தீர்ந்தது குழப்பம்! | திராவிட அரசியல் குறித்த தலையங்கம்


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஆறு மாதங்களே இருக்கும் நிலையில், தமிழகத்தின் இரண்டு முக்கியமான திராவிடக் கட்சிகளும் அதை எதிர்கொள்வதற்கான முனைப்பில் இறங்கிவிட்டன. எதிர்க்கட்சியான திமுக, நீண்ட நாள்களாக முடிவெடுக்காமல் தள்ளிப் போட்டிருந்த பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர்கள் பதவிகளுக்கான நியமனங்களை கடந்த மாதம் அறிவித்தது. இப்போது, ஆளும் அஇஅதிமுகவும் முதல்வர் வேட்பாளரை அறிவித்துக் களமிறங்கத் தயாராகிவிட்டது.

அதிமுக-வில் ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்தார்கள். சொத்துக் குவிப்பு வழக்கும், சசிகலாவின் வற்புறுத்தலால் தனது பதவியை ராஜிநாமா செய்த ஓ. பன்னீர்செல்வத்தின் தர்ம யுத்தமும் கட்சிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தின. ஓ. பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், எடப்பாடி கே. பழனிசாமி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆதரவுடன் 2017 பிப்ரவரி 16 அன்று முதல்வரானார். நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் அவர் வெற்றி பெற்றது முதல், பல நிகழ்வுகள், சவால்கள் என்று தொடர்கின்றன.

ஆறே மாதத்தில் ஓ. பன்னீர்செல்வமும் அவரது ஆதரவு எம்எல்ஏ-க்களும் மீண்டும் தாய்க் கட்சிக்கே திரும்பிவிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பல்வேறு எதிர்ப்புகளுக்கு இடையிலும் வெற்றிகரமாக இதுவரை தொடர்கிறது. 2017 செப்டம்பர் மாதம் நடந்த பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி, எடப்பாடி பழனிசாமி முதல்வராகவும், ஓ. பன்னீர்செல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்வது என்று தீர்மானிக்கப்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளில் அதிமுகவும், அதன் தலைமையிலான அரசும் எதிர்கொண்ட சவால்கள் ஏராளம். இப்போது அரசு கவிழும், அதிமுக உடையப் போகிறது போன்ற பல்வேறு ஊகங்களையும் பழனிசாமி - பன்னீர்செல்வம் ஆகியோரின் இரட்டைத் தலைமை சாதுரியமாக எதிர்கொண்டவிதம் அசாத்தியமான அரசியல் சாகசம் என்றுதான் கூற வேண்டும். 2019 மக்களவைத் தேர்தலில் தோல்வி என்றால், சட்டப்பேரவைக்கு நடந்த எல்லா இடைத்தேர்தல்களும் மாநில ஆட்சியின் மீது மக்களுக்கு அதிருப்தி இல்லை என்பதை வெளிப்படுத்தின.

இரட்டைத் தலைமை என்பது ஒன்றும் தமிழகத்திற்கும், திராவிட அரசியலுக்கும் புதிதொன்றுமல்ல. அண்ணாவின் மறைவுக்குப் பிறகு இதேபோன்றதொரு சூழல் 1969-இல் திமுகவில் நிலவியது. அண்ணாவால் பொதுச்செயலாளராக அடையாளம் காட்டப்பட்டு, அவரது அமைச்சரவையில் இரண்டாவது இடத்தில் இருந்த இரா. நெடுஞ்செழியனைப் பின்னுக்குத் தள்ளி, எம்ஜிஆரின் பின் துணையுடன் சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று மு. கருணாநிதி முதல்வரானபோது, அதிமுகவில் நிலவியது போன்ற குழப்பம் காணப்பட்டது. அதுவரை இல்லாத தலைவர் பதவி உருவாக்கப்பட்டு, முதல்வராக இருந்த கருணாநிதி தலைவராகவும், விலகி நின்ற இரா. நெடுஞ்செழியன் பொதுச்செயலாளராகவும் நியமிக்கப்பட்டு சமரசம் ஏற்படுத்தப்பட்டது.

அரசியல் அனுபவம் என்று பார்த்தால் எடப்பாடி பழனிசாமியும், நிர்வாக அனுபவம் என்று சொன்னால் ஓ. பன்னீர்செல்வமும் முதன்மை பெறுவார்கள். 1974-ஆம் ஆண்டில் எம்ஜிஆர் இருக்கும்போதே கிளைக்கழகச் செயலாளராகத் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கியவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. 1989-இல் அதிமுக பிளவுபட்டிருந்தபோது, சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். 1998-இல் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2011 முதல் ஜெயலலிதாவின் அமைச்சரவையிலும், ஓ. பன்னீர்செல்வம் அமைச்சரவையிலும் முக்கியப் பொறுப்புகள் வகித்தவர். 2017 பிப்ரவரி முதல் பல்வேறு சவால்களையும் சமாளித்து முதல்வராகத் தொடர்பவர்.

ஓ. பன்னீர்செல்வத்தின் பின்னணியும் எள்ளளவும் குறைந்ததல்ல. அதிமுக உருவான காலத்தில் கட்சியின் தொண்டராகத் தன்னை இணைத்துக் கொண்டவர். பெரியகுளம் நகராட்சித் தலைவராக 1996 முதல் 2001 வரை இருந்தவர். 2001-இல் ஜெயலலிதா அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ளப்பட்டவர். பின்னர் ஜெயலலிதாவால் முதல்வராக்கப்பட்டவர். மூன்று முறை முதல்வராக இருந்தவர். இந்திய அரசியலில் "விசுவாசம்' என்பதற்கு அடையாளமாக சுட்டிக்காட்டப்படுபவர்.

ஜெயலலிதாவிடம் ஓ.  பன்னீர்செல்வத்துக்கு இருந்த விசுவாசத்துக்கு எள்ளளவும் குறைந்ததல்ல, அவருக்கு கட்சியின் மீதிருக்கும் விசுவாசம். இப்போது கட்சி பிளவுபடாமல் இருப்பதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பதற்கு அவர் அளித்திருக்கும் ஆதரவு அதை வெளிப்படுத்துகிறது. தேர்தலை சந்திக்க இருக்கும் நேரத்தில் முதல்வர் வேட்பாளர் மாற்றப்படுவதோ, அறிவிக்கப்படாமல் இருப்பதோ, எதிரிகளைக் களத்தில் சந்திப்பதில் பலவீனமாகக் கருதப்படும் என்பதை உணர்ந்து செயல்பட்டிருக்கும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் முடிவைப் பாராட்ட வேண்டும்.

கடந்த மூன்று ஆண்டுகளில் எத்தனை எத்தனையோ பிரச்னைகளையும் சவால்களையும் எதிர்கொண்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ளத் தெரிந்த "சாமானிய உழவர்' எடப்பாடி பழனிசாமி. கட்சிக்குள் ஒருங்கிணைப்பை ஏற்படுத்திவிட்ட நிலையில், தேர்தலை எப்படி சந்தித்து வெற்றி பெறப்போகிறார் என்பதுதான் இப்போது அவர் எதிர்கொள்ளும் சவால்.

திமுக-வில் மு.க.ஸ்டாலின், அதிமுக-வில் எடப்பாடி கே. பழனிசாமி. தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. சபாஷ், சரியான போட்டி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com