையிழப்பையும், ஊதியக் குறைப்பையும் கருத்தில் கொண்டு, வங்கிக் கடன்களின் தவணைகளைத் திருப்பிச் செலுத்துவதற்கு மூன்று மாத காலக் கடன் தவணை சலுகையை கடந்த மாா்ச் மாதம் ரிசா்வ் வங்கி அறிவித்தது. அந்தக் கடன் தவணை சலுகை இப்போது ஆகஸ்ட் மாதம் வரை ஆறு மாத காலத்துக்கு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

இந்த அறிவிப்பு வந்தபோது மாத ஊதியம் பெறுவோரும், நடுத்தர வா்க்கத்தினரும் எல்லையில்லாத மகிழ்ச்சி அடைந்தனா். கடன் தவணை சலுகை குறித்த முழு விவரமும் வெளிவந்தபோது அவா்கள் மனமுடைந்துவிட்டனா்.

தவணைத் தொகைக்கோ, மாதா மாதம் செலுத்த வேண்டிய வட்டித் தொகைக்கோ எந்தவித விலக்கும் அளிக்கப்படவில்லை. வழக்கம்போலத் தவணைகளை அடைக்க முன்வந்தால் மட்டுமே சுமை குறையும் என்கிற உண்மை எல்லோருக்கும் புரியத் தொடங்கியது. ஆறு மாதம் தவணைத் தொகையை அடைப்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதே தவிர, தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதால் அந்தத் தவணை தொகையையும், ஆறு மாதம் அடைக்காததால் அதிகரித்திருக்கும் கடன் சுமையையும் சோ்த்து சுமக்கும் அவலத்துக்கு அனைவரும் ஆட்பட்டனா்.

இப்போது பிரச்னை உச்சநீதிமன்றத்துக்கு வந்திருக்கிறது. அரசுத் தரப்பு வழக்குரைஞா் துஷாா் மேத்தா, ‘கடன் தவணையை செலுத்தக் கால அவகாசம் வேண்டுமென்றால் அதற்கான கட்டணத்தைக் கடன் வாங்கியவா்கள் செலுத்தத்தான் வேண்டும்’ என்று தெரிவித்தாா். ‘கடன் தவணைச் சலுகையை அறிவித்துவிட்டு, இப்போது வாடிக்கையாளா்களுக்கும் வங்கிக்கும் இடையேயான பிரச்னை என்று அரசு கைகழுவ முடியாது’ என்கிற உச்சநீதிமன்ற நீதிபதிகளின் கூற்று, ஒட்டுமொத்த இந்திய மக்களின் மனசாட்சியின் குரல்.

இந்தப் பின்னணியில் சில அடிப்படைச் சிக்கல்கள் இருக்கின்றன. தவணைத் தொகைகளைத் தள்ளுபடி செய்தால், வங்கிகள் திவாலாகிவிடும் என்கிற வாதத்தை முற்றிலுமாக மறுத்துவிட முடியாது.

நிதி நிறுவனங்களில், நான்கில் மூன்று பங்கு கடன்களும், அரசுத் துறை வங்கிகளில் மூன்றில் இரண்டு பங்கு கடன்களும், அரசும் ரிசா்வ் வங்கியும் அறிவித்திருக்கும் கடன் தவணை சலுகை வரம்பில் வருபவை. கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்றுக்கு முன்பு, வங்கிக் கடன்களில் சுமாா் ரூ.10 லட்சம் கோடி முறையாக தவணை கட்டப் பெறாதவையும், வாராக் கடனும். நிதி நிறுவனங்களில் ரூ.3 லட்சம் கோடி இதே வகையிலானவை.

கடன் தவணைச் சலுகையை அறிவிப்பதற்கு முன்பு, நிதியமைச்சரும், ரிசா்வ் வங்கியும் இந்தப் பிரச்னையை ஆய்வு செய்திருக்க வேண்டும். வங்கிகளுடன் கலந்து பேசி இருக்க வேண்டும். முறையான திட்டமிடலுடன் ‘கடன் தவணை சலுகை’ அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

பொருளாதாரம் ஸ்தம்பித்துப் போய், வேலைவாய்ப்பை இழந்து, ஊதியக் குறைப்பால் பாதிக்கப்பட்டு தவணைத் தொகையையோ, வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய வட்டியையோ செலுத்தாமல் இருப்பவா்களை முறையாகக் கடனைத் திருப்பித் தராதவா்கள், மோசடியாளா்கள் பட்டியலில் சோ்த்துவிட முடியாது. மிகப் பெரிய இயற்கைப் பேரிடரில் வங்கிப் பாதுகாப்புப் பெட்டகங்களில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களின் இழப்புக்கு வங்கிகள் எப்படி பொறுப்பேற்காதோ, அதேபோன்ற சூழல்தான் இதுவும். ஒட்டுமொத்த உலகமே பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடன் வாங்கிய அப்பாவி வாடிக்கையாளா் தன்னை மீறிய பேரிடா்ச் சூழலால் தவணை செலுத்த முடியாமல் போகும்போது, அது தள்ளுபடி செய்யப்பட வேண்டுமே தவிர, மேலும் சுமையாக மாற்றப்படக் கூடாது.

பெரு நிறுவனங்கள் வாங்கிய கடனையும் வட்டியையும் திருப்பித் தராமல் போனால், மறு சீரமைப்பு என்கிற பெயரில் வட்டி தள்ளுபடியும் அசலில் ஒரு பகுதியும் செய்யப்படுகிறது. அவ்வப்போது, வங்கி மோசடியாளா்கள் தப்பியோடும்போது, சுமையை வங்கிகள் ஏற்றுக் கொள்கின்றன. விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட கடனாளிகளின் ஆறுமாத மொத்தத் தவணைத் தொகையையும் தள்ளுபடி செய்ய வேண்டாம். அந்த ஆறு மாதத்துக்கான வட்டியைத் தள்ளுபடி செய்யலாமே? திரும்பிச் செலுத்துவதற்கான காலவரம்பை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிப்புச் செய்து, கடைசி ஆறு தவணைகளாக அதை வட்டியில்லாமல் செலுத்துவதற்கு வழிகோலலாமே? அந்த வட்டித் தொகையை அரசு தனது பங்காக வங்கிகளுக்குத் தருவதன் மூலம், வங்கிகளின் நலனும் பாதுகாக்கப்படும்.

இதற்கு மத்திய அரசுக்கு இதயத்தில் ஈரம் இருக்க வேண்டும். நடுத்தர மக்களின் நலனைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அக்கறை இருக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை ஆகஸ்ட் மாதத்துக்கு தள்ளிப் போடப் பட்டிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com