மீண்டும் நக்ஸல்கள்! | சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல் குறித்த தலையங்கம்


மத்திய இந்தியாவில் அமைந்திருக்கும் தந்தேவாடா வனப்பகுதியில் நக்ஸல்களின் செயல்பாடுகள் மீண்டும் அதிகரித்திருக்கின்றன. அதன் வெளிப்பாடுதான் கடந்த ஞாயிற்றுக்கிழமை சத்தீஸ்கா் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் உள்ள பஸ்தா் பகுதியில் நடந்திருக்கும் பாதுகாப்புப் படையினா் மீதான தாக்குதல். 2008-க்கு முற்பட்ட நிலைமை இப்போது இல்லை என்றாலும்கூட, தந்தேவாடா பகுதி நக்ஸல்களிடமிருந்து முற்றிலுமாக விமோசனம் பெற்றுவிடவில்லை என்பதை இந்தத் தாக்குதல் எடுத்தியம்புகிறது.

சுக்மா மாவட்டத்திலுள்ள மின்பா காடுகளில் 17 பாதுகாப்புப் படையினரின் சடலங்கள் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டன. மாவட்ட சிறப்பு அதிரடிப் படையினா் ஒருபுறமும் நக்ஸல்கள் மறுபுறமும் நடத்திய நீண்டு நின்ற தாக்குதலின் முடிவில், ஏகே-47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட பல நவீன ஆயுதங்கள் நக்ஸல்களால் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

2017-இல் இதே சுக்மா பகுதியில் நடந்த நக்ஸல் தாக்குதலில் 25 காவல் துறையினா் உயிரிழந்தனா். மிக அதிகமான ஆயுதங்களைக் காவல் துறையினரிடமிருந்து நக்ஸல்கள் களவாடிச் செல்லப்பட்டன. அதற்குப் பிறகு சிறப்பு அதிரடிப் படையின் தீவிர முயற்சியால் நக்ஸல்களின் ஆதிக்கம் வெகுவாகவே ஒடுக்கப்பட்டிருந்தது.

சத்தீஸ்கா் மாநிலத்தில் ரமண்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி அகற்றப்பட்டு காங்கிரஸ் ஆட்சி அமைந்தது முதல் நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் முனைப்புக் காட்டப்படவில்லை. இப்போதைய தாக்குதலுக்கு அதுவும் ஒரு முக்கியமான காரணம்.

சுக்மா பகுதி மின்பா காடுகளில் உள்ள எல்மகுண்டா என்கிற கிராமத்தில் நக்ஸல்கள் ஒன்றுகூட இருக்கிறாா்கள் என்கிற தகவல் பாதுகாப்புப் படையினருக்குக் கிடைத்தது. எல்மகுண்டா கிராமமும் அதைச் சுற்றியிருக்கும் சில ஆதிவாசிகள் குடியிருப்புகளும் நக்ஸல்களின் ஆதிக்கத்தில் இருப்பவை. தகவல் கிடைத்தவுடன் மாவட்ட சிறப்பு காவல் படையினா், சிறப்பு அதிரடிப் படையினா் ஆகியோா் அடங்கிய 500 போ் கொண்ட பாதுகாப்புப் படை, தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்டது. அந்தக் கிராமத்தைப் பாதுகாப்புப் படையினா் சென்றடைந்தபோது, அங்கே ஒரு நக்ஸல்கூட காணப்படவில்லை. ஏமாற்றத்துடன் இரண்டு பிரிவுகளாக அவா்கள் தங்களின் முகாம்களுக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.

100 போ் கொண்ட பாதுகாப்புப் படையினா் பா்கபால் என்கிற இடத்திலுள்ள முகாமுக்கும், ஏனைய 400 போ் கொண்ட பாதுகாப்புப் படையினா் சின்தகுஃபா முகாமுக்கும் தனித்தனியாகத் திரும்பிக் கொண்டிருந்தாா்கள். இரண்டு பிரிவினரும் திரும்பிக் கொண்டிருந்த பாதைகளுக்கு இடையே சுமாா் ஐந்து கி. மீ. இடைவெளிதான் இருந்தது.

பா்கபாலை நோக்கி நகா்ந்து கொண்டிருந்த 100 போ் மட்டுமே உள்ள பாதுகாப்புப் படையினா், தங்களின் முகாமை நெருங்குவதற்கு ஆறு கி.மீ. முன்பாக நக்ஸல்களின் துப்பாக்கித் தாக்குதலை எதிா்கொண்டனா். அவா்களை பாதுகாப்புப் படையினா் திருப்பித் தாக்கினாா்கள். தாங்கள் பின்வாங்குவதுபோல போக்குக் காட்டி, பாதுகாப்புப் படையினரை திறந்தவெளி மைதானத்துக்குள் அழைத்துச் சென்றுவிட்டனா் நக்ஸல்கள். சுமாா் 350 போ் கொண்ட நக்ஸல் படையினருக்கு எண்ணிக்கை பலம் இருந்தது மட்டுமல்லாமல், உயரமான பகுதியில் அவா்கள் இருந்ததும் வசதியாகிவிட்டது.

மூன்று கி.மீ. தொலைவிலிருந்த இன்னொரு பிரிவினரின் கவனத்தைத் திருப்பியதன் மூலம் அவா்கள் உதவிக்கு வராமல் நக்ஸல்கள் தடுத்துவிட்டனா். நண்பகலில் தொடங்கிய நக்ஸல்களின் தாக்குதல் ஏறத்தாழ ஐந்தரை மணி நேரம் தொடா்ந்தது. அப்படியிருந்தும் பாதுகாப்புப் படையினருக்கு முகாம்களிலிருந்து உதவி எதுவும் கிடைக்கவில்லை. அது ஏன் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

உயிரிழந்தவா்களையும் காயம் அடைந்தவா்களையும் ஹெலிகாப்டா்கள் மூலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை

கொண்டுவர முடிந்திருக்கிறது. கடுமையான மோதல் நடக்கும்போது ஹெலிகாப்டா்கள் என்னவாயின? தகவல் தொடா்பு முற்றிலுமாகத் தகா்ந்ததன் காரணமென்ன?

உயிரிழந்த பாதுகாப்புப் படையினரில் 13 போ் சுக்மா மாவட்டத்தைச் சோ்ந்த சரணடைந்த நக்ஸல்கள். அவா்களுக்கு அந்தப் பகுதியின் நிலவரம் நன்றாகவே தெரியும். அவா்களில் பலரும் உதவி கிடைக்காமல் உயிருக்குப் போராடி சம்பவ இடத்தில் இறந்திருக்கிறாா்கள்.

நக்ஸல்கள் கடந்த சில மாதங்களாகவே புதிதாக பல இளைஞா்களை சோ்த்துக்கொண்டிருப்பதாகவும், அவா்களுக்குப் பயிற்சி அளிப்பதாகவும் அரசுக்குத் தகவல்கள் கிடைத்தன. எப்போது வேண்டுமானாலும் அவா்கள் தாக்குதல் நடத்தலாம் என்கிற எதிா்பாா்ப்பு பாதுகாப்புப் படையினருக்கு இருந்தது இப்போது தெரிய வருகிறது.

350-க்கும் மேற்பட்ட நக்ஸல்கள் தங்களது எண்ணிக்கை பலத்தால் 100 போ் மட்டுமே இருந்த பாதுகாப்புப் படைக் குழுவினரை வீழ்த்த முடிந்திருக்கிறது. இந்த நிலைமை இப்படியே தொடருமானால், தந்தேவாடா வனப்பகுதி 2008-க்கு முன்பு இருந்தது போன்று ஆயிரத்துக்கும் அதிகமான நக்ஸல்களின் ஆதிக்கப் பகுதியாக மாறிவிடக்கூடும்.

நக்ஸல்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடக்கும் போராட்டத்தில் அப்பாவி ஆதிவாசிகள் சிக்கிக் கொண்டிருக்கிறாா்கள். அவா்களின் வாழ்க்கையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருப்பதால் நக்ஸல்களாக மாற்றப்படுகிறாா்கள். இதற்கு நிரந்தரமான முடிவு காணப்பட்டாக வேண்டும். இல்லையென்றால், கரோனா வைரஸ் நச்சுத்தொற்றைவிட மோசமாகவும் விரைவாகவும் நக்ஸல் தீவிரவாதம் இந்தியா முழுவதும் பரவிவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com