Enable Javscript for better performance
மக்கள் சுய ஊரடங்கு! | ஊரடங்கு விழிப்புணர்வு குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  மக்கள் சுய ஊரடங்கு! | ஊரடங்கு விழிப்புணர்வு குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 21st March 2020 04:57 AM  |   அ+அ அ-   |  

  ஏறத்தாழ மூன்று மாதங்கள் கடந்தும்கூட கரோனா நோய்த்தொற்று குறித்து இன்னும் முழுமையான புரிதல் இல்லாத நிலை தொடர்கிறது. எந்த அளவுக்கு இந்த நோய்த்தொற்று பரவும், எத்தனை பேர் பாதிக்கப்படப் போகிறார்கள், எத்தனை உயிரிழப்புகளை மனித இனம் எதிர்கொள்ளும், எப்போது, எப்படி, எதனால் இது முடிவுக்குக் கொண்டுவரப்படும் என்பது குறித்து யாராலும், எதுவுமே கணிக்க முடியவில்லை.


  பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை அன்று நேரடியாக மக்களுக்கு ஆற்றிய உரையில், உலகமும் இந்தியாவும் எதிர்கொள்ளும் கடுமையான சவால்களைத் தெளிவாகச் சுட்டிக்காட்டினார். இந்த நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு நமக்கு எந்த அளவுக்கு மனத் துணிவும், சமூக அளவிலான கட்டுப்பாடும், ஒற்றுமையும் தேவை என்பதைத் தெளிவாகவே தனது உரையில் குறிப்பிட்டார். கரோனா நோய்த்தொற்றை ஒருங்கிணைந்து எதிர்கொள்வதில் இந்தியா தெளிவாகவும், திண்ணமாகவும் இருப்பதை வெளிப்படுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) "மக்கள் சுய ஊரடங்கு'க்கு பிரதமர் விடுத்திருக்கும் வேண்டுகோள் ஒரு வகையில் தொலைநோக்குச் சிந்தனையுடன் கூடிய அறைகூவல் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.


  உலகம் இதுவரை இல்லாத ஒரு சூழலை எதிர்கொள்கிறது என்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டியது பிரதமரின் உரை. கரோனா நோய்த்தொற்றால் தாங்கள் பாதிக்கப்பட மாட்டோம் என்கிற அசட்டுத்தனமான நம்பிக்கையுடன் மக்கள் மெத்தனமாக இருந்துவிடக் கூடாது என்றும், அதே நேரத்தில் அநாவசிய பீதி தேவையில்லை என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டவை ஒவ்வோர் இந்தியரும் உணர்ந்து செயல்பட வேண்டிய கருத்துகள்.


  "மக்கள் சுய ஊரடங்கு' மூலம் கரோனா நோய்த்தொற்றுச் சவாலை எதிர்கொள்ள இந்தியா ஒருங்கிணைந்து தயாராக இருக்கிறது என்பதை, ஞாயிற்றுக்கிழமை மக்கள் வெளியே வராமல் உணர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார் பிரதமர். இக்கட்டான சூழ்நிலையிலும் தங்களது கடமையைச் செய்துவரும் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், அத்தியாவசியப் பொருள்களை விநியோகிப்பவர்கள், செய்தியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பைப் போற்றும் வகையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு அவரவர் இருக்கும் இடத்தில் எழுந்து நின்று கரகோஷம் செய்து பாராட்டப் பணித்திருப்பதை "தினமணி'யும் வழிமொழிகிறது. 


  சீனாவின் பிரச்னையாக உருவான கரோனா நோய்த்தொற்று இப்போது சர்வதேசப் பிரச்னை, இந்தியாவின் பிரச்னையும்கூட. இந்தியாவின் சவால் பொருளாதார ரீதியிலானது மட்டுமல்ல, சுகாதார ரீதியிலானதும்கூட. இப்போதுதான் நாம் இந்த நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமூச்சுடன் இறங்கியிருக்கிறோம். ஆனால், "கொவைட் 19' நோய்த்தொற்றால் ஏற்பட இருக்கும் பொருளாதாரத் தாக்கத்தால் பாதிக்கப்படப் போகிறோம் என்பதை ஒவ்வோர் இந்தியரும் நினைவில் கொள்ள வேண்டும்.


  உலகிலுள்ள எல்லா நாடுகளும் எல்லைகளை மூடிவிட்டன. அனைத்துப் பெரிய நகரங்களும், பகுதிகளும் அநேகமாக முடக்கப்பட்டிருக்கின்றன. கோடிக்கணக்கான மக்கள் ஏற்கெனவே தங்களைத் தாங்களே வீட்டுச் சிறையில் அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். 


  பொது இடங்கள் மூடப்பட்டிருக்கின்றன, பண்டிகைகள் தவிர்க்கப்படுகின்றன, திருவிழாக்கள் நடத்தப்படுவதில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இதுபோல உலக அளவில் அன்றாட வாழ்க்கை பாதித்த இன்னொரு நிகழ்வு இல்லை என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. 


  மக்களின் அன்றாடச் செயல்பாடுகள் முடக்கப்பட்டதன் விளைவாக பொருளாதாரம் தடம் புரண்டிருக்கிறது. உலகிலுள்ள  ஒவ்வொரு நாடும் கரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார, சுகாதாரச் சவால்களை எதிர்கொள்வதில் ஈடுபட்டிருக்கும்போது இந்தியா மெத்தனமாக இருந்துவிட முடியாது.


  சுகாதார நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. நோயாளிகளை அடையாளம் காண்பதிலும், சோதனை நடத்துவதிலும், சிகிச்சை அளிப்பதிலும் ஈடுபடும் அரசு ஊழியர்களும், மருத்துவத் துறையினரும் பதற்றம் இல்லாமல் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டியது மிகமிக அவசியம். வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையங்களில் எதிர்கொள்ளும் இரக்கமில்லாத வரவேற்பும், உள்ளூர்ப் பயணிகள் ரயில் நிலையங்களில் எதிர்கொள்ளும் இயந்திரத்தனமான சோதனைகளும் தவிர்க்கப்பட வேண்டும். இவை மக்கள் மத்தியில் நோய்த்தொற்றை எதிர்கொள்வதற்கு எதிரான மனநிலையை உருவாக்கி நோய் பரவுவதற்கு வழிகோலிவிடும். 


  எல்லாவற்றுக்கும் மேலாக உற்பத்தி குறையும், சில்லறை விற்பனை குறையும், சேவைத் துறை முடங்கும், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கும்; போக்குவரத்து, சுற்றுலா, விடுதிகள் முதலானவை செயலிழக்கும். நோய்த்தொற்று கிராமப்புறங்களுக்கு பரவினால் விவசாயம் தொடர்பான பணிகள் பாதிக்கப்படும். எல்லாவற்றுக்கும் மேலாக, தினக்கூலித் தொழிலாளர்களும், அமைப்புசாரா பணிகளில் ஈடுபடுபவர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட இருக்கிறார்கள். அவர்களுக்கு எந்தவித சமூகப் பாதுகாப்பும் இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.


  பிரதமரைப் போலவே மாநில முதல்வர்களும் தொலைத்தொடர்புத் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒருங்கிணைந்து கரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ள மக்கள் மன்றத்திற்கு வேண்டுகோள் விடுப்பதும், அவர்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்காமல் இருப்பதை அரசு உறுதிப்படுத்தும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்துவதும் அவசியம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai