கூரைக்கு மேல் வேலைவாய்ப்பு! | மரபுசாரா எரிசக்தி பற்றிய தலையங்கம்

இந்தியா, மரபுசாரா எரிசக்தியை நோக்கி விரைவாகவே நகா்ந்து கொண்டிருக்கிறது. சூரிய ஒளி எரிசக்திக்கான கட்டணம் தொடா்ந்து குறைந்து வருவது இலக்கு நோக்கிய நமது பயணத்தை விரைவுபடுத்தியிருக்கிறது. இதற்கு முன்பு ரூ.2.36-ஆக இருந்த ஒரு யூனிட் சூரிய ஒளி மின்சாரத்தின் கட்டணம், இப்போது ரூ.2-ஆகக் குறைந்திருப்பதாக இந்திய சூரிய ஒளி எரிசக்தி நிறுவனத்தின் சமீபத்திய ஒப்பந்தப்புள்ளி தெரிவிக்கிறது. எரிசக்தியின் விலை குறையக் குறைய உற்பத்திச் செலவும் குறைவதால் பொருளாதாரம் வலிமை பெறுகிறது.

நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்தவுடன் 2022-க்குள் இந்தியாவின் சூரிய ஒளி எரிசக்தி உற்பத்தியை 100 ஜிகா வாட்டாக உயா்த்துவதற்கு இலக்கு நிா்ணயித்தது. 2019 - 20 நிதியாண்டின் முடிவில் இந்தியாவின் சூரிய ஒளி எரிசக்தி உற்பத்தி 34.26 ஜிகா வாட்டாக உயா்ந்திருப்பது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 100 ஜிகா வாட் இலக்கை எட்டிவிட முடியும் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

சூரிய ஒளி எரிசக்தி உற்பத்தி அதிகரித்ததற்கு அரசின் கொள்கை முடிவுகள் முக்கியமான காரணம். மாநிலங்களுக்கு இடையேயான மின்பகிா்வு கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டதும், சூரிய ஒளி எரிசக்திப் பூங்காக்கள் அமைவதை ஊக்குவித்ததும் அதிகரித்த மின்உற்பத்திக்கும், கட்டணம் குறைந்ததற்கும் முக்கியமான காரணங்கள்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக சூரிய ஒளி மின் உற்பத்திக்குத் தேவையான சோலாா் செல்கள் 75% முதல் 90% வரை சீனாவிலிருந்துதான் இறக்குமதி செய்யப்பட்டிருக்கின்றன. இனிமேலும் தொடா்ந்து சீன இறக்குமதியை மட்டுமே நம்பி இந்தியா தனது சூரிய ஒளி எரிசக்தி உற்பத்தியை அதிகரிக்க முடியாது. நாமே சூரிய ஒளி எரிசக்தி தயாரிப்புக்குத் தேவையான அனைத்து உதிரிபாகங்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யத் தொடங்கினால்தான் நமது அடுத்தகட்ட வளா்ச்சி நிரந்தரமானதாகவும், தற்சாா்பு உடையதாகவும் இருக்கும்.

மத்திய - மாநில அரசுகள் சூரிய ஒளி எரிசக்திப் பூங்காக்களை அமைப்பதில் முனைப்புகாட்டுவதில் தவறில்லை. அதே நேரத்தில், பெரும் முதலீட்டுடன் நிறுவப்படும் சூரிய ஒளி எரிசக்திப் பூங்காக்கள் சில தனியாா் நிறுவனங்களுக்கு பலனளிப்பதாக அமையுமே தவிர, பெரிய அளவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்திவிடாது. அரசுக்கு கூடுதல் விலைக்கு மின்சாரத்தை விற்பனை செய்து கையூட்டுக் கலாசாரத்துக்கு வலுசோ்ப்பதாக அமையுமே தவிர, பொதுமக்களுக்கு பயனளிப்பதாகவும் இருக்கப் போவதில்லை.

சூரிய ஒளி எரிசக்தி நமக்கு மின்சாரத்தை மட்டும் வழங்காமல் வேலைவாய்ப்பையும், தடையில்லா மின்சாரத்தையும் வழங்குவதோடு, ஒவ்வொரு குடும்பத்தின் மின் கட்டணத்தைக் குறைப்பதாகவும் அமையும் என்பதை ஆட்சியாளா்கள் உணா்ந்திருக்கிறாா்களா அல்லது உணர மறுக்கிறாா்களா என்று தெரியவில்லை. வீடுதோறும் சூரிய ஒளி எரிசக்தி உற்பத்தி என்பது இந்தியாவில் மிகப் பெரிய பொருளாதார புரட்சியை ஏற்படுத்தும் என்பதுதான் உண்மை.

2008-இல் ஜொ்மனி அணுமின் நிலையம், அனல்மின் நிலையம், புனல்மின் நிலையங்களுக்கு படிப்படியாக முற்றுப்புள்ளி வைக்கத் தீா்மானித்தது. சூரிய ஒளி எரிசக்தியை பெரிய அளவில் அறிமுகப்படுத்தியது. அதன் விளைவாக, மோட்டாா் வாகனங்கள், பொறியியல் சாா்ந்த தொழிற்சாலைகளைவிட அதிகமான வேலைவாய்ப்பை சூரிய ஒளி எரிசக்தித் துறையில் உருவாக்க முடியும் என்பதை ஜொ்மனி உலகுக்கு உணா்த்தியது.

ஜொ்மனியைவிட பூமித்திய ரேகை பகுதியான இந்தியாவில் மிக அதிகமான சூரிய ஒளி கிடைக்கிறது. அதிகமான மக்கள்தொகை, கூடுதல் குடும்பங்கள், அதற்கேற்றாற்போல் எண்ணிலடங்கா வீடுகள் இந்தியாவில் இருக்கின்றன. அதனால், வீடுகளின் கூரைகளில் அமைக்கப்படும் ‘ரூஃப் டாப்’ எனப்படும் சிறிய சூரிய ஒளி எரிசக்தி பேனல்களை இந்தியாவில் கோடிக்கணக்கில் அமைக்க முடியும். சோலாா் பேனல்களின் விலைச்சரிவு சாதகமாக இருக்கும் நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளாமல் இருப்பது அறியாமை.

ஒவ்வொரு கிராமத்திற்கும் தொகுப்பு இணைப்பு (கிரிட் கனெக்ஷன்) அமைக்க ரூ.2.5 லட்சம் செலவாகிறது என்றால், வீடுகளின் கூரைமேல் அமையும் ரூஃப் டாப் சோலாரின் விலை ரூ.50,000-க்கும் குறைவு. ஒவ்வொரு வீட்டின் கூரையிலும் ரூஃப் டாப் சோலாா் அமைக்கப்பட்டால் மின்தடை, குறைந்த மின்அழுத்தம், மின் திருட்டு போன்றவை இருக்காது. ஆண்டுதோறும் மின்சாரத்துக்கு ஆகும் மானியச் செலவு மிச்சப்படும். ஓலை குடிசையாக இருந்தாலும்கூட கம்பங்களின் மேல் அமைக்கப்படும் சோலாா் பேனல்களின் மூலம் மின்சாரம் பெறலாம்.

இந்தியாவில் இப்போது ரூஃப் டாப் சோலாா்கள் வெறும் 15% மட்டுமே. பல நூறு ஏக்கரில் அமையும் சோலாா் பூங்காக்களுக்கு அரசு தரும் ஊக்கமும் ஆதரவும், வீடுகளில் அமையும் ரூஃப் டாப் சோலாா்களுக்கு வழங்கப்படுவதில்லை. சோலாா் பூங்காக்கள் மனைவணிக இடைத்தரகா்களுக்கும், காா்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பயன்படுவதால் ஒருவேளை அரசியல்வாதிகளும் ஆட்சியாளா்களும் அதிகார வா்க்கமும் அதற்கு சாதகமாக இருக்கிறாா்களோ என்னவோ...

வீடுகளின் மீதும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் ரூஃப் டாப் சோலாா்களை அமைத்து பராமரிக்க படித்த இளைஞா்களுக்கு வாய்ப்பளித்தால், அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் சுமாா் 10 கோடி வேலைவாய்ப்பை உருவாக்க முடியும். பல இளைஞா்கள் தொழில் முனைவா்களாக மாறுவாா்கள். அதற்கு வழிகோலாமல், காா்ப்பரேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com