Enable Javscript for better performance
சிதையா நெஞ்சுகொள்! | சாதனைகளில் ஒன்றுபட்டிருப்பதில் குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  சிதையா நெஞ்சுகொள்! | சாதனைகளில் ஒன்றுபட்டிருப்பதில் குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 23rd March 2020 03:41 AM  |   அ+அ அ-   |  


  1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி இந்தியா சுதந்திரம் அடைந்த அந்த நள்ளிரவுத் தருணத்தில் இருந்த மகாத்மா காந்தியடிகளும், அவரது அடியொற்றி நடந்து விடுதலையை நனவாக்கிய தியாகத் தொண்டர்களும் இன்றிருந்திருந்தால், தங்களது எதிர்பார்ப்பு பொய்த்துவிடவில்லை என்று அகமகிழ்ந்திருப்பார்கள். ஒரு தேசம் சாதனைகளில் ஒன்றுபட்டிருப்பதில் வியப்பொன்றுமில்லை. சோதனைகளில் துவளாமல் ஒருங்கிணைந்து போராடத் தயாராக இருக்கும்போதுதான், அதன் வலிமை வெளிப்படுகிறது. ஒரு நாள் அளவிலான நேற்றைய "மக்கள் சுய ஊரடங்கு', இந்தியாவின் ஒற்றுமையையும், வலிமையையும் வெளிப்படுத்தியிருக்கிறது.

  பிரதமர் நரேந்திர மோடியின் அறைகூவலை ஏற்று ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருநாள் முழுக்கத் தனது இயக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி வைத்ததும், மாலை சரியாக ஐந்து மணிக்கு விண்ணையே வியக்க வைக்கும் அளவில் பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர் அனைவரும் ஜாதி, மத, மொழி, இன வேறுபாடுகளைக் கடந்து கரகோஷம் செய்து, "கரோனா வைரஸ்' நோய்த்தொற்றுக்கு எதிரான மருத்துவப் பணிகளில் ஈடுபட்டிருப்போரை நன்றியுடன் நினைவுகூர்ந்த தருணம், இந்திய வரலாற்றின் உன்னதத் தருணங்
  களில் ஒன்று.

  ஒருநாள் அடையாள சுய ஊரடங்கு என்பதன் பின்னணியில் எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன. நாம் அனைவரும் ஒருங்கிணைந்து சவாலை எதிர்கொள்வோம் என்கிற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்துவது முக்கியமான காரணம் என்றால், இந்த நோய்த்தொற்று குறித்த புரிதலை, செய்தியை இந்தியாவின் கடைக்கோடிக் குடிமகன் வரை எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதைத்தான் ஒருநாள் "மக்கள் சுய ஊரடங்கு' முயற்சி வெற்றிகரமாக நிறைவேற்றியிருக்கிறது. இந்தியாவின் குக்கிராமங்கள் வரை "கரோனா வைரஸ்' என்கிற நோய்த்தொற்று அதிவிரைவாகப் பரவிவருவது குறித்தும், அவற்றுக்கு சிகிச்சை பெறுவதைவிட, முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதும் இப்போது எடுத்துச் சொல்லப்பட்டு விட்டது. 

  சவால் மிகப் பெரியது. நூறு பேரோ இருநூறு பேரோ நோய்வாய்ப்பட்டால் அவர்களைப் பரிசோதிக்கவும், சிகிச்சை அளிக்கவும் நமக்கு வசதிகள் இருக்கின்றன. அதே நேரத்தில் ஆயிரக்கணக்கில் நோயாளிகள் வந்தால் அவர்களை எதிர்கொள்ளும் வசதி, இந்தியாவில் மட்டுமல்ல வளர்ச்சி அடைந்த அமெரிக்காவிடமே இல்லை. மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் முக்கியமான கருவிகள் அனைத்துமே இறக்குமதிதான் செய்யப்படுகின்றன. முக்கியமான எந்தக் கருவியும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை.

  "கரோனா வைரஸ்' என்பது சீனா தொடுத்திருக்கும் நச்சுக்கிருமி யுத்தம் (பயோவார்) என்று சிலர் வதந்தி கிளப்புகிறார்கள். இன்றைய உலகமயச் சூழலில், சீனாவின் பொருளாதாரம் உலகின் ஏனைய நாடுகளின் பொருளாதாரத்துடன் இணைந்திருக்கிறது. உலகிலுள்ள பெரும்பாலான உற்பத்திகளின் கச்சாப் பொருள்களும், அடிப்படை ரசாயனங்களும், உதிரி பாகங்களும் சீனாவிலிருந்துதான் ஏற்றுமதியாகின்றன. ஏனைய நாடுகளில் உற்பத்தி பாதித்தால், சீனாவின் பொருளாதாரம் சிதைந்துவிடும். அதனால், "பயோவார்' என்கிற புரளி அர்த்தமற்றது. 

  இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில், மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது தொழில் துறைதான். உற்பத்தி ஸ்தம்பித்து விடுவதுடன், விற்பனையும் சரிந்துவிடும். அமெரிக்கா, ஜெர்மனி, கனடா என்று எல்லா மேலை நாடுகளும் தொழில் துறை முற்றிலுமாகச் சிதைந்துவிடாமல் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றன. நாம் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், அனைத்துத் தொழில் நிறுவனங்களும் நிரந்தரமாக முடங்கிவிடும் ஆபத்து காணப்படுகிறது. 

  குறைந்தபட்சம் தொழில் நிறுவனங்களின் கடனுக்கான தவணைகளை 24 மாதங்கள் தள்ளிப்போடுவது; வட்டியை அடுத்த மூன்று மாதத்துக்கு தள்ளுபடி செய்வது; அவர்களின் குறுகிய கால, நீண்ட காலக் கடன்களை அதிகரித்து வழங்குவது என்று உதவிக்கரம் நீட்டியாக வேண்டும். "கரோனா வைரஸ்' நோய்த்தொற்றை எதிர்கொள்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல, உற்பத்தியும், வர்த்தகமும் பாதிக்கப்படாமல் இருப்பதும், பொருளாதாரம் நிலை தடுமாறாமல் காப்பதும் அவசியம். 

  நமது மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும் "கரோனா வைரஸ்' நோய்த்தொற்றை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில், முதலில் அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டாக வேண்டும். அதை அவசரகால உணர்வுடன் உறுதிப்படுத்தாவிட்டால், பிரச்னை கடுமையாகிவிடும். சாமானிய மக்கள் குறிப்பாக, தினக்கூலி பெறும் மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருள்கள் அரசால் இலவசமாக வழங்கப்பட்டாக வேண்டும்.

  2001-இல் ஆந்த்ராக்ஸ், 2002-இல் வெஸ்ட் நைல் வைரஸ் நோய்த்தொற்று, 2003-இல் சார்ஸ், 2005-இல் பறவைக் காய்ச்சல், 2006-இல் எகோலி, 2009-இல் பன்றிக் காய்ச்சல், 2014-இல் எபோலா, 2016-இல் ஜிகா, 2018-இல் நிபா, 2020-இல் இப்போது கரோனா. இதுவும் கடந்து போகும். ஆனால், அதனால் ஏற்படும் பாதிப்புகள் நம்மை நிலைகுலைய வைத்துவிடக் கூடாது என்பதுதான் கவலை.

  பிரதமரின் வேண்டுகோளைத் தொடர்ந்து நடந்த ஒருநாள் "மக்கள் சுய ஊரடங்கு' நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. தெருவில் காவலர்கள் இல்லை, ராணுவம் இல்லை, யாரும் கட்டுப்படுத்தவில்லை. ஆனாலும், 137,62,66,359 பேர் கொண்ட இந்தியா நிசப்தத்தில் ஆழ்ந்ததே... 

  ஒன்றுபட்டிருக்கிறோம், அதனால் வென்றுவிடுவோம்!

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai