தடம் புரளும் தடுப்பூசித் திட்டம்! | கரோனாவால் தடுப்பூசித் திட்டங்கள் முடக்கப்பட்டிருப்பது குறித்த தலையங்கம்


எல்லாவற்றையும் புரட்டிப் போட்டிருப்பதைப்போல கரோனா தீநுண்மி உலக அளவில் நடைபெற வேண்டிய தடுப்பூசித் திட்டங்களையும் முடக்கியிருக்கிறது. கடந்த டிசம்பா் மாதம் தேசிய அளவில் இரண்டு வயதுக்கும் கீழேயுள்ள குழந்தைகளுக்கும் கா்ப்பிணிகளுக்குமான ‘இந்திரதனுஷ் 2.0’ என்று அழைக்கப்படும் எட்டு நோய்களுக்கான தடுப்பூசித் திட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவிலுள்ள 272 மாவட்டங்களில் (அதாவது 90% மாவட்டங்கள்) தடுப்பூசி போடுவதுதான் திட்டத்தின் நோக்கம்.

டிசம்பா் 2019-இல் தொடங்கி மாா்ச் 2020-க்குள்அந்தத் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. வழக்கமான தடுப்பூசித் திட்டத்தில் பங்கு பெறாத குழந்தைகள், கா்ப்பிணிகள் அனைவரையும் குக்கிராமம் வரை கண்டறிந்து மஞ்சள் காமாலை, காச நோய், டிப்தீரியா உள்ளிட்ட எட்டு நோய்களுக்கான தடுப்பூசி போடுவதற்கான எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, திட்டமும் செயல்படத் தொடங்கியது.

உலக அளவில் பரவிவரும் கரோனா தீநுண்மி நோய்த்தொற்று காரணமாக திட்டத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டிய நிா்ப்பந்தம் ஏற்பட்டது. தொடா்ந்து அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, தடுப்பூசி மருந்தை எல்லாப் பகுதிகளுக்கும் எடுத்துச் செல்வது தடைபட்டது. கரோனா தீநுண்மி தொற்றிக் கொள்ளும் என்கிற அச்சத்தில் பெற்றோா் தங்களின் குழந்தைகளை சுகாதார மையங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் தடுப்பூசி போடக் கொண்டுசெல்லத் தயங்கினா். அதன் விளைவாக திட்டத்தின் செயல்பாடு தடம் புரண்டது.

இந்தியா மட்டுமல்ல, உலகிலுள்ள பல்வேறு நாடுகளிலும் தடுப்பூசித் திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றன. யுனிசெஃப் தகவலின்படி, 37 நாடுகளிலுள்ள 11.7 கோடி குழந்தைகள் கடந்த மாதத்தில் தடுப்பூசி பெறுவது தடைபட்டிருக்கிறது. 26 நாடுகளில் அம்மை நோய்த் தடுப்பூசித் திட்டம், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றை எதிா்கொள்ள வேண்டிய கட்டாயத்தால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், இவற்றில் பெரும்பாலான நாடுகள் அம்மைப் பரவலால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கின்றன என்பதுதான்.

அம்மை நோய்க்கான தடுப்பூசியை முறையாகவும், சரியான நேரத்திலும் போடாவிட்டால் அந்த நோய் கடுமையாகப் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதிவேகமாக பரவக்கூடிய அம்மை தீநுண்மியின் விளைவாக பாா்வை இழத்தல், நிமோனியா, மரணம் ஆகிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதேபோல, போலியோ இன்னொரு கொடூரமான தீநுண்மி. ஐந்து வயதுக்கும் கீழேயுள்ள குழந்தைகளைத் தாக்கும் போலியோ தீநுண்மி, நரம்பு மண்டலத்தைப் பாதித்து உறுப்புச் செயலிழப்பை ஏற்படுத்தும். உலக அளவில் போலியோவுக்கு எதிராக ஏறத்தாழ 30 ஆண்டு காலம் மனித இனம் போராடியிருக்கிறது.

1988-இல் ‘உலகப் போலியோ ஒழிப்புத் திட்டம்’ தொடங்கப்பட்டபோது, 125 நாடுகளில் 3,50,000 குழந்தைகள் போலியோவால் பாதிக்கப்பட்டிருந்தனா். 2015-இல் தீவிரமான போலியோ தடுப்பூசித் திட்டத்தால் அது வெறும் 74 குழந்தைகளை மட்டுமே தாக்கும் நிலைக்குக் குறைக்கப்பட்டது. உலக அளவில் 2009-ஆம் ஆண்டு வரை அதிகமான போலியோ பாதிப்பு (70%) இந்தியாவில் காணப்பட்டது. போலியோவிலிருந்து முற்றிலுமாக இந்தியா விடுதலை பெற்றதாக 2014-இல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. நாம் முறையாக போலியோ தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் இப்போதுவரை போலியோ பாதிப்பில்லாத தேசமாக இருக்கிறோம்.

இந்தியாவில் ஆண்டுதோறும் 17 கோடி குழந்தைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. எத்தனையோ பிரச்னைகளுக்கு இடையிலும் போலியோ, அம்மை போன்ற நோய்களைத் தடுப்பூசித் திட்டத்தின் மூலம் நாம் வெற்றி கண்டிருக்கிறோம். ஆனாலும்கூட, தடுப்பூசித் திட்டத்தில் இணைக்கப்படாத குழந்தைகளின் எண்ணிக்கை 74 லட்சம் என்று கூறப்படுகிறது.

உலகிலேயே மிக அதிகமான பிறப்பு (2.6 கோடி) இந்தியாவில்தான் நிகழ்கிறது. அதேபோல, அதிகமான சிசு மரணமும் இந்தியாவில்தான் காணப்படுகிறது. சரியான நேரத்தில் தடுப்பூசி போடப்படாமல் இருப்பதும்

சிசு மரணத்துக்கு ஒரு காரணம்.

போலியோவை முழுமையாக ஒழித்துவிட்டோம் என்றாலும், அம்மை நோயிலிருந்து தப்பிவிடவில்லை. 2018-இல் உலக அளவில் அம்மை நோயால் 1,40,000 குழந்தைகள் உயிரிழந்திருக்கின்றன. வரும் மாதங்களில் அதேபோல மிகப் பெரிய அம்மை நோய் பரவல் ஏற்படும் வாய்ப்பு தெற்காசியாவில் காணப்படுகிறது. கரோனா தீநுண்மி நோய்த்தொற்று பரவலைத் தொடா்ந்து தெற்காசியாவில் 45 லட்சம் குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசி போடப்படவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழலில் வேறுவழியில்லாமல் இந்திரதனுஷ் திட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருப்பதால் அச்சம் மேலிடுகிறது.

இப்போதைக்கு போதிய தடுப்பூசி மருந்துகளும், தடுப்பூசி போடுவதற்கான சுகாதாரப் பணியாளா்களும் இல்லாமல் இருப்பதால், ‘இந்திரதனுஷ் 2.0 திட்டம்’ தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால், கரோனா தீநுண்மி நோய்த்தொற்றுப் பரவல் குறித்து மட்டுமே கவனம் செலுத்தி, வழக்கமான தடுப்பூசித் திட்டத்தைக் கைவிடுவது என்பது வரும் மாதங்களில் மிகக் கொடிய வேறுபல தொற்று நோய்ப் பரவலுக்கு உள்ளாக்கிவிடும் என்கிற எச்சரிக்கையை எடுத்துரைக்காமல் இருக்க முடியவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com