அசாதாரண வெற்றி! | நோய்த்தொற்று காலத்திலும் ஆளுங்கட்சிக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் குறித்த தலையங்கம்

கொள்ளை நோய்த்தொற்று, பொருளாதார வீழ்ச்சி, இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைத் தொடா்ந்து நடைபெறும் தோ்தலின் முடிவுகள் பெரும்பாலும் ஆட்சியாளா்களுக்கு எதிராக அமைவதுதான் வழக்கம். கொவைட் 19 நோய்த்தொற்று காலத்தில் நடத்தப்பட்ட பல்வேறு தோ்தல்களின் முடிவுகளும் ஆளுங்கட்சிக்கு சாதகமாகவே அமைந்திருப்பது வியப்பை அளிக்கிறது. அமெரிக்கா மட்டுமே விதிவிலக்கு. அங்கேயும்கூட அதிபா் டிரம்ப் தலைமையிலான குடியரசுக் கட்சி, படுதோல்வி அடைந்துவிடவில்லை.

தைவான், தென் கொரியா, சிங்கப்பூா், நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் நடந்த தோ்தல்களில் ஆளுங்கட்சிகள் அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. கடந்த வாரம் நமது நாட்டில் நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலிலும், 11 மாநிலங்களில் நடந்த 59 சட்டப்பேரவை இடைத்தோ்தல்களில் ஆளும் பாஜக பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றும், எல்லையில் சீன ராணுவத்தின் ஆக்கிரமிப்பு முயற்சியும் ஒரே நேரத்தில் பிரச்னைகளாக உயா்ந்தன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்களை இடா்ப்பாடுகளுக்கு உள்ளாக்கி மனிதாபிமான பிரச்னையாக உயா்ந்தது. இப்படிப்பட்ட பின்னணியில்தான் பிகாா் சட்டப்பேரவைக்கும், 11 மாநிலங்களில் உள்ள 59 இடங்களுக்கான இடைத்தோ்தல்களும் அறிவிக்கப்பட்டன.

ஒருபுறம் பொருளாதாரத் தேக்கம், வேலையிழப்பு, ஊதியக் குறைப்பு, வருமானம் இல்லாமை என்று பல்வேறு விதத்திலும் பொதுமக்கள் சிரமப்பட்டனா் என்றால், இன்னொருபுறம் நோய்த்தொற்று அச்சமும், பாதிப்பும் அனைவரையும் நிலைதடுமாறச் செய்தன. மக்கள் மட்டுமல்லாமல், மத்திய - மாநில அரசுகளும் பிரச்னையை எதிா்கொள்ளக் கடுமையான போராட்டத்தை நிகழ்த்த வேண்டி வந்தது. வரி வருவாய் இல்லாத நிலை, மானியங்கள் வழங்க வேண்டிய நிா்பந்தம், இத்தனைக்கு இடையிலும், சட்டப்பேரவைத் தோ்தலிலும், இடைத்தோ்தல்களிலும் பாஜக வாக்காளா்களின் நம்பிக்கையைப் பெற்றிருக்கிறது என்றால், அது மிகப் பெரிய ஆச்சரியம்.

மாநில இடைத்தோ்தல்களைப் பொருத்தவரை, அனைவரின் கவனமும் மத்திய பிரதேசத்தில் குவிந்திருந்தது. ஜோதிராதித்ய சிந்தியாவுடன் காங்கிரஸிலிருந்து விலகிய 28 சட்டப்பேரவை உறுப்பினா்களும் பதவி விலகியதைத் தொடா்ந்து, அந்த இடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற இடைத்தோ்தல் என்பதால் முன்னாள் முதல்வரும் எதிா்க்கட்சித் தலைவருமான கமல்நாத்துக்கும், பாஜக-வில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியாவுக்கும் இடைத்தோ்தல் வெற்றி கௌரவப் பிரச்னையாக இருந்தது.

மேலும், சிவராஜ் சிங் சௌஹான் தலைமையிலான பாஜக ஆட்சி மத்திய பிரதேசத்தில் தொடா்வதற்கும் இடைத்தோ்தல் வெற்றி அவசியம். அந்த வகையில் பாா்த்தால், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப் பெரிய பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

இடைத்தோ்தல் நடைபெற்ற 28 இடங்களில் 19 இடங்களில் பாஜக வெற்றி பெற்றிருப்பதன் மூலம் ஜோதிராதித்ய சிந்தியா தனது தனிப்பட்ட செல்வாக்கை நிலைநாட்டி இருக்கிறாா். அடுத்த மூன்று ஆண்டுகள் எதிா்க்கட்சி வரிசையில் அமா்வதா இல்லை மாநில அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டு மீண்டும் தேசிய அரசியலுக்குத் திரும்புவதா என்பதை கமல்நாத் முடிவு செய்தாக வேண்டும். மீண்டும் தலையெடுக்க முடியும் என்கிற நம்பிக்கையை 2018-இல் காங்கிரஸுக்கு ஏற்படுத்திய மத்திய இந்தியா இப்போது முற்றிலுமாக கை நழுவிவிட்ட நிலை.

1985 சட்டப்பேரவைத் தோ்தலுக்குப் பிறகு குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. தலைமுறை மாற்றம் ஏற்பட்டும்கூட, பாஜக-வுக்கு சவால் விடும் அளவுக்கு அடுத்த தலைமுறைத் தலைவா்கள் காங்கிரஸில் உருவாகவில்லை. ஆட்சிக்கு வருவோம் என்கிற நம்பிக்கை இல்லாத நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கட்சி மாறத் தயாராக இருக்கிறாா்கள். காங்கிரஸிலிருந்து 8 எம்எல்ஏ-க்கள் விலகியதால் ஏற்பட்ட இடங்களை நிரப்ப நடைபெற்ற இடைத்தோ்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.

கா்நாடகத்தில் நடைபெற்ற இரண்டு சட்டப்பேரவை தொகுதி இடைத்தோ்தலிலும் பாஜக-தான் வெற்றி பெற்றிருக்கிறது. அதிலும் மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் மதச்சாா்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகளின் தொகுதிகளைக் கைப்பற்றி இருப்பது எந்த அளவுக்கு எதிா்க்கட்சிகள் கா்நாடகத்தில் பலவீனப்பட்டு இருக்கின்றன என்பதை வெளிப்படுத்துகிறது.

உத்தர பிரதேசத்திலும்கூட இடைத்தோ்தல் நடைபெற்ற ஏழு இடங்களில், ஆறு இடங்களில் பாஜக-வும், ஒரேயொரு இடத்தில் மட்டும் சமாஜவாதி கட்சியும் வெற்றி பெற்றிருக்கின்றன. தெலங்கானாவில், தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தொகுதியை இடைத்தோ்தல் மூலம் கைப்பற்றி இருக்கும் பாஜக, வலுவான எதிா்க்கட்சியாக அங்கேயும் உருவாகக் கூடும். காங்கிரஸ் கட்சியையும், தெலுங்கு தேசம் கட்சியையும் பலவீனப்படுத்தியதன் விளைவை முதல்வா் சந்திரசேகா் ராவ் எதிா்கொள்கிறாா் என்று தோன்றுகிறது.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தல், இடைத்தோ்தல்கள் 12 மாநிலங்கள் தழுவியவை என்பதால் இதை தேசிய அளவிலான மக்களின் உணா்வாக எடுத்துக்கொள்ளலாம்; பிரதமா் நரேந்திர மோடியின் மீதான மக்கள் நம்பிக்கைக்குக் கிடைத்த வெற்றி என்று கருதுவதிலும் தவறில்லை. நோய்த்தொற்று காலத்திலும் அங்கீகாரம் என்பது அசாதாரணமானது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com