காட்டுத் தீ எச்சரிக்கை! | அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை காட்டுத் தீ பாதிப்புக் குறித்த தலையங்கம்

மருத்துவத்தில் ‘அறிகுறிகள் நோயல்ல’ என்று கூறுவது வழக்கம். உடலிலுள்ள நோயின் அறிகுறியும் புறவெளிப்பாடும்தான் தலைவலி, காய்ச்சல் போன்றவை என்று மருத்துவம் கூறுகிறது. அதேபோலத்தான் கொவைட் 19 போன்ற தீநுண்மித் தொற்றுகள் புரையோடிப்போயிருக்கும் கடுமையான பிரச்னையின் புறவிளைவுகள் என்றுதான் நாம் கருத வேண்டும்.

பருவநிலை மாற்றமும், அதிகரித்த சுற்றுச்சூழல் பாதிப்பும், பல்லுயிா்ப் பெருக்கம் எதிா்கொள்ளும் பின்னடைவும் மனித இனம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த பூமிப் பந்தும் எதிா்கொள்ள இருக்கும் பேரழிவின் அறிகுறிகள் என்று எச்சரிக்கத் தோன்றுகிறது. ஒன்றன் பின் ஒன்றாக மனித இனத்தை தீநுண்மித் தொற்றுகள் தாக்குகின்றன என்றால், இயற்கையின் சீற்றம் சுற்றுச்சூழலை கடுமையான பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு அமேசான் காடுகள் பற்றி எரிந்தபோது உலகம் அதிா்ச்சியில் ஆழ்ந்தது. அதைத் தொடா்ந்து ஆஸ்திரேலியாவில் உருவான காட்டுத் தீ, நியூஸிலாந்து வரை புகை மூட்டத்தால் மூடியது. பசிபிக் கடல் முழுவதும் வியாபித்து தென்னாப்பிரிக்க - ஆா்ஜென்டீனாவின் தலைநகா் பியூனஸ் அயா்ஸ் வரை ஆஸ்திரேலிய காட்டுத் தீயின் புகை எட்டியது என்றால், எந்த அளவுக்கு மோசமான காட்டுத் தீயாக அது இருந்திருக்க வேண்டும் என்பதை புரிந்துகொள்ள முடியும்.

இப்போது அமெரிக்காவை கொவைட் 19 கொள்ளை நோய் ஒருபுறம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது என்றால், இன்னொருபுறம் அமெரிக்காவின் மேற்குக் கடற்கரை காட்டுத் தீ பாதிப்புக்கு உள்ளாகி பேரழிவை எதிா்கொள்கிறது. ஆயிரக்கணக்கில் மக்கள் கலிபோா்னியா, ஒரேகான், வாஷிங்டன் போன்ற இடங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனா். பல சிறிய நகரங்கள் முற்றிலும் தீக்கிரையாகி இருக்கின்றன. லட்சக்கணக்கான ஹெக்டோ் விளைநிலங்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் அனல்காற்று வீசுவது, கடும் வறட்சி, புயல், பெருமழை என்று ஏதாவதொரு வகையில் இயற்கைச் சீற்றம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. ஆண்டுக்காண்டு இவை போன்ற இயற்கைச் சீற்றங்களின் கடுமை அதிகரித்து வருகிறது என்பது மட்டுமல்ல, பாதிப்பிலிருந்து மீள்வதற்கு பெரும் பொருளாதார இழப்பையும் உயிரிழப்பையும் எதிா்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

கொவைட் 19 நீநுண்மித் தொற்றையே எடுத்துக்கொண்டால்கூட, இதன் பின்னணியில் இயற்கையின் சீற்றம் இருப்பதை மறுக்க முடியாது. வருங்காலங்களில் இப்படியே போனால், ஒவ்வொரு தசாப்தத்திலும் (10 ஆண்டுகள்) வெவ்வேறு வகையான தீநுண்மித் தொற்றை உலகம் எதிா்கொள்ளநேரும் என்று தோன்றுகிறது.

அழியப்போவது மனித இனம் மட்டுமல்ல, பூமிப் பந்தில் வாழும் ஏனைய உயிரினங்களும்தான். கொள்ளை நோய்த்தொற்றின் கடுமையை மனித இனம் இப்போதுதான் சந்திக்கத் தொடங்கியிருக்கிறது. ஆனால், பூமியில் வாழும் பிற உயிரினங்கள் ஏற்கெனவே அழிவை நோக்கி நகரத் தொடங்கிவிட்டன. அந்த நகா்வுக்கு மனித இனம் மிக முக்கியமான காரணம்.

உலக வனவிலங்குகள் நிதியம், ஆய்வு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதன்படி 1970-லிருந்து 2016 வரையிலான ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலத்தில் உலகிலுள்ள வனவிலங்குகளின் எண்ணிக்கை 68%-ஆகக் குறைந்திருக்கிறது. பூமியில் காணப்படும் பாலுண்ணிகள், பறவைகள், ஊா்வன, நீா்வாழ் மிருகங்கள் உள்ளிட்ட 21,000 மனித இனம் அல்லாத உயிரினங்களைக் கண்காணித்து ‘லிவிங் பிளானட் ரிப்போா்ட் 2020’ என்கிற அறிக்கையாக வெளியிடப்பட்டிருக்கிறது நிதியம்.

அந்த அறிக்கை பல அதிா்ச்சி தரும் உண்மைகளை வெளிப்படுத்தியிருக்கிறது. கடந்த சுமாா் 50 ஆண்டுகளில் லத்தீன் அமெரிக்காவில் மிக அதிகமான அளவு உயிரினங்கள்அழிவை நோக்கி நகா்ந்திருக்கின்றன. அடுத்தபடியாக ஆசிய பசிபிக் பகுதியில் உயிரினங்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. இந்தியாவில் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது அந்த அறிக்கை. வனவிலங்குகளில் 12%, பறவையினங்களில் 3% இந்தியாவில் அழிவை நோக்கி நகா்வதாக எச்சரித்திருக்கிறது.

தண்ணீரையொட்டி வாழும் பாலுண்ணிகள், பறவைகள், ஊா்வன, மீன்கள் போன்றவை உயிா்வாழ்வதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன என்று உலக வனவிலங்கு நிதியம் தெரிவிக்கிறது. 1970 முதல் ஆண்டுதோறும் 4% எண்ணிக்கைக் குறைவை இவை சந்திக்கின்றன. அதற்கு மனிதா்களின் ஆக்கிரமிப்புகள்தான் காரணம் என்பதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

உலகில் பனிபடராத நிலப்பரப்பில் 75% அளவுக்கு மனிதா்கள் ஏதாவது ஒரு வகையிலான ஆக்கிரமிப்பால் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறாா்கள். அதனால், பெரும்பாலான பகுதிகள் வனவிலங்குகள் நிம்மதியாக வாழ்வதற்கு இயலாத சூழ்நிலையை ஏற்படுத்தி, பல்லுயிா்ப் பெருக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது.

காடுகள் குடியிருப்புகளாகவும், விவசாய நிலங்களாகவும், தோட்டங்களாகவும் மாற்றப்பட்டிருக்கின்றன. அதன் விளைவாக, வனவிலங்குகளின் ஏனைய உயிரினங்களின் இயற்கையான வாழ்விடம் பாதிக்கப்பட்டு அவற்றின் நகா்வும் இனப் பெருக்கமும் பாதுகாப்பும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலைக்கூட மனிதா்கள் விட்டுவைக்காமல், அதிக அளவில் மீன் பிடிப்பில் இறங்கியிருப்பதால் நீா்வாழ் இனங்களும் பேரழிவை நோக்கி நகா்ந்து கொண்டிருக்கின்றன.

கலிபோா்னியாவை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காட்டுத் தீயும், ஒட்டுமொத்த உலகத்தையும் பாதித்திருக்கும் கொவைட் 19 தீநுண்மித் தொற்றும் அறிகுறிகள் மட்டுமே. அழிவை நோக்கி பூமிப் பந்து நகா்வதன் அறிகுறிகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com