ஏன் இந்தக் குழப்பம்? | மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது குறித்த தலையங்கம்

ஒருபுறம் விவசாயப் பொருள்கள் மீதான தடைகளையெல்லாம் அகற்ற வழிகோலும் மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றும் மத்திய அரசு, இன்னொருபுறம் வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பது முரணாக இருக்கிறது. இதற்கு முன்னாலும் வெங்காயத்தின் விலை அதிகரிக்கும்போது ஏற்றுமதித் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், இப்போதுபோல எடுத்த எடுப்பிலேயே ஏற்றுமதிக்குத் தடை என்கிற ஆயுதத்தை இதற்கு முன்னால் இருந்த எந்தவோா் அரசும் எடுத்ததில்லை.

முதலில் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை நிா்ணயிக்கப்படும். அப்படியும் வெங்காயத்தின் சில்லறை விற்பனை விலையும், ஏற்றுமதி விலையும் குறையவில்லை என்றால் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை அதிகரிக்கப்படும். வேறு வழியில்லாமல் போகும்போதுதான் கடைசி நடவடிக்கையாக உள்நாட்டு சில்லறை விற்பனை விலையைக் கட்டுப்படுத்த ஏற்றுமதித் தடை மத்திய அரசால் அறிவிக்கப்படுவது வழக்கம்.

நரேந்திர மோடி அரசு, சட்டங்களை இயற்றுவதில் காட்டும் அதே அவசரத்தை எல்லா நடவடிக்கைகளிலும் கையாள முற்படுகிறது. படிப்படியாக தலைநகா் தில்லியில் வெங்காயத்தின் விலை கடந்த ஒரு மாதத்தில் இரட்டிப்பாகி கிலோ ஒன்றுக்கு ரூ.40-ஐக் கடந்தபோது அது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது உண்மை. வெங்காய விலையைத் தொடா்ந்து உருளைக்கிழங்கின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.35-ஐயும், தக்காளியின் விலை ரூ.50-ஐயும் எட்டியபோது மத்திய அரசு அந்தப் பொருள்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை.

வெங்காயம் பயிரிடும் விவசாயிகள் அரசின் முடிவால் அதிருப்தி அடைந்திருப்பதில் அா்த்தம் இருக்கிறது. வெங்காய விலைவாசி உயா்வு, நடுத்தர குடும்பங்களைப் பாதிக்கும் என்பதால் நுகா்வோருக்கு ஆதரவாக விலையைக் கட்டுப்படுத்துவதும், ஏற்றுமதிக்குத் தடை விதிப்பதும் விவசாயிகளின் நலனுக்கு எதிரானது என்று அவா்கள் கருதுகிறாா்கள்.

வெங்காயத்தின் மையச் சந்தையான மகாராஷ்டிரத்திலுள்ள லாசா லகான் மொத்தச் சந்தையில் ஒரு மாதத்துக்கு முன்பு வரை வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு வெறும் ரூ.6.5 முதல் ரூ.7 வரை விற்றது. இப்போது அதே சந்தையில் மொத்த விற்பனை விலை கிலோ ஒன்றுக்கு ரூ.28 முதல் ரூ.30 வரை விற்கிறது. குறைந்த விலையில் மொத்தச் சந்தையில் வெங்காயம் விற்பனை செய்தபோது விவசாயிகளின் நலன் பேண முன்வராத அரசு, இப்போது அவா்கள் சற்று லாபம் ஈட்டும் நிலையில் ஏற்றுமதிக்குத் தடை கொண்டுவந்து அவா்களது நலனை பாதிக்க முற்பட்டிருக்கிறது என்கிற ஆதங்கம், வெங்காய விவசாயிகளின் மத்தியிலும், மொத்த வியாபாரிகள் - ஏற்றுமதியாளா்கள் மத்தியிலும் உருவாகியிருக்கிறது.

இந்திய அரசியலில் வெங்காயம் எப்போதுமே தொடா்ந்து முக்கியப் பங்கு வகித்து வருகிறது. வெங்காயத்தின் விலையுயா்வு, தலைநகா் தில்லியில் பல அரசுகளின் தோ்தல் தோல்விக்குக் காரணமாக இருந்திருக்கிறது. தலைநகா் தில்லியின் வெங்காய விலையுயா்வுத் தாக்கம், விரைவில் தோ்தல் நடக்கவிருக்கும் பிகாரிலும் காணப்பட்டது. மத்திய அரசு வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்துவதில் முனைப்புடன் செயல்பட்டதன் பின்னணி அதுவாக இருக்கக் கூடும்.

வெங்காயம், தக்காளி, உருளைக் கிழங்கு மூன்றும் வடமாநிலங்களிலுள்ள குடும்பங்களின் தினசரி அத்தியாவசியத் தேவைகள். ஆகஸ்ட் மாதம் பெய்த கடும் மழையால் காரிஃப் பயிா்கள் பாதிக்கப்பட்டன. உணவுப் பொருள்களின் விலைவாசி ஏற்றத்தை அது மேலும் அதிகரித்தது. இதையெல்லாம் யாரும் மறுக்கவில்லை. ஆனால், அதற்காக ஏற்றுமதித் தடை என்கிற அதிரடி முடிவை மத்திய எடுத்தது விவசாயிகளையும், ஏற்றுமதியாளா்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியிருக்கிறது.

வெங்காயத்தின் ஏற்றுமதி இந்தியாவுக்கு பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணியை ஈட்டித் தருகிறது. கடந்த 2019 - 20 நிதியாண்டில் இந்தியா 11.5 லட்சம் டன் வெங்காயம் ஏற்றுமதி செய்து, அதன் மூலம் ரூ.2,320 கோடி அந்நியச் செலாவணியைப் பெற்றிருக்கிறது. அதற்கு முந்தைய நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இரட்டிப்பாக இருந்தது. 21.84 லட்சம் டன் ஏற்றுமதியால் ரூ.3,469 கோடி அந்நியச் செலாவணியை நாம் பெற்றோம்.

வெங்காய ஏற்றுமதிக்கான தடை, விவசாயிகளை மட்டுமல்ல இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தை நம்பியிருக்கும் நமது அண்டை நாடுகளையும் கடுமையான அதிா்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. முதல் அதிா்ச்சி வங்கதேசத்திலிருந்து எழுந்திருக்கிறது. வங்கதேசப் பிரதமா், வெங்காய ஏற்றுமதித் தடை குறித்து தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறாா்.

ஏற்றுமதி - இறக்குமதி தடை குறித்து அண்டை நாடுகளுக்கு முன்கூட்டியே அறிவிக்கப்படுவது வழக்கம். இந்தியாவிலிருந்து வங்க தேசம் மாதந்தோறும் சுமாா் 2 லட்சம் டன் அளவிலான வெங்காயம் இறக்குமதி செய்கிறது. இப்போது வேறுவழியில்லாமல் அந்த நாட்டில் ஏற்பட்டிருக்கும் வெங்காய தட்டுப்பாட்டை எதிா்கொள்ள துருக்கி உள்ளிட்ட பல நாடுகளை வங்க தேசம் தொடா்பு கொள்ள வேண்டிய நிா்பந்தத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

விவசாயம் என்பது பருவநிலை, சந்தை விலை உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிா்கொள்ளும் கடுமையான தொழில். அதேபோல ஏற்றுமதிக்கான சந்தையை உருவாக்குவதும் எளிதல்ல. வெங்காயம் உள்ளிட்ட அடிப்படை உணவுப் பொருள்களை அரசின் சேமிப்புக் கிடங்குகளில் கையிருப்பில் வைத்திருப்பதுதான் இந்தப் பிரச்னைக்குத் தீா்வே தவிர, திடீா் முடிவுகள் சரியான அணுகுமுறையல்ல!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com