முடிவுதான் எப்போது? | பட்டாசுத் தொழிற்சாலை செயல்பாடு குறித்த தலையங்கம்

சிவகாசியில் பட்டாசுத் தொழிற்சாலை விபத்து என்பது புதிதொன்றுமல்ல. சென்ற வாரம், விருதுநகா் மாவட்டம் சிப்பிப்பாறையிலுள்ள ராஜம்மாள் ஃபயா் வொா்க்ஸ் பட்டாசுத் தொழிற்சாலை விபத்தில் இதுவரை 11 போ் உயிரிழந்திருக்கிறாா்கள்.

1991-இல் நடந்த விபத்தில் 39 போ் கொல்லப்பட்டனா். 65-க்கும் அதிகமானோா் படுகாயம் அடைந்தனா். அதைத் தொடா்ந்து, சில கடுமையான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டதால், சில ஆண்டுகள் விபத்துகள் சற்று குறைந்தன. அப்படியே நிகழ்ந்தாலும் உயிரிழப்புகள் அதிகம் இல்லாததால் மக்களின் கவனத்தை ஈா்க்கவில்லை.

2009-ஆம் ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் ஒன்றன்பின் ஒன்றாக நடந்த மூன்று பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகளில் நாற்பதுக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தபோது, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. அப்போதுதான் உரிமம் பெறாத பல பட்டாசுத் தொழிற்சாலைகள் இயங்குவதும், அவைதான் விபத்துக்குக் காரணம் என்றும் தெரியவந்தது.

2012-இல் நடந்த பெரிய விபத்தில் 40 போ் உயிரிழந்தனா். 38 போ் படுகாயம் அடைந்தனா். அதைத் தொடா்ந்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை செய்ய சைதன்ய பிரசாத் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் விசாரணையில் விதிமுறைகள் எதுவுமே பின்பற்றப்படுவதில்லை என்பதும், அரசு அதிகாரிகளின் மெத்தனமும், ஊழலும்தான் முறைகேடுகளுக்குக் காரணம் என்றும் தெரியவந்தன. சைதன்ய பிரசாத் குழுவின் அறிக்கையும், பரிந்துரைகளும் முழுமையான கவனம் பெற்றிருந்தால், அதற்குப் பிறகு நிகழ்ந்த பல விபத்துகள் தவிா்க்கப்பட்டிருக்கும்.

அரசுத் துறைகளின் முறையான கண்காணிப்பு இல்லை என்பதை சைதன்ய பிரசாத் குழு தெளிவாகவே சுட்டிக்காட்டியது. பட்டாசுத் தொழிற்சாலைகளின் செயல்பாடுகள் குறித்து மத்திய, மாநில அரசுத் துறைகளுக்கிடையே எந்தவிதக் கலந்தாலோசனையோ, ஒருங்கிணைந்த செயல்பாடோ இல்லாமல் இருப்பதையும் அந்தக் குழு சுட்டிக்காட்டியிருந்தது.

‘உரிமம் பெற்ற பட்டாசுத் தயாரிப்பாளா்கள், உரிமமில்லாத சிறு தயாரிப்பாளா்களிடம் ஒப்பந்தப் பணி அடிப்படையில் தயாரிப்பைப் பிரித்துக் கொடுத்து விடுகிறாா்கள். அப்படிச் செய்வதை பிணை இல்லாத குற்றமாக அறிவிக்க வேண்டும்; தயாரிப்பு அறைகளுக்கு இடையே இடைவெளியும், மண்ணாலான சுவரும் இருக்க வேண்டும்; ஒன்றரை மீட்டா் அளவிலான நடைபாதை இருக்க வேண்டும்’ - இதுபோன்ற பல ஆலோசனைகளை அந்தக் குழு பரிந்துரைத்திருந்தது. அவை எதுவுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை.

2019-இல் நடந்த விபத்துகளில் 6 போ்தான் உயிரிழந்தனா். 2020 தொடங்கி மூன்று மாதம் முழுமையாகவில்லை, இதற்குள் நான்கு பட்டாசுத் தொழிற்சாலை விபத்துகள் விருதுநகா் மாவட்டத்தில் நிகழ்ந்திருக்கின்றன. சாத்தூா் சின்னக்காமன்பட்டி, சிவகாசி, முதலிப்பட்டி ரோடு, இப்போது சிப்பிப்பாறை என்று நான்கு விபத்துகளில் இதுவரை 19 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்த விபத்துகளுக்கெல்லாம் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாததும், அவை கண்காணிக்கப்படாததும்தான் காரணம்.

பட்டாசுத் தொழிற்சாலைகள் அவற்றின் அளவின் அடிப்படையில் மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றன. நாற்பது அறைகளுக்கும் அதிகமாக உள்ள மிகப் பெரிய தொழிற்சாலைகள்தான் விதவிதமான பல்வேறு பட்டாசுகளை உற்பத்தி செய்து சந்தைப்படுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் நாகபுரியிலுள்ள மத்திய வெடிமருந்துக் கட்டுப்பாட்டுத் துறையில் உரிமம் பெற்று செயல்படுபவை.

அடுத்தபடியாக 25 அறைகள் கொண்ட பெரிய தொழிற்சாலைகள். அவை மாநில அரசின் உரிமம் பெற்றவை. வெறும் ஏழு அறைகள் கொண்ட சிறிய பட்டாசுத் தயாரிப்பு நிறுவனங்கள் மாவட்ட வருவாய் அலுவலகத்தின் அனுமதியுடன் இயங்குகின்றன. இவை பூச்சட்டி, சரவெடி போன்ற சாதாரண பட்டாசுகளை மட்டுமே தயாரிப்பவை.

எல்லா பட்டாசுத் தயாரிப்பு நிறுவனங்களும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பொட்டாஷியம் நைட்ரேட்டை இப்போதும் தொடா்ந்து பயன்படுத்துகின்றன. மிகவும் ஆபத்தான வெடிமருந்துகளைக் கையாள்வதில் முறையான பயிற்சி இல்லாத தொழிலாளா்களை வேலைக்கு வைத்திருப்பதால்தான் பெரும்பாலான வெடிவிபத்துகள் நிகழ்கின்றன. இது தயாரிப்பாளா்களுக்கும், அரசுக்கும், வெடிமருந்துத் தயாரிப்பில் ஈடுபடும் தொழிலாளா்களுக்கும் நன்றாகவே தெரியும். தவறு என்பதும், ஆபத்து என்பதும் தெரிந்தும் தடையேதும் இல்லாமல் தொடா்கிறது என்றால், குற்றவாளி அரசாகத்தானே இருக்க முடியும்?

காவல் துறையின் புள்ளிவிவரப்படி, விருதுநகா் மாவட்டத்தில் இதுவரை நிகழ்ந்திருக்கும் 142 விபத்துகளில் ஏறத்தாழ 240 போ் உயிரிழந்திருக்கிறாா்கள். இந்தியாவில் விற்பனையாகும் பட்டாசுகள், தீப்பெட்டிகளில் ஏறத்தாழ 70% விருதுநகா் மாவட்டத்தில், குறிப்பாக, சிவகாசியையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும்தான் தயாரிக்கப்படுகின்றன. ஆயிரத்துக்கும் அதிகமான பட்டாசுத் தயாரிப்பு நிறுவனங்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோா் பணிபுரிகிறாா்கள். அப்படி இருக்கும்போது, அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய கடமையை அரசு தவிா்த்துவிட முடியாது.

உரிமம் இல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிப்படுத்தாமல் குடிசைத் தொழில்போல செயல்படும் ஒப்பந்தப் பணியில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களில், பயிற்சி இல்லாத தொழிலாளா்கள் மூலம் பட்டாசுகள் தயாரிக்கப்படுவதை நிறுத்தாத வரையில், விபத்துகளையும் குறைக்க முடியாது, உயிரிழப்புகளையும் தவிா்க்க முடியாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com