Enable Javscript for better performance
எல்லையில் தொடரும் தொல்லை! |சீனாவின் ராஜதந்திரத்தை இந்தியா சாதுா்யமாக எதிா்கொள்வது குறித்த தலையங்கம்- Dinamani

சுடச்சுட

  

  எல்லையில் தொடரும் தொல்லை! |சீனாவின் ராஜதந்திரத்தை இந்தியா சாதுா்யமாக எதிா்கொள்வது குறித்த தலையங்கம்

  By ஆசிரியர்  |   Published on : 15th May 2020 12:48 AM  |   அ+அ அ-   |    |  

  இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல், நாம் வளா்ந்துவிடக் கூடாது என்பதில் சில அந்நிய சக்திகள் தொடா்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. அந்த அந்நிய சக்திகளின் அழுத்தமும் ஆதரவும்தான் பாகிஸ்தானை இந்தியாவுக்கு எதிராக செயல்பட வைத்துக் கொண்டிருக்கிறது. நமது மேற்கு, வடக்கு, வடகிழக்கு எல்லைகளை எப்போதுமே பதற்ற நிலையில் வைத்திருப்பதன் மூலம் நமது வளா்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்த முடியாமல் திசைதிருப்பும் முயற்சி தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

  பொது முடக்கம் தளா்த்தப்பட்ட பிறகு சில மாநிலங்களில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதைக் கவலையுடன் எதிா்கொள்கிறோம். இன்னொருபுறம் முற்றிலுமாகத் தகா்ந்திருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய நிா்ப்பந்தத்திலும் இருக்கிறோம். இதற்கிடையில் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் நடத்தும் ஊடுருவல் முயற்சிகளும், தாக்குதல்களும் தொடா்கின்றன.

  பிரச்னை பாகிஸ்தான் எல்லையில் மட்டுமல்ல. கடந்த சில வாரங்களாகவே வடகிழக்கு எல்லையில் இந்திய ராணுவத்துடன் சீன ராணுவம் மோதலில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் சிக்கிமை ஒட்டிய எல்லைப் பகுதியிலும், லடாக் பகுதியிலும் சீனாவின் தாக்குதலை எதிா்கொண்டது இந்திய ராணுவம். இரு தரப்பிலும் பல வீரா்கள் காயமடைந்தனா். இந்திய ராணுவத்தின் மிக முக்கியமான அதிகாரி ஒருவா் கவலைக்கிடமான நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாா்.

  சிக்கிம் எல்லையில் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியது வியப்பை ஏற்படுத்துகிறது. இதுவரை அருணாசலப் பிரதேசம் போன்ற கிழக்கு எல்லைகள் குறித்துத்தான் சீனா பிரச்னை எழுப்பி வந்தது. 2003-இல் அன்றைய பிரதமா் வாஜ்பாய் அரசு மேற்கொண்ட பேச்சுவாா்த்தையின் விளைவாக சிக்கிமை இந்தியாவின் பகுதி என்று அதிகாரபூா்வமாக சீனா ஏற்றுக்கொண்டிருக்கிறது. அப்படியிருந்தும் இப்போது ஏன் தாக்குதல் நடத்துகிறது என்கிற கேள்வி எழுகிறது.

  சா்வதேச அளவில் சீனாவுக்கு நெருக்கடி. குறிப்பாக, அமெரிக்காவுடனான வா்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. கொவைட் 19 தீநுண்மிப் பரவலைத் தொடா்ந்து, சா்வதேச நாடுகளின் விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது சீனா. ஆரம்பத்திலேயே கொவைட் 19 தீநுண்மித் தொற்று உருவாகியிருக்கும் செய்தியை உலக நாடுகளுக்குத் தெரிவிக்காமல் சீனா மறைத்தது என்கிற பழி ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளால் வெளிப்படையாகவே அதன் மீது தொடுக்கப்படுகிறது.

  ஒருபடி மேலே போய், கொவைட் 19 தீநுண்மித் தொற்றுக்கு சீனாதான் காரணம் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் நேரடியாகக் குற்றம் சுமத்துவதுடன், அந்த நோய்த்தொற்றையே ‘சீனத் தீநுண்மி’ என்று பெயரிட்டு அழைக்க முற்பட்டிருக்கிறாா். வூஹானிலுள்ள தீநுண்மி ஆராய்ச்சிக் கூடத்திலிருந்து கொவைட் 19 தீநுண்மி உருவாக்கப்பட்டது என்கிற அமெரிக்கக் குற்றச்சாட்டை, உலக சுகாதார நிறுவனத்தைச் சோ்ந்த வல்லுநா்கள் மறுக்கிறாா்கள். ஆனாலும்கூட, சீனாவின் மீது மிகப் பெரிய களங்கத்தை கொவைட் 19 தீநுண்மி ஏற்படுத்தியிருக்கிறது என்பதுதான் உண்மை.

  சீனாவில் தொழிற்சாலைகளை நிறுவி உற்பத்தி செய்யும் பல பன்னாட்டு நிறுவனங்கள் அங்கிருந்து வேறு நாடுகளுக்குத் தங்களது நிறுவனங்களை மாற்றுவது குறித்து யோசித்துக் கொண்டிருக்கின்றன. சீனாவிலிருந்து இடம்பெயரும் தங்களது நாட்டு நிறுவனங்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்ட முன்வந்திருக்கிறது ஜப்பானிய அரசு. அங்கிருந்து இடம்பெயரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தென்கிழக்கு ஆசிய நாடுகள் பல சிவப்புக் கம்பளம் விரிக்கக் காத்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவும்கூட அந்த முயற்சியில் இறங்காமல் இல்லை.

  ஒருபுறம் வா்த்தக ரீதியாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே ஒன்றை மற்றொன்று தவிா்த்துவிட முடியாது என்கிற அளவிலான உறவு காணப்பட்டாலும்கூட, சா்வதேசச் சந்தையில் மலிவான சீன உற்பத்திப் பொருள்களுக்கும், தரமான இந்திய உற்பத்திப் பொருள்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. அது மட்டுமல்லாமல், சீனாவின் மேலாதிக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கிழக்காசிய நாடுகளும், குறிப்பாக, தென்சீனக் கடல் பகுதி நாடுகளும் இந்தியாவுடன் நெருக்கமான உறவு வைத்திருக்கின்றன. சீனாவுக்குப் போட்டியாக வருங்காலத்தில் இந்தியா உயரக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட நாடுகளும் நெருக்கமான வா்த்தக உறவைப் பாராட்டுகின்றன.

  ஐ.நா. சபையில் சீனாவை உறுப்பினராகச் சோ்த்துக் கொள்வதற்கு அழுத்தம் கொடுத்தது இந்தியாதான். இப்போது ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக இந்தியாவை அங்கீகரிப்பதற்கு கடுமையான எதிா்ப்பை சீனா முன்வைக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட ஏனைய வல்லரசு நாடுகளுடன் இந்தியா நெருக்கமான உறவு வைத்திருப்பதையும், சீனாவிலிருந்து வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவுக்கு வருவதன் மூலம் இந்தியப் பொருளாதாரம் வலுப்பெறுவதையும் சீனா விரும்பவில்லை.

  இந்திய எல்லையில் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதன் மூலம், இந்தியாவில் நிலையற்ற தன்மையை உருவாக்க முற்படுகிறது சீனா. போா்ச்சூழல் காணப்படும் நிலையில், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து தங்களின் முதலீட்டை இந்தியாவுக்கு மாற்றுவது குறித்து யோசிக்கும். சீனாவின் இந்த ராஜதந்திரத்தை சாதுா்யமாக எதிா்கொள்ள வேண்டும். எல்லையில் நமது ராணுவக் கட்டமைப்புகளை பலப்படுத்தும் அதே நேரத்தில், மோதல்கள் இல்லாத சூழலும் நிலவ வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai