முதிர்ச்சியின்மை! | தேசப்பற்று குறித்து கட்சிகளுக்கு பதிவு செய்யும் தலையங்கம்

தேசப்பற்று எது என்பது காங்கிரஸோ, பாஜகவோ நிர்ணயிப்பது அல்ல. அதை முதலில் இரண்டு கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும்.


உலகில் முழுமையான கருத்து சுதந்திரத்துடன் கூடிய எத்தனையோ ஜனநாயக நாடுகள் இருக்கின்றன. ஆனால், எந்தவொரு நாட்டிலும் நமது இந்தியாவைப்போல பாதுகாப்புப் பிரச்னை அரசியல் விவாதமாவதில்லை. 

கார்கில் மோதலுக்குப் பிறகு, இப்போது இந்தியா மிக மோசமான தேசியப் பாதுகாப்புப் பிரச்னையை எதிர்கொள்கிறது. சீன ராணுவம்  அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டிருக்கிறது. எல்லையில் இந்திய- சீனப் படைகள் போருக்குத் தயாராகக் குவிக்கப்பட்டிருக்கின்றன. 

இந்தியா எதிர்கொள்ளும் சவால் எல்லையில் மட்டுமாக இருந்தால் பரவாயில்லை. ஆனால்,  உள்நாட்டுப் பிரச்னைகள் வேறு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உயர்ந்திருக்கின்றன. பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. வேலையில்லாத் திண்டாட்டமும், வேலை இழப்புகளும் கோடிக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கின்றன. போதாக்குறைக்கு, அடங்க மறுக்கும் கொவைட் -  19 தீநுண்மித் தொற்றின் வீரியம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

இப்படிப்பட்ட பின்னணியில், நமது அரசியல் கட்சிகளும், அரசியல்வாதிகளும் பொறுப்புணர்வையும், முதிர்ச்சியையும் வெளிப்படுத்த வேண்டும் என்றுதான் நாம் எதிர்பார்க்கிறோம். இதற்கு முன்னால் பேரிடர்கள் சூழ்ந்தபோதெல்லாம், இந்தியா தனது கருத்து வேறுபாடுகளை மறந்து ஒரு தேசமாக இணைந்து நின்றிருக்கிறது.  ஆளும் பாஜகவும், எதிர்க்கட்சியான காங்கிரஸூம் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்துவதைப் பார்த்து, சீன ராணுவமும், சீன அரசும் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமே நம்மை எள்ளி நகையாடும் என்பதை அவர்கள் உணர்ந்ததாகவே தெரியவில்லை.

பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அரசு எதிர்கொள்ளும் விதம் குறித்து  நியாயமான கேள்விகளோ, குற்றச்சாட்டுகளோ எழுப்பப்பட்டால், அதைப் புரிந்துகொள்ள முடியும். அதேபோல, இதற்கு முன்னால் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டபோது அதை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி கையாண்ட விதங்களைச் சுட்டிக்காட்டி பாஜக விமர்சித்தால், அதையும் ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால், இரண்டு கட்சிகளும் அதையெல்லாம்  விட்டுவிட்டு அடுத்தவரின் தேசப்பற்றை கேள்வி கேட்பது விசித்திரமாக இருக்கிறது.

தேசப்பற்று எது என்பது காங்கிரஸோ, பாஜகவோ நிர்ணயிப்பது அல்ல. அதை முதலில் இரண்டு கட்சிகளும் புரிந்துகொள்ள வேண்டும். நமது தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் காணப்படுவதுபோல, தனிநபர் விரோதத்தின் அல்லது எதிர்ப்பின் அடிப்படையிலான அரசியல் தேசிய அளவிலும் ஏற்படுகிறது என்பது மிகமிக ஆபத்து. 

நரேந்திர மோடி என்கிற தனி மனிதர் மீதான ஆத்திரமும், வெறுப்பும் எதிர்க்கட்சி அரசியலின் மையக் கருத்தாகவும்,  சோனியா காந்தியும் நேரு குடும்பமும் பாஜகவின் காழ்ப்புணர்ச்சிக்கும் தாக்குதலுக்கும் இலக்காகவும் மாறி இருக்கின்றன. இந்தியப் பண்பாட்டு விழுமியங்களுக்காகக் குரல் கொடுக்கும் பாரதிய ஜனதா கட்சி அத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது. அதேபோல, சுதந்திர இந்தியாவில் பெரும்பாலான காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்த காங்கிரஸ் கட்சி, தேசியப் பாதுகாப்பு குறித்த புரிதல் இல்லாமல் செயல்படுவது வருத்தமாக இருக்கிறது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு சீனா நன்கொடை வழங்கி இருக்கிறது என்பது பாஜகவின் குற்றச்சாட்டு. அப்படி நன்கொடை பெற்றதால்தான் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மிகப்பெரிய வர்த்தகப் பற்றாக்குறை ஏற்படுவதைக் காங்கிரஸ் கட்சி அனுமதித்தது என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி பதவியில் இருக்கும்போது,  2006- இல் ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு 3,00,000 அமெரிக்க டாலர்களை சீன கம்யூனிஸ்ட் கட்சி நன்கொடை வழங்கி இருக்கிறது என்றும், 2008- இல் கருத்துப் பரிமாற்றத்திற்காக காங்கிரஸ் கட்சியும், சீன கம்யூனிஸ்ட் கட்சியும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டது என்றும், பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாதும் குற்றம் சாட்டுகிறார்கள். வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்று சட்டம் -  1975- க்கு விரோதமானதாக அந்த நன்கொடைகள் இருந்திருக்கலாம். 

அன்றைய ஆளும்கட்சி அதை, சட்டை செய்யாமல்கூட இருந்திருக்கலாம். 2014, 2019 தேர்தல்களின்போது பாஜக இந்தப் பிரச்னையை ஏன் எழுப்பவில்லை? ஏறத்தாழ ஆறு ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் இது குறித்த விசாரணையையோ, நடவடிக்கையையோ ஏன் முடுக்கிவிடவில்லை? இப்போது எழுப்புவது, ஆளும் கட்சியின் திசைதிருப்பும் முயற்சியாகத்தான் தெரிகிறது.

அதேபோல, பாஜகவைச் சேர்ந்த பல்வேறு குழுக்கள் சீனாவுக்குச் சென்று அங்குள்ள கட்சித் தலைவர்களை சந்தித்ததன் பின்னணியில், சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன் பாஜகவுக்கு ரகசியத் தொடர்பு என்கிற காங்கிரஸின் குற்றச்சாட்டு சிரிப்பை வரவழைக்கிறது.  கொவைட் -  19 நோய்த் தொற்றை எதிர்கொள்ள அறிவிக்கப்பட்ட "பிஎம்- கேர்ஸ்' நிவாரண நிதிக்கு இந்தியாவில் இயங்கும்  சீன நிறுவனங்கள் நன்கொடை வழங்கியிருப்பதை காங்கிரஸ் 
குறை கூறுகிறது.

பிரதமர் நிவாரண நிதிக்கும்  "பிஎம்- கேர்ஸ்' நிவாரண நிதிக்கும் இந்தியாவில் இயங்கும் பல்வேறு நிறுவனங்களும், தனி நபரும் நன்கொடை வழங்குவதை வெளிநாட்டிலிருந்து ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு நன்கொடை  பெறுவதுடன் இணைத்துப் பேசுவது விவரமில்லாத பேச்சு. 

பாஜகவும் சரி, காங்கிரஸூம் சரி, ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.  அரசியலுக்கான நேரமல்ல இது. தேர்தலுக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் இருக்கின்றன. எல்லையில் எதிரி காத்துக் கொண்டிருக்கும் வேளையில் அரசியல் முதிர்ச்சியுடன் செயல்படுவதுதான்  நிஜமான "தேசப்பற்று'!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com