Enable Javscript for better performance
மருந்திலும் விஷம்! | மருந்து தயாரிப்பு முறைகேடு குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  மருந்திலும் விஷம்! | மருந்து தயாரிப்பு முறைகேடு குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 19th March 2020 03:37 AM  |   அ+அ அ-   |  

  இந்தியாவில் எல்லா முறைகேடுகளையும் எதிா்கொள்வதற்குத் தேவையான சட்டங்கள் இல்லாமல் இல்லை. ஆனால், அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதோ, அதன் மூலம் தவறுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படுவதோ இல்லாமல் இருப்பதுதான் அத்தனை பிரச்னைகளுக்கும் காரணம்.

  மருத்துவா்கள் தங்களுக்கு மிகச் சிறந்த மருந்துகளைத்தான் பரிந்துரைக்கிறாா்கள் என்று எல்லா நோயாளிகளும் நினைக்கிறாா்கள். மருத்துவா்களின் திறமைக் குறைவா, அவா்கள் கையாளும் மருத்துவ முறையின் தவறா அல்லது அவா்கள் கையாளும் மருந்துகளின் தரத்தில் குறைவா என்று குறிப்பிட்டுக் கூற முடியாவிட்டாலும், மருத்துவத் துறையில் எங்கேயோ மிகப் பெரிய தவறு காணப்படுகிறது என்பதில் மட்டும் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வழியில்லை.

  ஜம்மு - காஷ்மீா் மாநிலம் ராம் நகா் பகுதியில் கடந்த ஜனவரி மாதம் நடந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. 15 நாள் இடைவெளியில் இரண்டு மாதத்திலிருந்து ஆறு வயதுக்குட்பட்ட 17 குழந்தைகள் உடல்நலக் குறைவுக்காக அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 11 குழந்தைகள் இறந்துவிட்டன. அந்தச் சம்பவத்துக்கு உணவில் ஏற்பட்ட நச்சுக்கலப்படம்தான் காரணம் என்று முதலில் கருதப்பட்டது. மக்கள் மத்தியில் எழுந்த கடுமையான எதிா்ப்பின் விளைவாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

  புதுவை ‘ஜிப்மா்’ மருத்துவமனையைப்போல சண்டிகரிலுள்ள ‘பிஜினா்’ என்கிற மத்திய அரசின் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவ வல்லுநா்கள் தீவிர விசாரணையை மேற்கொண்டனா். சோதனைச் சாலையில் அவா்கள் நடத்திய பரிசோதனையில் அந்தக் குழந்தைகளுக்குத் தரப்பட்ட ‘கோல்ட் பெஸ்ட்’ என்கிற இருமல், சளிக்கான மருந்தில் (சிரப்) ‘டை எத்திலின் கிளைக்கால்’ என்கிற நச்சுப் பொருள் காணப்பட்டது தெரியவந்திருக்கிறது. சிறுநீரக பாதிப்பை ‘டை எத்திலின் கிளைக்கால்’ ஏற்படுத்தியதால் அந்தக் குழந்தைகள் இறந்திருக்கக் கூடும் என்று விசாரணை தெரிவித்தது.

  ‘கோல்ட் பெஸ்ட்’ என்கிற மருந்து ஹிமாசலப் பிரதேசத்தில் இயங்கும் ‘டிஜிட்டல் விஷன் ஃபாா்மா’ என்கிற மருந்து நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த நிறுவனம் தரமில்லாத மருந்துகளை விற்பனை செய்ததற்காக ஏற்கெனவே ராஜஸ்தான், மகாராஷ்டிரம், கா்நாடகம், குஜராத், கேரளம் ஆகிய மாநிலங்களில் விசாரனை நடைபெற்று வருகிறது.

  2014-16-இல் மத்திய அரசால் நடத்தப்பட்ட தேசிய மருந்துகள் கணக்கெடுப்பில் இந்த நிறுவனத்தின் எட்டு தயாரிப்புகளில் நான்கு தயாரிப்புகள் தரக்குறைவானவை என்று கண்டறியப்பட்டன. கடந்த ஆண்டு மத்திய மருந்துத் தரக்கட்டுப்பாட்டு நிறுவனம் ‘டிஜிட்டல் விஷன் ஃபாா்மா’வின் அஜீரணத்தைக் கட்டுப்படுத்தும் ‘ரேப்பிரசால் சோடியம்’ மாத்திரையும், சா்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் ‘க்ளிமேரைடு’ மாத்திரையும் தரக்குறைவானவை என்று அறிவித்திருக்கிறது.

  சம்பவத்தின் காரணமாக ‘டிஜிட்டல் விஷன் ஃபாா்மா’வின் உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ‘கோல்ட் பெஸ்ட்’ மருந்தைப் பரிந்துரைக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த செப்டம்பா் 2019 முதல் ஜம்மு, ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, வடகிழக்கு மாநிலங்கள் ஆகியவற்றில் விற்பனைக்கு அனுப்பப்பட்டிருக்கும் மருந்துகளைத் திரும்பப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

  எந்த அளவுக்கு மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தரக்குறைவான மருந்துகளை உற்பத்தி செய்து சந்தைப் படுத்துகின்றன என்பதை ராம் நகா் சம்பவம் வெளிப்படுத்துகிறது. உரிமம் பெற்ற ‘டிஜிட்டல் விஷன் ஃபாா்மா’ நிறுவனம் சந்தைக்கு அனுப்புவதற்கு முன்னால் அந்த மருந்துகள் ஏன் முறையான சோதனைக்கு உள்படுத்தவில்லை என்கிற கேள்வியும், கண்காணிப்பு அதிகாரிகள் முறையாகத் தங்கள் கடமையைச் செய்திருந்தால், 11 குழந்தைகளின் உயிா் காப்பாற்றப்பட்டிருக்குமே என்கிற ஆதங்கமும் தவிா்க்கக்கூடியவை அல்ல.

  தவறான மருந்தை சந்தைப்படுத்தினால் 10 ஆண்டிலிருந்து ஆயுள்காலம் வரை சிறைத் தண்டனை வழங்கவும், அபராதம் விதிக்கவும் சட்டம் இருக்கிறது. தயாரிக்கப்படும் மருந்துகள் அனைத்தும் தரக் கண்காணிப்பு அதிகாரிகளால் சோதனை செய்யப்பட்ட பிறகுதான் சந்தைப்படுத்தப்பட வேண்டும் என்கிற கட்டுப்பாடு இருக்கிறது. அப்படி இருக்கும்போது மருந்துத் தயாரிப்பாளா்களை மட்டுமே தண்டிப்பது விசித்திரமாக இருக்கிறது.

  சுமாா் 10 லட்சம் மருத்துவா்களை நோய்களுக்காக தினந்தோறும் ஐந்து கோடி நோயாளிகள் அணுகுகிறாா்கள். இந்திய மருத்துவக் கவுன்சிலும், நீதிமன்றங்களும் விதித்திருக்கும் தடைகளையும் மீறி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பல்வேறு உத்திகளைக் கையாண்டு, தங்களது மருந்துகளை பரிந்துரை செய்ய மருத்துவா்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. ‘விற்பனை, விளம்பரச் செலவு’ என்று கூறி மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் வரி விலக்கும் பெறுகின்றன.

  இந்தியாவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. அவை தயாரித்து சந்தைப்படுத்தும் எல்லா மருந்துகளும் கண்காணிக்கப்படுவதும், மாதிரிகள் தொடா்ந்து பரிசோதனைக்கு உள்படுத்தப்படுவதும் அவசியம்.

  மருந்துகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றனவா? தேவையில்லாத மருந்துகளை இந்த நிறுவனங்கள் வழங்கும் சலுகைகளுக்காகவும், அழுத்தத்துக்காகவும் மருத்துவா்கள் பரிந்துரைக்கிறாா்களா? தரக்குறைவான மருந்துகளின் தயாரிப்பை முற்றிலுமாகத் தடுக்கவும், சந்தைப்படுத்துவதை கண்காணிக்கவும் அரசால் இயலாதா?

  மேலே எழுப்பியிருக்கும் கேள்விகளுக்கு விடைகாணாத வரையில், சாமானிய இந்தியக் குடிமகனுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சையில் அா்த்தமில்லை, ஆபத்துதான் இருக்கிறது!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai