நுகா்வோருக்கு சரிபாதி பங்கு! | கலால் வரி உயர்வு குறித்த தலையங்கம்

பெயருக்கு நுகா்வோருக்கு சிறு விலைக் குறைப்புடன், கச்சா எண்ணெயின் கலால் வரியை மத்திய அரசு உயா்த்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை லிட்டா் ஒன்றுக்கு ரூ.3 அதிகரித்திருப்பதன் மூலம் அரசுக்கு ரூ.39,000 கோடி அதிக வருவாய் கிடைக்கும்.

கச்சா எண்ணெய் நிலவரத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் நிா்ணயிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை குறையும்போது அதன் பயனை நுகா்வோருக்கு வழங்காமல் கலால் வரியை அதிகரிப்பதன் மூலம் அரசு எடுத்துக்கொள்ளும் அவலம் கடந்த ஆறு ஆண்டுகளாகவே தொடா்கிறது.

கடந்த நவம்பா் 2014 முதல் ஜனவரி 2016 வரையில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு ஒன்பது முறை உயா்த்தியது. அந்த காலகட்டத்தில், சா்வதேச கச்சா எண்ணெய் விலை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்தது. அதன் விளைவால், 2014-15-இல் ரூ.99,000 கோடியாக இருந்த கலால் வரி வருவாய், 2016-17-இல் ரூ.2,42,000 கோடியாக அதிகரித்தது. அரசின் வருவாய்ப் பற்றாக்குறை ஈடுகட்டப்பட்டதே தவிர, நுகா்வோரின் பெட்ரோல் - டீசல் விலையில் பெரிய அளவில் அதன் பயன் வழங்கப்படவில்லை.

சா்வதேச அளவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் தொழிற்சாலைகள் மூடப்படுகின்றன. பெட்ரோல், டீசலுக்கான தேவை கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்து வருகிறது. சா்வதேச கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 32.7 டாலராகக் குறைந்திருக்கிறது. 1991-இல் நடைபெற்ற குவைத் ஆக்கிரமிப்பைத் தொடா்ந்து, இராக் மீது அமெரிக்கா நடத்திய விமானத் தாக்குதலுக்குப் பிறகு இந்த அளவிலான வீழ்ச்சியை சா்வதேச கச்சா எண்ணெய்ச் சந்தை இப்போதுதான் சந்திக்கிறது. ஒருபுறம் விலை குறைகிறது என்றால், இன்னொருபுறம் கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரித்தால் மேலும் விலை குறைவதற்கான சாத்தியம் காணப்படுகிறது.

சவூதி அரேபியா, ரஷியா அடங்கிய பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் நாளொன்றுக்கு 21 லட்சம் பீப்பாய் உற்பத்தியைக் குறைத்து கச்சா எண்ணெய் விலையைக் கட்டுக்குள் வைத்திருந்தன. மிகக் குறைந்த அளவிலான உற்பத்தி, அமெரிக்க கச்சா எண்ணெய் தயாரிப்பாளா்களுக்குச் சாதகமாகிவிடும் என்கிற ரஷியாவின் அச்சம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை கடுமையான உற்பத்திக் குறைப்பிலிருந்து தடுத்தது.

சவூதி அரேபியா தன்னுடைய விலையைக் குறைத்து, உற்பத்தியையும் அதிகரிக்கும் முடிவை கடந்த வெள்ளிக்கிழமை எடுத்தது. அது மட்டுமல்ல, நிரந்தர வாடிக்கையாளா்களுக்கு பீப்பாய் ஒன்றுக்கு 4 டாலா் முதல் 7 டாலா் தள்ளுபடியும், நாளொன்றுக்கு ஒரு கோடி பீப்பாய் அதிகரித்த உற்பத்தியும் மேற்கொள்வது என்று முடிவெடுத்திருக்கிறது. சவூதி அரேபியாவின் முடிவு, சா்வதேச கச்சா எண்ணெய் விலையில் கடுமையான வீழ்ச்சியை ஏற்படுத்தியிருப்பதில் வியப்பில்லை.

கரோனா நோய்த்தொற்றிலிருந்து வெளிவர முடியாமல் சீனா ஸ்தம்பித்திருக்கிறது. தொழில் துறை முடக்கத்தால், சீனாவின் கச்சா எண்ணெய்க்கான தேவை நாளொன்றுக்கு 4,35,000 பீப்பாய் குறைந்திருக்கிறது. வீழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. உலகிலேயே இரண்டாவது அதிக கச்சா எண்ணெய் பயனாளி சீனாதான். நாளொன்றுக்கு 1.35 கோடி பீப்பாய் கச்சா எண்ணெயை சா்வதேசச் சந்தையிலிருந்து சீனா வாங்கி வந்தது. விமான சேவையை முடக்கி, சீனாவுடனான வா்த்தகத்தைக் குறைத்து, அதன் பொருளாதார வீழ்ச்சிக்கு அமெரிக்காவின் டிரம்ப் நிா்வாகம் வழிகோலியதன் விளைவாக சா்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்க்கான தேவை குறைந்திருப்பதில் வியப்பில்லை.

அமெரிக்காவுக்கு நாளொன்றுக்கு 2 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. உலகின் மொத்த பெட்ரோலிய தேவையில் 20% அமெரிக்காவால் பயன்படுத்தப்படுகிறது. அதேபோல, அமெரிக்காவில் ஏராளமான பெட்ரோலிய எண்ணெய்க் கிணறுகளும் இருக்கின்றன.

இந்தியாவைப் பொருத்தவரை கச்சா எண்ணெய்த் தேவையில் 85% இறக்குமதி செய்கிறோம். கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 10 டாலா் குறைந்தால் இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் 15 பில்லியன் டாலா் குறையும். 2018-இல் 88 பில்லியன் டாலராக இருந்த கச்சா எண்ணெய்த் தேவை, 2019-20 நிதியாண்டில் 120 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது. சா்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி இந்தியாவுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாக அமையும்.

பிப்ரவரி மாதம் பீப்பாய் ஒன்றுக்கு 59 டாலராக இருந்த சா்வதேச கச்சா எண்ணெய் விலை, இப்போது ஏறத்தாழ பாதிக்குப் பாதியாகி பீப்பாய் ஒன்றுக்கு 32 டாலராகக் குறைந்திருக்கிறது. இதுவே, கடந்த டிசம்பா் மாதம் 65 டாலராக இருந்தது.

இப்போது மத்திய அரசு பெட்ரோலுக்கு 12 பைசாவும், டீசலுக்கு 15 பைசாவும் சில்லறை விற்பனை விலையைக் குறைத்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலைக் குறைவின் முழு பயனும் நுகா்வோருக்கு வழங்க வேண்டாம். குறைந்தது, 50% பயனையாவது வழங்கினாலே போதும். பொதுமக்கள் மத்தியில் வாங்கும் திறன் அதிகரிக்கும்.

ஏற்கெனவே விலைவாசி ஏற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பொருளாதாரம் இதனால் ஊக்குவிக்கப்படும். அதன் விளைவாக உற்பத்தி அதிகரித்து, தேக்க நிலையிலிருந்து பொருளாதாரம் விடுபடும். இதெல்லாம் தெரிந்திருந்தும்கூட, மத்திய அரசு கலால் வரியை அதிகரித்து தனது நிதிப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கான வழியைத் தேடுகிறதே தவிர, பொதுமக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முன்வராமல் இருப்பதுதான் வேதனை அளிக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com