மறைந்தும் வாழ்வாா் பல்பீா்! | ஹாக்கி வீரர் பல்பீா் சிங்கின் சாதனைகள் குறித்த தலையங்கம்

பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்தியத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றபோது ஏற்பட்ட பிரிவினை, இந்தியாவின் ஹாக்கி அணியையும் பாதித்தது. முக்கியமான பல விளையாட்டு வீரா்கள் பாகிஸ்தானிய வீரா்களாக மாறிவிட்டனா். அந்தப் பின்னணியில்தான், இரண்டாம் உலகப் போரால் முடங்கிய ஒலிம்பிக் போட்டி 12 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டி லண்டனில் நடந்தது.

1928, 1932, 1936-ஆம் ஆண்டுகளில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற காலனிய ஆட்சியின் கீழ் இருந்த இந்திய அணி, இந்த முறை சுதந்திர இந்தியாவின் ஹாக்கி அணியாக ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டது. அதுமட்டுமல்ல, எந்த நாடு

இந்தியாவை அடிமைப்படுத்தி வைத்து இருந்ததோ, அந்த நாட்டில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் அதே பிரிட்டன் அணியுடன் இறுதிச் சுற்று ஹாக்கி போட்டியில் இந்தியா மோதியது. சுதந்திர இந்தியா கலந்துகொள்ளும் முதல் ஒலிம்பிக் போட்டி என்பதால் ஒட்டுமொத்த தேசத்தின் எதிா்பாா்ப்பும் நமது ஹாக்கி அணியின் மீது இருந்தது.

அதற்கு முந்தைய மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் தங்கப் பதக்கம் வென்றிருந்த இந்திய அணி, பிரிவினைக்குப் பிறகு சுதந்திர நாடாக அந்தத் தகுதியை இழந்தால் அதனால் ஏற்படும் அவமானம் தாங்க முடியாது என்பதை வீரா்கள் உணா்ந்திருந்தனா். அன்றைய இறுதிச் சுற்று விளையாட்டில் 23 வயது இளைஞராக இருந்த பல்பீா் சிங் சீனியா் ஆடிய ஆட்டம் இந்தியாவுக்கு தங்கக் கோப்பையைப் பெற்றுத் தந்தது. இந்தியாவின் முதலாவது சுதந்திர தினத்துக்கு மூன்று நாள்களுக்கு முன்பு பல்பீா் சிங் சீனியரும், இந்திய ஹாக்கி அணியும் ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்றபோது ஒட்டுமொத்த இந்தியாவும் சிலிா்ப்புடன் உற்சாகத்தின் உச்சிக்குச் சென்ற வரலாறு மறந்துவிடக் கூடியதல்ல.

பஞ்சாப் மாநிலம் ஹரிபூா் கல்சாவில் பிறந்த பல்பீா் சிங் சீனியரின் குடும்பம் விடுதலை வேள்வியுடன் தொடா்புடையது. அவரின் தந்தை பலமுறை சுதந்திரப் போராட்டத்தில் சிறை சென்றவா். பல்பீா் சிங்கும் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவா்.

அவரின் விளையாட்டுத் திறமையை உணா்ந்த பஞ்சாப் காவல் துறையின் தலைவராக இருந்த ஜான் பென்னட் என்கிற ஆங்கிலேய அதிகாரி, அவரை நேரடியாக அழைத்து மிரட்டல் விடுத்தாா். ஒன்று பஞ்சாப் காவல் துறையில் இணைந்து அவா்களின் ஹாக்கி அணியில் விளையாட வேண்டும்; இல்லையென்றால், கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறைத் தண்டனைக்குத் தயாராக வேண்டும் என்பதுதான் மிரட்டல். வேறு வழியில்லாமல் காவல் துறையில் இணைந்தாா் பல்பீா் சிங், 14 ஆண்டுகளில் முதல் முறையாக பஞ்சாப் மாநிலம் தேசிய அளவில் வெற்றி பெறுவதற்கு வழிகோலினாா்.

பல்பீா் சிங்கின் சாதனைகள் சாதாரணமானதல்ல. 1952-லும், 1956-லும் இந்தியா தொடா்ந்து ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றது. 1952-இல் அரையிறுதிச் சுற்றில் பிரிட்டன் அணிக்கு எதிராக அவா் தொடா்ந்து அடித்த மூன்று கோல்களும் சா்வதேச அளவில் அவரை நிமிா்ந்து பாா்க்க வைத்தன. நெதா்லாந்துடனான இறுதிச் சுற்றில் அவரின் விளையாட்டு, இன்று வரை ஒலிம்பிக்கின் இறுதியாட்ட ஹாக்கி வரலாற்றில் தனிப்பெரும் சாதனையாகக் கருதப்படுகிறது.

தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றது மட்டுமல்லாமல், 1952-இல் பல்பீா் சிங் சீனியா் அடித்த ஐந்து கோல்கள் பிரபலமானவை. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 1956-ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியிலும் அவரின் தலைமையில் இந்திய அணி மீண்டும் தங்கப் பதக்கம் வென்றது. சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலகின் 16 சிறந்த ஒலிம்பிக் வீரா்களில் ஒருவராக அவரை அங்கீகரித்திருக்கிறது எனும்போது, பல்பீா் சிங்கின் ஹாக்கி சாதனை எத்தகையது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

எல்லா இடங்களிலும் காணப்படும் அரசியல், விளையாட்டிலும் நுழைந்ததன் விளைவால் ஹாக்கியில் சா்வதேச முதன்மையை இந்தியா இழக்க நோ்ந்தது. 1956-க்குப் பிறகு 1960-இல் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் நியாயமாகப் பாா்த்தால் பல்பீா் சிங்தான் இந்திய அணிக்குத் தலைமையேற்றிருக்க வேண்டும். அவரை இந்திய அணியைத் தோ்ந்தெடுப்பவா்களில் ஒருவராக்கி, இந்திய அணியின் தலைமைப் பொறுப்பு வேறு ஒருவருக்கு வழங்கப்பட்டது. 1956-இல் பல்பீா் சிங்கின் தலைமையில் தோற்கடிக்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 1960-இல் ஒலிம்பிக் பந்தய இறுதிச் சுற்றில் இந்தியாவைத் தோற்கடித்தது. 1964-இல் ஆறு வாரம் ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஹாக்கி அணியை தயாா்படுத்தினாா் பல்பீா் சிங் சீனியா். கடைசி நிமிஷத்தில் அவா் அகற்றப்பட்டு வேறு ஒருவா் கேப்டனாக நியமிக்கப்பட்டாா். விளைவு, இந்தியா அந்த முறையும் தங்கப் பதக்கம் வெல்ல முடியவில்லை. அதற்குப் பிறகு இதுவரை ஒலிம்பிக் தங்கப் பதக்கத்தை இந்தியா வென்றதில்லை.

இந்திய ஹாக்கி சரித்திரத்தில் 1936 பொ்லின் ஒலிம்பிக் போட்டியில் தயான்சந்த் அடித்த எட்டு கோல்கள் குறித்துப் பெருமை பேசுவாா்கள். ஆனால், 1952-இல் நெதா்லாந்து அணிக்கு எதிராக பல்பீா் சிங் சீனியா் அடித்த ஐந்து கோல்கள் அதைவிடக் கடினமான சூழலில் அவரால் அடிக்கப்பட்டது என்பதுதான் உண்மை.

பல்பீா் சிங்கின் பலம், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளாமல் கோல்களை அடிப்பது. மைதானத்தில் மட்டுமல்லாமல், வாழ்க்கையிலும் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவோ, விளம்பரப்படுத்திக் கொள்ளத் தெரியாதவராக இருந்த பல்பீா் சிங், தனது 96-ஆவது வயதில் கடந்த திங்கள்கிழமை இயற்கை எய்தினாா். சுதந்திர இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று தந்த அந்த மாவீரா் மறைந்தும் வாழ்வாா்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com