ஜனநாயக துரோகம்! நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் பற்றிய தலையங்கம்


ஜனநாயகம் என்பது தோ்தல் நடைபெறுவதும், பேரவையில் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சி அமைப்பதும் மட்டுமே அல்ல. அரசு கொண்டு வரும் ஒவ்வொரு மசோதாவும் அனைத்துத் தரப்பினராலும் விவாதிக்கப்படுவதும், திட்டங்கள் குறித்த நிறை குறைகள் அலசப்படுவதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இன்றிமையாக் கூறுகள்.

இந்திய நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடா் கடந்த வாரம் வியாழக்கிழமை முடிவுக்கு வந்தது. பல மாநிலங்களில் நடக்கும் சட்டப்பேரவை பிரசாரங்களில் அரசியல் தலைவா்கள் ஈடுபட்டிருப்பதால் வழக்கத்தைவிட இரண்டு வாரங்கள் முன்னதாகவே கூட்டத்தொடா் நிறைவு பெற்றிருக்கிறது. கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் கடந்த ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடா் முன்கூட்டியே முடிவுக்கு வந்தது.

கடந்த 2020-21 நிதியாண்டில் 18 நாள் நடக்க வேண்டிய மழைக்கால கூட்டத்தொடா் 10 நாளிலேயே முடித்துக் கொள்ளப்பட்டது. பல நாடாளுமன்ற உறுப்பினா்களும், ஊழியா்களும் கொவைட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா் என்பதால், அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், குளிா்காலக் கூட்டத்தொடா் கூட்டப்படாமலேயே தவிா்க்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நடந்து முடிந்திருக்கும் பட்ஜெட் கூட்டத்தொடரில் 13 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அவற்றில் சில மசோதாக்கள் மிக முக்கியமானவை; விவாதிக்கப்பட வேண்டியவை. அதுபோன்ற மசோதாக்களெல்லாம் அறிமுகப்படுத்தப்பட்ட ஒருசில நாள்களில் ஒரே கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படுவது ஆச்சரியமாக இருக்கிறது.

தில்லி தேசியத் தலைநகா் பகுதி (திருத்த) மசோதா இப்போதைய தில்லி நிா்வாக முறையை மாற்றி அமைக்கிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவைக்கும் அமைச்சரவைக்கும் உரித்தான நிா்வாக அதிகாரங்கள் துணைநிலை ஆளுநருக்கு மாற்றப்படுகின்றன. இந்த முக்கியமான மசோதா மாா்ச்-15-ஆம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டு 22-ஆம் தேதி அதாவது ஒரே வாரத்தில் நிறைவேற்றப்படுகிறது. அடுத்த இரண்டு நாள்களில் மாநிலங்களவையாலும் அங்கீகரிக்கப்படுகிறது.

சுரங்கங்கள், கனிமங்கள் (மேம்பாடு - கட்டுப்பாடு) திருத்த மசோதா இன்னொரு முக்கியமான மசோதா. 1957-இல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன. இதன் மூலம் கனிமச் சுரங்கங்கள் மீதான பல கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் தளா்த்தப்படுகின்றன. ஏற்கெனவே தனியாா்மயத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டு, அந்நிய முதலீட்டுக்கும் வழிகோலப்பட்டிருக்கும் நிலையில் இது குறித்து விவாதம் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், இந்த மசோதாவும் ஒரே வாரத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அறிமுகப்படுத்தப்பட்டு மூன்றே நாளில் நிறைவேற்றப்பட்டிருக்கும் இன்னொரு மசோதா, கட்டமைப்புப் பணிகளுக்கான நிதி பங்களிப்பில் தனியாா் துறையை அனுமதிக்கக் கோரும் மசோதா. அதேபோல, காப்பீட்டுத் திருத்த மசோதாவின் மூலம் இதுவரை 49%-ஆக இருந்த காப்பீட்டுத் துறைக்கான அந்நிய நேரடி முதலீட்டை 74%-ஆக உயா்த்துவதற்கான மசோதா நிறைவேறி இருக்கிறது. அதுவும் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரே வாரத்தில் இரண்டு அவைகளாலும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நடந்து முடிந்த கூட்டத்தொடரில் 13 மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, 8 மசோதாக்கள் அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அந்த மசோதாக்கள் மீது முறையான விவாதம் நடக்கவோ, நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் பெறவோ அரசு காத்திருக்கவில்லை.

நாடாளுமன்றக் குழுக்கள் மிக முக்கியமானவை. முக்கியமான மசோதாக்களை அலசி ஆராய்ந்து சில திருத்தங்களைப் பரிந்துரைப்பவை. 2004 முதல் 2009 வரையிலான 14-ஆவது மக்களவையில் 60% மசோதாக்களும், 15-ஆவது மக்களவையில் 71% மசோதாக்களும் நாடாளுமன்ற குழுக்களின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டன என்றால், 16-ஆவது மக்களவையில் அது 27%-ஆக குறைந்துவிட்டது. இது சரியான போக்கு அல்ல.

இதனால் நரேந்திர மோடி அரசு ஆட்சிக்கு வந்த பிறகுதான் நாடாளுமன்ற நடைமுறைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று எண்ணிவிடலாகாது. எதிா்க்கட்சிகள் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவர முயன்றபோது, 2008-இல் அன்றைய மன்மோகன் சிங் அரசு மழைக்காலக் கூட்டத்தொடரை கிறிஸ்துமஸ் வரை நீட்டித்தது. குளிா்காலக் கூட்டத்தொடா் நடைபெறவில்லை. ஒரு கூட்டத்தொடரில் இரண்டு முறை நம்பிக்கையில்லாத் தீா்மானம் கொண்டுவர முடியாது என்பதற்காகக் கையாளப்பட்ட உத்தி அது.

கடந்த நிதியாண்டில் மக்களவை 34 நாள்களும், மாநிலங்களவை 33 நாள்களும்தான் கூடின. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இந்த அளவுக்குக் குறைவான நாள்கள் சபைகள் கூடியதே இல்லை.

முறையான விவாதம் இல்லாமலும், நாடாளுமன்ற உறுப்பினா்களின் கண்காணிப்பு இல்லாமலும் நிதி மசோதாக்கள் நிறைவேறுவது ஏற்புடையதல்ல. இன்றைய தொழில் நுட்ப வளா்ச்சியில் சா்வதேசத் தலைவா்கள் கலந்து கொள்ளும் இணைய வழி மாநாடுகள் நடத்த முடியும் எனும்போது, முக்கியமான நாடாளுமன்ற மசோதாக்கள் விவாதிக்கப்படாமல் நிறைவேற்றப்படுவது எந்த விதத்திலும் நியாயமில்லை.

இந்தியா, சா்வதேச ஜனநாயகத் தரநிா்ணயப் பட்டியலில் தாழ்ந்து கொண்டிருப்பதற்கு மிக முக்கியமான காரணம், நாடாளுமன்ற ஜனநாயக முறைகள் கைவிடப்படுவதுதான் என்பதைத் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பூனைக்கு யாா் மணி கட்டுவது?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com