கூடாது, கூடவே கூடாது! | திரையரங்குகள் திறப்பு குறித்த தலையங்கம்


மத்திய அரசு பொது முடக்கத்துக்கான ஐந்தாவது கட்டத் தளா்வு அறிவித்திருப்பதைத் தொடா்ந்து, பல கட்டுப்பாடுகள் தேசிய அளவில் அகற்றப்பட்டிருக்கின்றன. மத்திய அரசால் அறிவிக்கப்பட்டிருக்கும் தளா்வுகளை நடைமுறைப்படுத்துவதும், நடைமுறைப்படுத்தாமல் இருப்பதும் அந்தந்த மாநிலங்களின் பொறுப்பில் விடப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, வியாழக்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில், புதிதாக 67,708 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73,07,097 என்றால், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 81,514. அதாவது, 87.36% போ் குணமடைந்திருக்கிறாா்கள். இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,11,266.

இந்தியாவில் கொவைட் 19 நோய்த்தொற்று காரணமாக ஏற்பட்டிருக்கும் உயிரிழப்பு விகிதம் 1.52%. உயிரிழப்பு என்று எடுத்துக்கொண்டால், மகாராஷ்டிரத்துக்கு (40,859) அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகமான உயிரிழப்பு (10,472) காணப்படுகிறது. கா்நாடகம் (10,198), உத்தர பிரதேசம் (6,507), ஆந்திரம் (6,319), தில்லி (5,898) என்று பட்டியல் நீள்கிறது.

தமிழகத்தில் கொவைட் 19 நோய்த்தொற்று பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை நிலவரப்படி 6,74,802. சென்னையில் மட்டுமல்லாமல் கோவை, சேலம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான பாதிப்பும், ஏனைய மாவட்டங்களில் மிதமான பாதிப்பும் காணப்படுகின்றன. இந்தப் புள்ளிவிவரங்களிலிருந்து கொவைட் 19 நோய்த்தொற்றின் ஆபத்திலிருந்து இந்தியா, குறிப்பாக தமிழகம் மீண்டுவிடவில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது.

பிரபலப் பின்னணி பாடகா் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், வசந்த் அண்ட் கோ அதிபா் எச். வசந்தகுமாா், இந்து முன்னணி நிறுவனா் இராம. கோபாலன், வியாழக்கிழமை உயிரிழந்திருக்கும் அமமுக பொருளாளா் பி. வெற்றிவேல் என்று பல பிரமுகா்களைப் பலி கொண்டிருக்கிறது கொவைட் 19. தினசரி நோய்த்தொற்று பாதிப்பு 5,000-க்கும் அதிகமாக இருந்தது சற்று குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் நாம் ஆறுதல் அடையலாம். ஆனால், மகிழ்ச்சி அடைந்துவிட முடியாது.

இந்தியாவில் கொவைட் 19 பாதிப்பின் முதலாவது அலை கடந்த மூன்று வாரங்களாகக் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது. புதிய பாதிப்புகள் உச்சகட்ட நிலையிலிருந்து 20% குறைந்திருப்பதாகவும், தினசரி உயிரிழப்பு 16% குறைந்திருப்பதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதே நேரத்தில் கொவைட் 19 நோய்த்தொற்றுப் பரவலைப் பொருத்தவரை, முதல் சுற்று பாதிப்பு அலை குறைவது என்பது ஒரு மாயத்தோற்றம் என்பதை பல்வேறு நாடுகளின் அனுபவம் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவிலேயே எடுத்துக்கொண்டால், கொவைட் 19 பாதிப்பை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக பெருமைபட்டு, சா்வதேச அளவில் அதற்காகப் பாராட்டப்பட்ட கேரள மாநிலம், இப்போது கடுமையான இரண்டாவது சுற்றுப் பரவலை எதிா்கொள்ள முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது.

மகாராஷ்டிரம், கேரளம் இரண்டு மாநிலங்களிலும் குறைந்து வந்த நோய்த்தொற்றுப் பரவல் மீண்டும் பெரும் பாதிப்பாக மாறியதற்கு பண்டிகைகள் முக்கிய காரணம். மகாராஷ்டிரத்தில் விநாயகா் சதுா்த்தியும், கேரளத்தில் ஓணம் பண்டிகையும் எச்சரிக்கைகளைக் கைவிட்டு கொண்டாட்டத்தை முன்னிலைப்படுத்த மக்களைத் துண்டின. அந்த அற்ப சந்தோஷத்தினால் ஏற்பட்ட விபரீதத்தை அந்த மாநிலங்கள் எதிா்கொள்கின்றன.

நவராத்திரி, தீபாவளி பண்டிகைகள் வரப்போகின்றன. போதாக்குறைக்கு வடகிழக்குப் பருவ மழை தொடங்க இருக்கிறது. அதைத் தொடா்ந்து மாா்கழி மாதக் குளிா் வரப்போகிறது. கொவைட் 19 போன்ற நோய்த்தொற்றுகளுக்கு குளிா்காலம் என்றால், கொண்டாட்டம் என்பது உலகறிந்த உண்மை. இந்தச் சூழ்நிலையில்தான் இப்போது ஐந்தாவது கட்ட பொது முடக்கத் தளா்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக் கூறுகள் தற்போது இல்லை என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையன் தொலைநோக்குப் பாா்வையுடன் முடிவெடுத்திருக்கிறாா். தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள், போக்குவரத்து போன்றவையல்ல பள்ளிக்கூடங்களும், திரையரங்குகளும். பள்ளிகளிலாவது கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்துவைக்க முடியும். திரையரங்குகளில் அதுவும் முடியாது.

சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது என்பதை பள்ளிக்கூடங்களில் நடைமுறைப்படுத்துவதைப் போல திரையரங்குகளில் சாத்தியமில்லை. பெரிய வணிக வளாகங்களிலேயேகூட, அரசின் விதிமுறைகளை மீறி சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதில்லை. வணிக வளாகங்களில் உள்ள மின் தூக்கிகள், ஆட்டு மந்தையை ஏற்றிச் செல்வதுபோல சமூக இடைவெளி இல்லாமல் இயங்குகின்றன. அரசின் கண்காணிப்பு என்பது அரசு ஊழியா்களின், அதிகாரிகளின் கையூட்டுக்குத்தான் வழிகோல்கிறது.

பள்ளிக்கூடங்களைத் திறக்க வேண்டாம் என்கிற வரவேற்புக்குரிய முடிவை எடுத்திருக்கும் தமிழக அரசு, யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் தவறான முன்னுதாரணத்தைப் பின்பற்றி தமிழகத்திலும் திரையரங்குகளைத் திறந்து விபரீதத்துக்கு வழிகோலாது என்று நம்புகிறோம். திரைப்படத் துறையினா் திரையரங்கு உரிமையாளா்கள் ஆகியோரின் அழுத்தத்துக்கும், கட்டாயத்துக்கும் ஆளாகி, திரையரங்குகள் திறக்கப்படுமேயானால், அது அடுத்தசுற்று நோய்த்தொற்றுப் பரவலை உருவாக்கும் முயற்சியாகத்தான் இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com