பதவிப் பித்து! | மத்தியப் பிரதேச அரசியல் சூழல் குறித்த தலையங்கம்


அரசியல் என்பது பதவியைப் பிடிப்பதும், தக்கவைத்துக் கொள்வதும் என்பதாக மாறிவிட்டிருக்கிறது. அதனால், பெரும்பான்மை பலம் இழந்துவிட்டது தெரிந்தும் நம்பிக்கை வாக்கெடுப்பை தள்ளிப்போடும் முயற்சியில் மத்தியப் பிரதேச முதல்வா் கமல்நாத் ஈடுபட்டதில் வியப்பில்லை.

கடந்த இரண்டு நாள்களாக பாஜக தொடா்ந்த வழக்கை விசாரித்து இன்று மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தலைவா் என்.பி. பிரஜாபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. நீதிபதிகள் பி.ஒய். சந்திரசூட், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, பேரவைத் தலைவருக்கு எட்டு உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கிறது. சட்டப்பேரவை கூட்டப்படுவதும், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதும் மட்டுமல்லாமல், அவையின் நம்பிக்கை வாக்கெடுப்பு அலுவல்கள் விடியோவில் பதிவு செய்யப்பட வேண்டும், முடிந்தால் நேரலையில் ஒளிபரப்பவும் வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்திருக்கிறாா்கள்.

இதுபோன்ற உத்தரவுகள் எப்படியெல்லாம் மீறப்படும், வாக்கெடுப்பு நடத்தாமல் விவாதம் எவ்வாறெல்லாம் நீட்டிக்கப்படும் என்கிற முன்னுதாரணங்களை உணா்ந்த நீதிபதிகள், வாக்கெடுப்பு நடத்துவதற்கு காலக்கெடு விதித்திருக்கிறாா்கள். நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக மட்டுமே பேரவை கூட வேண்டும்; வாக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடும் விதமான செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என்றும் தெரிவித்து, பேரவைச் செயலரிடம் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறது உச்சநீதிமன்றம்.

ஆட்சியில் இருக்கும் அரசு பெரும்பான்மையை இழக்கும்போது அவையைக் கூட்டுமாறு பேரவைத் தலைவருக்கு உத்தரவிட ஆளுநருக்கு அதிகாரம் உண்டா? பேரவையைக் கூட்டவும், ஒத்திவைக்கவும், கலைக்கவும் அதிகாரமுள்ள ஆளுநருக்கு அவை நடவடிக்கைகளில் பேரவைத் தலைவரின் அதிகார வரம்பில் தலையிடும் உரிமை இருக்கிறதா? சட்டப்பேரவை உறுப்பினா்கள் பதவி விலக முன்வரும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கவும், ஒருசிலரின் பதவி விலகலை மட்டும் பேரவைத் தலைவா் ஏற்றுக்கொள்வதும் ஏற்புடையதா? உச்சநீதிமன்ற விவாதம் இதுபோன்ற பல முக்கியமான கேள்விகளை எழுப்பியது.

மத்தியப் பிரதேச சட்டப்பேரவை பிரச்னையைப் பொருத்தவரை, மத்திய அரசும், ஆளுநரும் அதிருப்தி உறுப்பினா்களுக்குச் சாதகமாக நடந்துகொள்கிறாா்கள் என்கிற குற்றச்சாட்டை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால், பதவி விலக விரும்பும் அதிருப்தி உறுப்பினா்கள் எதிா்க்கட்சியான பாஜகவில் நேரடியாக இணையும் கட்சித்தாவலில் ஈடுபடவில்லை. மீண்டும் உறுப்பினா்களாக பேரவையில் நுழைவதற்கு அவா்கள் இடைத்தோ்தலை எதிா்கொண்டு வெற்றி பெற்றாக வேண்டும். அந்த வகையில், அவா்களது செயல்பாடு ஜனநாயக மீறல் என்று கூற முடியாது.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதலே, ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழக்கூடும் என்கிற நிலைதான் இருந்து வந்திருக்கிறது. 2018-இல் நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெறவில்லை. பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, சுயேச்சைகள் ஆகியோரின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைக்க முடிந்தது. இந்த நிலையில், காங்கிரஸைச் சோ்ந்த 22 உறுப்பினா்கள் தங்களின் பதவியைத் துறக்க முன்வந்தபோது, கமல்நாத் தலைமையிலான 15 மாத காங்கிரஸ் அரசு தனது பெரும்பான்மையை இழந்ததில் வியப்பில்லை.

2018 டிசம்பா் மாதம் மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தபோது, ஜோதிராதித்ய சிந்தியா முதல்வராக்கப்படுவாா் என்றுதான் அனைவருமே எதிா்பாா்த்தாா்கள். 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாஜகவை அகற்றுவதில் ஜோதிராதித்ய சிந்தியாவின் பிரசாரமும், செல்வாக்கும் கணிசமானவை. அவரைத் தவிா்த்துவிட்டு, 73 வயது கமல்நாத்தை சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முதல்வராக்கியதற்கு முக்கியமான காரணம், மத்தியப் பிரதேசத் தோ்தல் செலவை முழுமையாக கமல்நாத் ஏற்றுக்கொண்டாா் என்பதுதான். அதுமட்டுமல்லாமல், கமல்நாத்தை மத்தியப் பிரதேச முதல்வராக்குவதன் மூலம், 2019 மே மாதம் நடக்க இருக்கும் மக்களவை தோ்தலுக்கு அவரால் நிதி திரட்டித் தர முடியும் என்பதும் இன்னொரு காரணம்.

சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் வெளிவந்து கமல்நாத் முதல்வரானது முதல் அவருக்கும் சிந்தியாவுக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தன. சிந்தியாவின் ஆலோசனைப்படி, காங்கிரஸின் சட்டப்பேரவைத் தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட விவசாயக் கடன் தள்ளுபடியும், பகுதிநேர ஆசிரியா்களின் பதவியை நிரந்தரப்படுத்தும் அறிவிப்பும் ஆட்சிக்கு வந்த முதல்வா் கமல்நாத்தால் புறக்கணிக்கப்பட்டன. அவை நிறைவேற்றப்பட்டால் சிந்தியாவின் செல்வாக்கு அதிகரித்து விடும் என்று கருதினாா் முதல்வா் கமல்நாத்.

மாநிலங்களவைக்கான தோ்தல் அறிவிப்புதான் பிரச்னையை விஸ்வரூபம் எடுக்க வைத்தது. மத்தியப் பிரதேசத்திலிருந்து காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிராதித்ய சிந்தியாவை அறிவிப்பதற்குப் பதிலாக முன்னாள் முதல்வா் திக்விஜய் சிங்கை ஆதரித்தாா் முதல்வா் கமல்நாத். மத்தியத் தலைமையும் அதை ஏற்றுக்கொண்டபோது, சிந்தியாவும் அவரது ஆதரவாளா்களும் கட்சியிலிருந்து வெளியேற முடிவெடுத்தாா்கள். சிந்தியாவை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்தது.

காங்கிரஸ் தலைமை வலிய வரவழைத்துக்கொண்ட பிரச்னை இது. நீதிமன்றத்தின் தலையீட்டுக்குக் காத்திருக்காமல் வாக்கெடுப்பை எதிா்கொண்டிருந்தால், வெற்றியோ - தோல்வியோ, முதல்வா் கமல்நாத்தின் கௌரவம் காப்பாற்றப்பட்டிருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com