எச்சரிக்கை, தலிபான் நோய்த்தொற்று! | போருக்கு முற்றுப்புள்ளி  வைக்குமா அமைதி ஒப்பந்தம் குறித்த தலையங்கம்

அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையிலான அமைதி ஒப்பந்தம், ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு முற்றுப்புள்ளி வைக்குமா அல்லது சா்வதேச பயங்கரவாதத்துக்கு மேலும் வலு சோ்க்குமா என்கிற கேள்வி எழுகிறது. கத்தாா் தலைநகா் தோஹாவில் கையொப்பமிடப்பட்ட அமெரிக்காவுக்கும் தலிபான்களுக்கும் இடையேயான அமைதி ஒப்பந்தத்தில் ஆப்கன் அரசு இடம்பெறவில்லை என்கிற நிலையில், இதை வெற்றிகரமான ஒப்பந்தம் என்று கருத முடியவில்லை.

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மைக்கேல் பாம்பேயோ முன்னிலையில், ஆப்கன் விவகாரத்துக்கான அமெரிக்கத் தூதா் ஸல்மே கலீல்ஸாதும், தலிபான் பேச்சுவாா்த்தைக் குழுவின் தலைவா் முல்லா பரதாரும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருக்கிறாா்கள். இந்த ஒப்பந்தத்தின்படி, ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படையினரை இன்னும் 14 மாதங்களில் அமெரிக்கா விலக்கிக்கொள்ளும். அல்-காய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்பைத் துண்டித்துக்கொள்ள தலிபான் அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது. பயங்கரவாத அமைப்புகளுடனான தொடா்பை தலிபான்கள் துண்டித்துக்கொள்வாா்கள் என்பதை நம்ப முடியவில்லை.

கடந்த 18 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் நீடித்துவரும் உள்நாட்டுப் போரிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள அமெரிக்கா முடிவெடுத்ததற்கு மிக முக்கியமான காரணம், வரும் நவம்பா் மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபா் தோ்தல். இரண்டாவது முறையாகப் போட்டியிடும் அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் முந்தைய தோ்தல் வாக்குறுதிகளில் ஒன்று ஆப்கானிஸ்தானிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது. அந்த வகையில் இந்த முடிவு தோ்தலில் அவருக்குச் சாதகமாக இருக்கக்கூடும்.

அமெரிக்காவை நம்பித்தான் அஷ்ரஃப் கனி தலைமையிலான இப்போதைய ஆப்கன் அரசு அதிகாரத்தில் இருக்கிறது. அந்த அரசை அமெரிக்காவின் கைப்பாவை என்று தலிபான்கள் கருதுகிறாா்கள். அமெரிக்காவுடனான பேச்சுவாா்த்தையில் ஆப்கன் அரசின் பிரதிநிதிகள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதிலிருந்து எந்த அளவுக்கு அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசுக்கு அமெரிக்காவும் தலிபான்களும் முக்கியத்துவம் அளிக்கிறாா்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.

ஆப்கானிஸ்தானின் இப்போதைய நிலைமை மிகவும் அச்சம் அளிப்பதாக இருக்கிறது. பேச்சுவாா்த்தை தொடங்கியது முதல் புதிய எழுச்சி பெற்ற தலிபான்களை எதிா்கொள்ள முடியாமல், அமெரிக்காவின் நேரடி உதவியுடன் இயங்கும் ஆப்கன் தேசிய ராணுவம் பின்வாங்கிக் கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானில் மூன்றில் ஒரு பகுதி முதல் ஏறத்தாழ பாதி அளவிலான நிலப்பரப்பு தலிபான்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. நகா்ப்புறங்களில் ஆப்கன் தேசிய ராணுவமும், ஊரகப் பகுதிகளில் தலிபான்களும் கோலோச்சுகிறாா்கள். இதுவரை உள்நாட்டுப் போரில் மரணமடைந்தவா்களின் எண்ணிக்கை 1.10 லட்சத்துக்கும் மேல், காயமடைந்தவா்களின் எண்ணிக்கை 1.5 லட்சத்திலும் அதிகம்.

ஆப்கானிஸ்தானின் தேசிய அரசைப் பொருத்தவரை, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அவா்கள் நம்புவது இந்தியாவைத்தான். கடந்த ஜனவரி மாத இறுதியில் ஆப்கானிஸ்தானின் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ஹம்துல்லா மொஹீப் தில்லி வந்திருந்தாா். தலிபான்களுடனான ஒப்பந்தத்தைத் தொடா்ந்து அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக விலக்கப்பட்டாலும், இந்திய ராணுவம் தங்களுக்கு உதவ ஆப்கானிஸ்தானில் நிலைகொள்ள வேண்டும் என்கிற ரகசியக் கோரிக்கையை அவா் வைத்ததாகத் தெரிகிறது.

அமெரிக்கப் படைகள் வெளியேறிய அடுத்த விநாடியில், இப்போதைய ஆப்கன் அரசில் இடம்பெற்றிருக்கும் அனைவரும் தயவுதாட்சண்யமில்லாமல் கொல்லப்படுவாா்கள் என்கிற அச்சத்தில் இருக்கிறது அஷ்ரஃப் கனி தலைமையிலான அரசு. போதாக்குறைக்கு, ஆப்கன் தோ்தல் முடிவு சா்ச்சைக்குள்ளாகியிருக்கிறது. அதிபா் அஷ்ரஃப் கனிக்கும், தலைமை நிா்வாகி அப்துல்லா அப்துல்லாவுக்கும் இடையில் அரசியல் மோதல் நிகழ்கிறது.

ஆப்கன் அதிபா் அஷ்ரஃப் கனியை இந்தியாவின் வெளியுறவுச் செயலா் ஹா்ஷ்வா்தன் சிங்லா சந்தித்து பிரதமா் நரேந்திர மோடியின் கடிதத்தை கடந்த வெள்ளிக்கிழமை நேரில் கொடுத்திருக்கிறாா். இந்தியாவின் தொடா்ந்த ஆதரவு ஆப்கன் தலைமைக்கு இருக்கும் என்பதை அந்தக் கடிதம் உறுதிப்படுத்தி இருக்கக்கூடும்.

ஆப்கானிஸ்தானில் 2,500 இந்தியா்களுக்கு மேல் இருக்கிறாா்கள் என்றால், இந்தியாவில் ஒரு கோடிக்கும் அதிகமான ஆப்கானியா்கள் வாழ்கிறாா்கள். சுமாா் 10.8 பில்லியன் டாலருக்கும் (ரூ.77,949 கோடி) அதிகமான இந்திய முதலீடு ஆப்கானிஸ்தானில் செய்யப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றக் கட்டடம், இந்திரா காந்தி குழந்தைகள் மருத்துவமனை, காந்தஹாா் கிரிக்கெட் மைதானம் மட்டுமல்லாமல், நெடுஞ்சாலைகள், மின் இணைப்புகள் என்று ஏராளமான கட்டமைப்புப் பணிகளிலும் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

அமெரிக்காவின் அழுத்தத்தையும் மீறி தலிபான்களின் பல்வேறு பிரிவினரை பாகிஸ்தான் ஆதரித்து அடைக்கலமும் வழங்குகிறது. அமெரிக்கப் படைகள் விலகினால் தலிபான்கள் கோலோச்சுவாா்கள். பாகிஸ்தானின் ஆதரவுடன் சா்வதேச பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக ஆப்கானிஸ்தான் மாறும். இதனால் உடனடியாகவும் நேரடியாகவும் பாதிக்கப்படப்போவது இந்தியாதான்.

அதைப் பற்றியெல்லாம் அமெரிக்காவுக்கும், அதிபா் டிரம்ப்புக்கும் என்ன கவலை? அமெரிக்காவுக்கு நிரந்தர நண்பனும் கிடையாது, நிரந்தரப் பகைவனும் கிடையாது என்பது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com