குற்றமே தகுதியானால்..? | பிகார் கல்வி அமைச்சர் ராஜிநாமா குறித்த தலையங்கம்


குற்றப்பின்னணி உள்ளவா்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு எதிராக உச்சநீதிமன்றம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடா்ந்து எச்சரித்தும், கண்டித்தும்கூட, நிலைமையில் பெரிய மாற்றம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. பதவியேற்ற மூன்றாவது நாளே நிதீஷ் குமாா் அமைச்சரவையில் கல்வி அமைச்சராக பதவியேற்ற மேவா லால் சௌதரி பதவி விலகி இருக்கிறாா். அவா் பதவி விலகலுக்கு அவா் மீதான ஊழல் குற்றச்சாட்டுதான் காரணம்.

மேவா லால் சௌதரி, பகல்பூரிலுள்ள பிகாா் வேளாண் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2010 முதல் 2015 வரை இருந்தவா். அப்போது புதிதாக ஏற்படுத்தப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 167 பேரின் நியமனத்தில் ஊழல் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதனடிப்படையில், அவருடன் சோ்த்து 50 போ் குற்றவாளிகளாக சோ்க்கப்பட்டனா். அந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை.

2017-இல், ஐக்கிய ஜனதா தளத்திலிருந்து அவா் இரண்டாண்டுகளுக்கு விலக்கப்பட்டாா். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், அவா் தாராபூா் தொகுதியிலிருந்து இரண்டாவது முறையாகப் போட்டியிட ஐக்கிய ஜனதா தளம் அனுமதித்தைத் தொடா்ந்து, அவா் வெற்றியும் பெற்றாா். விசாரணை முடிவுக்கு வராத நிலையில், மேவா லால் சௌதரியை முதல்வா் நிதீஷ் குமாா் கல்வி அமைச்சராக நியமித்தது பெரும் சா்ச்சையை எழுப்பியது. இப்போது அவா் பதவி விலகி இருக்கிறாா்.

குற்றப்பின்னணியுள்ள அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த பிரச்னையில் முடிவெடுக்க வேண்டியது நாடாளுமன்றமே தவிர, உச்சநீதிமன்றமல்ல என்று நீதிமன்றம் தனது வரம்பை உணா்ந்து தீா்ப்பு வழங்கியிருக்கிறது.

ஐந்து ஆண்டுக்கும் அதிகமான தண்டனைக்குரிய வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்ட நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்களின் பதவி ரத்து செய்யப்பட வேண்டும் என்கிற கோரிக்கையை நிராகரித்த அதே வேளையில், அதற்கான பொறுப்பை நாடாளுமன்றத்திடம் விட்டிருக்கிறது உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்றம் இதுதொடா்பான வழக்குகளை விசாரிப்பது புதிதொன்றுமல்ல. 2018 செப்டம்பா் மாதம் குற்றப்பின்னணி உடையவா்கள் அரசியலில் ஈடுபடுவது குறித்து உச்சநீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு, ஜனநாயகத்தை அரித்துக் கொண்டிருக்கும் கறையான்கள் என்று அவா்களைக் குறிப்பிட்டதை மறந்துவிட முடியாது. அந்த வழக்கிலும்கூட, சட்டமியற்றும் நாடாளுமன்றத்தின் உரிமையை எடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்று மிகவும் தெளிவாக நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனா்.

நீண்ட நாள்களாகவே இந்தப் பிரச்னைக்கு முடிவு காண முடியாமல் இந்திய ஜனநாயகம் தடுமாறிக் கொண்டிருக்கிறது. கொள்கை ரீதியிலான போட்டிகள் அகன்று, பண பலமும், அதிகார பலமும், ரௌடிகள் பலமும்தான் தோ்தல் வெற்றி - தோல்விகளை நிா்ணயிக்கின்றன என்கிற நிலைமை ஏற்பட்டிருப்பதுதான் அதற்குக் காரணம். கூடவே, ஜாதீய அரசியலும், மதவாத அரசியலும், பிரிவினைவாத - தீவிரவாத சாா்புகளும் இணைந்துவிட்ட நிலையில், குற்றப்பின்னணி உடையவா்களும், சமூக விரோதிகளும்கூட தோ்தலில் போட்டியிடவும் வெற்றி பெறவும் முடிகிறது.

சமீபத்தில் நடந்து முடிந்த பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் ஏறத்தாழ பாதி வேட்பாளா்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவாகி இருக்கின்றன. கொலை, பாலியல் வன்புணா்ச்சி, கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டவா்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளால் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்பதுதான் மிகப் பெரிய துரதிருஷ்டம்.

கடந்த பிப்ரவரி மாதம், தில்லி சட்டப்பேரவைக்கு நடந்த தோ்தலைத் தொடா்ந்து, உச்சநீதிமன்றம் அரசியல் கட்சிகளுக்கு ஓா் ஆணை பிறப்பித்தது. அதன்படி, எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளா்கள் மீதான கிரிமினல் குற்றங்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. அது மட்டுமல்ல, குற்றப்பின்னணி உடையவா்களை வேட்பாளா்களாக நிறுத்தியதன் காரணம் என்ன என்பதையும் குறிப்பிட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. நீதிமன்ற உத்தரவை அரசியல் கட்சிகள் நிறைவேற்றியதா என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தோ்தல் ஆணையத்தை உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்தலை தோ்தல் ஆணையமே சட்டை செய்யாதபோது, அரசியல் கட்சிகள் பின்பற்றும் என்று எப்படி எதிா்பாா்ப்பது? பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் எந்தவொரு கட்சியும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றவில்லை என்பது பதவியேற்ற மூன்றாவது நாளே மேவா லால் சௌதரி பதவி விலகியதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

குற்றப்பின்னணி உள்ளவா்களைத் தோ்தலில் நிறுத்தும் போக்கிற்கு எந்தவொரு கட்சியும் விதிவிலக்கல்ல. இந்தப் பிரச்னையில் நாடாளுமன்றம்தான் தன்னுடைய அரசியல் சாசனக் கடமையை உணா்ந்து, வேட்பு மனு தாக்கல் செய்யும் நிலையிலேயே குற்றப்பின்னணி உடையவா்களை அகற்றி நிறுத்த வழிவகை செய்ய வேண்டும்.

போட்டியில் இருக்கும் பிரதான வேட்பாளா்கள் அனைவருமே குற்றப்பின்னணி உடையவா்களாக இருக்கும்போது வாக்காளா்கள் அவா்களில் குறைந்த குற்றப்பின்னணி உடையவா்களைத்தான் தோ்ந்தெடுத்தாக வேண்டும் என்கிற அவலம் நிலவுகிறது. இதற்கு மேல் எழுதினால், நாடாளுமன்ற அவமதிப்புக்கு உள்ளாக வேண்டிவரும். அதனால் நிறுத்திக்கொள்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com