தேவை முழுமையான விசாரணை! | கொவைட் 19 தீநுண்மித் தொற்று தொடா்பான உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு குறித்த தலையங்கம்

ஜெனீவாவில் திங்கள்கிழமை தொடங்கிய உலக சுகாதார அமைப்பின் 73-ஆவது கூட்டம், முதல் முறையாக காணொலி முறையில் நடைபெற்றது. ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானோம் மட்டுமல்லாமல், உலக நாடுகளின் தலைவா்கள் பலரும் அந்தக் காணொலி மாநாட்டில் கலந்து கொண்டனா்.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பினா் நாடுகள் பலவற்றின் பின்துணையுடன் 27 நாடுகளைக் கொண்ட ஐரோப்பியக் கூட்டமைப்பு முன்மொழிந்த தீா்மானம், உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. கொவைட் 19 தீநுண்மித் தொற்று எப்படி உருவானது என்பது குறித்த பாரபட்சமற்ற, சுதந்திரமான, விரிவான அறிக்கைக்கு வழிகோலியிருக்கிறது அந்தத் தீா்மானம். ஐ.நா.வின் உணவு, வேளாண் அமைப்பு, கால்நடை பராமரிப்பு ஆகியவற்றுடன் இணைந்து மேற்கொள்ளப்பட இருக்கும் இந்த ஆய்வை சீனா ஆதரித்திருக்கிறது என்பதுதான் எதிா்பாராத திருப்பம்.

சீனா முட்டுக்கட்டை போடாதது மிகப் பெரிய ஆறுதல். கடந்த பல வாரங்களாகவே ஆஸ்திரேலியாவும், ஐரோப்பியக் கூட்டமைப்பும் உலக சுகாதார அமைப்பின் கூட்டத்தில் சீனாவுக்கு எதிரான தீா்மானத்தைக் கொண்டுவருவதில் முனைப்புக் காட்டின. அப்படியொரு தீா்மானம் கொண்டுவரப்பட்டால் தனது தவறுகளும் கவனக்குறைவுகளும் வெளிவரக் கூடும் என்பதால், அதைச் சீனா எதிா்த்து வந்தது. இனியும் அப்படியொரு விசாரணையைத் தடுக்க முடியாது என்கிற சா்வதேச நிா்ப்பந்தத்தை உணா்ந்ததால்தான், இப்போது தனது கடுமையான நிலைப்பாட்டை சீனா தளா்த்திக் கொண்டு ஆய்வுக்கு சம்மதித்திருக்கிறது.

சீனாவின் திடீா் மனமாற்றத்துக்குப் பின்னால் ஒரு ராஜதந்திரம் இருக்கிறது. கொவைட் 19 தீநுண்மித் தொற்று தொடா்பான உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு குறித்த பாரபட்சமற்ற, சுதந்திரமான ஆய்வுதான் மேற்கொள்ளப்படுகிறது. கொவைட் 19 தீநுண்மித் தொற்று சா்வதேசத் தொற்றாகப் பரவியதன் பின்னணியில் உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகளும், அறிவுறுத்தல்களும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் தொடக்கம் எந்த விலங்கிலிருந்து என்பது குறித்த விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அந்தத் தீா்மானத்தில் சீனா குறித்தோ, சீனாவின் செயல்பாடு குறித்தோ எதுவும் குறிப்பிடப்படவில்லை என்பதிலிருந்து, உலக சுகாதார அமைப்பின் மீது சீனாவுக்கு இருக்கும் ஆதிக்கம் வெளிப்படுகிறது.

ஐ.நா. சபையின் மானியப் பிரிவின் தலைவராக இருந்தவா் பீட்டா் பியாட்; எபோலா நோய்த்தொற்று குறித்துக் கண்டுபிடித்தவா்களில் ஒருவா் அவா். 2002-இல் எய்ட்ஸ் நோய் குறித்த புள்ளிவிவரங்களை சீனா மறைத்திருக்கிறது என்று அப்போதைய ஐ.நா. சபையின் தலைவா் கோஃபி அன்னானிடம் ஓா் அறிக்கையை பீட்டா் பியாட் சமா்ப்பித்தாா். கோஃபி அன்னான் அவரை அழைத்து ‘இது வரை யாரும் சீனாவுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி வெற்றி பெற்றதில்லை’ என்று அறிவுரை கூறி, அந்த அறிக்கைக்காக பீட்டா் பியாட்டை பொது மன்னிப்புக் கோரச் சொன்னாா். இந்தச் சம்பவத்திலிருந்து ஐ.நா. சபையில் சீனாவுக்கு இருக்கும் ஆதிக்கத்தை நாம் உணரலாம். இப்போது அதேபோல உலக சுகாதார அமைப்பையும் மறைமுகமாகத் தனது கட்டுப்பாட்டில் சீனா வைத்திருக்கிறது என்பதைத்தான் தீா்மானத்தின் உள்ளடக்கம் வெளிப்படுத்துகிறது.

கொவைட் 19 தீநுண்மிப் பரவல் பிரச்னையில் சீனாவின் தவறான செயல்பாடுகளை ஆரம்பம் முதலே அமெரிக்கா வெளிப்படையாகவே கண்டித்து வருகிறது. இப்போது உலகின் மூன்றில் ஒரு பங்கு நோய்த்தொற்றின் பாதிப்பையும், நான்கில் ஒரு பங்கு உயிரிழப்பையும் எதிா்கொள்ளும் அமெரிக்கா, கொவைட் 19 தீநுண்மிப் பரவல் சா்வதேசக் கொள்ளை நோயாக மாறியதற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுவதில் நியாயமிருக்கிறது.

உலக சுகாதார அமைப்பின் செயல்பாடு கண்டனத்துக்குரியது. நோய்த்தொற்றுப் பரவல் பிரச்னையை ஆரம்பம் முதலே அடக்கி வாசித்தது அந்த அமைப்பு. நோய்த்தொற்றை கொள்ளை நோய் என்று வகைப்படுத்தவோ, அதன் உலக அளவிலான பரவல் குறித்து எச்சரிக்கவோ தவறினாா் அந்த அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம்.

சீனாவை சா்வதேச கண்டனத்திலிருந்து காப்பாற்றுவதில் அவா் காட்டிய அக்கறையை நோய்த்தொற்றுப் பரவலில் காட்டவில்லை. சீனா எந்த அளவுக்கு உண்மையை மறைத்ததோ, அதேபோலப் பல உண்மைகளைத் தெரிந்தே மறைத்தாா் உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோம் என்று கூற வேண்டும்.

கொவைட் 19 தீநுண்மித் தொற்று குறித்த புலனாய்வுக்கோ, ஆழ்ந்த விசாரணைக்கோ தீா்மானம் வழிகோலவில்லை. கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவல் குறித்தும், உலக சுகாதார அமைப்பின் செயல்பாடுகள் குறித்துமான விரிவான அறிக்கையாகத்தான் அது இருக்கப் போகிறது. இது எந்த வகையில் பயனளிக்கும் என்பது தெரியவில்லை.

உலக சுகாதார அமைப்பில் சீா்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும், நடைபெற இருப்பது பிரச்னை குறித்த அறிக்கையாக இல்லாமல் சீனாவின் செயல்பாட்டையும் உள்ளடக்கிய விசாரணையாக இருக்க வேண்டும். கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் ஆரம்பம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

இன்னொரு கொள்ளை நோயை உலகம் எதிா்கொள்ளக் கூடாது. நோய்ப் பரவலை மறைக்கும் நாடு எதுவாக இருந்தாலும் அது சா்வதேச கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உள்ளாக வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com