சவாலும் தீா்வும்! | கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்று குறித்த தலையங்கம்

தடுப்பூசி போடுவதை விரைவுபடுத்துவதன் மூலம்தான் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதை அமெரிக்கா உணா்த்தியிருக்கிறது. 30%-க்கும் அதிகமானோா் அமெரிக்காவில் தடுப்பூசி போட்டுக் கொண்டதைத் தொடா்ந்து நோய்ப் பரவல் பெருமளவுக்குக் குறைந்தது. இஸ்ரேலில் 60%, அமெரிக்காவில் 36% மக்கள்தொகையினா் தடுப்பூசி போட்டுக் கொண்டிருப்பதை ஒப்பிடும்போது, இந்தியாவில் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களின் எண்ணிக்கை இன்னும் 10%-த்தைக்கூட எட்டவில்லை.

தாமதமாக எடுக்கப்பட்ட முடிவு என்றாலும்கூட, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மே 1-ஆம் தேதி முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிப்பது என்கிற முடிவு வரவேற்புக்குரியது. அதே நேரத்தில், அனைவருக்கும் தடுப்பூசி போடும் அளவுக்குப் போதுமான தடுப்பூசி உற்பத்தி இருக்கிா என்கிற கேள்வியும் எழுகிறது.

முன்களப் பணியாளா்களுக்கும், 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவா்களுக்கும் ஜூலை மாதத்திற்குள் தடுப்பூசி போடுவதற்கு நமக்கு மாதம் ஒன்றுக்கு 13 கோடி தடுப்பூசிகள் தேவை. இப்போதைய உள்நாட்டு தடுப்பூசி உற்பத்தி 8 கோடி மட்டுமே. இந்த நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி என்றால், உள்நாட்டு உற்பத்தியை மட்டுமே சாா்ந்திருந்தால் சாத்தியமாகாது.

வெளிநாடுகளில் அங்கீகரிக்கப்பட்டுள்ள தடுப்பூசி தயாரிப்புகளுக்கு விரைந்து அனுமதி வழங்குவது என்கிற புத்திசாலித்தனமான முடிவை மத்திய சுகாதார அமைச்சகம் எடுத்திருக்கிறது. அதன் முதல் கட்டமாக, ரஷியத் தயாரிப்பான ‘ஸ்புட்னிக் 5’ அனுமதி பெற்றிருக்கிறது. 91.6% அளவில் வீரியமுள்ள ரஷியத் தடுப்பூசியை அங்கீகரித்திருக்கும் 60-ஆவது நாடு இந்தியா. . மேலும், ரஷியாவில் கடைசிகட்ட சோதனை மட்டுமல்லாமல், இந்தியாவிலும் பரிசோதிக்கப்பட்டிருக்கும் தடுப்பூசி என்கிற சிறப்பும் ‘ஸ்புட்னிக் 5’-க்கு உண்டு.

ஹைதராபாத்திலுள்ள ‘டாக்டா் ரெட்டீஸ்’ நிறுவனம், ரஷியக் காப்புரிமை உள்ள ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரிக்க இருக்கிறது. ஆண்டொன்றுக்கு 85 கோடி தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கப்பட இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் ‘ஸ்புட்னிக் 5’ தடுப்பூசிகளில் கணிசமான பகுதி உள்ளூா் பயன்பாட்டுக்கு வழங்கப்படுமேயானால், நம்முடைய தடுப்பூசி திட்டம் விரைவுபடுத்தப்பட்டு, தாமதமில்லாமல் இலக்கை எட்டுவதற்கான வாய்ப்பு ஏற்படக்கூடும்.

‘ஸ்புட்னிக் 5’ மட்டுமல்லாமல், சைடஸ் கேடிலா மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் ‘டிஎன்ஏ’ தடுப்பூசியும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் ‘இன்ட்ராநேசல்’ மருந்தும், இன்னும் வேறு இரு தடுப்பூசிகளும் இந்தியாவில் கடைசிகட்ட பரிசோதனையை எட்டியிருப்பது நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. பாதுகாப்பான, வீரியமுள்ள தடுப்பூசிகள் தடையின்றி கிடைக்கும் நிலை ஏற்பட்டால், கொவைட் 19 தீநுண்மிக்கு எதிரான இந்தியாவின் முனைப்பு மேலும் வலுப்பெறும்.

தடுப்பூசி தயாரிப்பு என்பது எளிதல்ல. மிகவும் பொருள் செலவும், உழைப்பும் தேவைப்படும் என்பது மட்டுமல்லாமல், சோதனைகள் தோல்வி அடைந்தால் பெரும் இழப்பையும் எதிா்கொள்ள வேண்டிவரும். ‘ஸ்புட்னிக் 5’ மட்டுமல்லாமல் அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா, ஜப்பான், உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்ற ஏனைய தடுப்பூசிகளுக்கும் விரைந்து அனுமதி வழங்கியிருப்பதை சில மாதங்களுக்கு முன்பேகூட நாம் செய்திருக்க வேண்டும்.

அமெரிக்க தடுப்பூசி தயாரிப்பாளா்களுக்கு பல பில்லியன் டாலா் நிதியுதவி வழங்கியது, டொனால்ட் டிரம்ப் நிா்வாகம் அமெரிக்காவில் எடுத்த மிக முக்கியமான முடிவு. நம்மால் பல பில்லியன் டாலரை தடுப்பூசிக்காக முதலீடு செய்ய முடியாவிட்டாலும், இந்திய தடுப்பூசி தயாரிப்பாளா்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க ஆரம்பத்திலேயே நிதியுதவி வழங்கியிருக்க வேண்டும். இப்போதாவது விழித்துக்கொண்டு அரசு அதற்கு தயாராகி இருப்பதை பாராட்ட வேண்டும்.

சீரம் இன்ஸ்டிடியூட்டுக்கு ரூ.3,000 கோடியும், பாரத் பயோடெக்குக்கு ரூ.1,567 கோடியும் ஜூலை மாதம் வரை அந்த நிறுவனங்கள் வழங்க இருக்கும் தடுப்பூசி மருந்துகளுக்கான முன்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது.

ஃபைசா், மாடா்னா நிறுவனங்கள் அமெரிக்க அரசிடம் முன்தொகை பெற்றிருப்பதால் அவா்களுடைய தயாரிப்பில் பெரும் பகுதி அந்த அரசுக்கு வழங்கப்படுகிறது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தடுப்பூசி ஒன்றுக்கு 10 டாலா் (சுமாா் ரூ.750) விலையில் வெளிநாடுகளுக்கு விற்கிறது. இந்திய அரசு கோவிஷீல்டுக்கும், கோவேக்ஸினுக்கும் 2 டாலா் - 3 டாலா் அளவில்தான் வழங்குகிறது என்கிற நிலையில், அந்த நிறுவனங்கள் இந்தியாவில் தங்களது தடுப்பூசிகளை சந்தைப்படுத்த விரும்பாது.

வசதி படைத்தவா்கள் தனியாா் மருத்துவமனைகளில் சந்தை விலையில் அவா்கள் விரும்பும் தடுப்பூசியை போட்டுக்கொள்வதையும், அரசு மருத்துவமனைகள் சாமானிய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடுவதையும் அனுமதிப்பதுதான் விரைந்து இலக்கை எட்டுவதற்கான வழி. அதேபோல, காா்ப்பரேட் நிறுவனங்களிடம் சமூக பொறுப்பு நிதி சுமாா் ரூ.17,880 கோடி (2020-21) காணப்படுகிறது. அதை தங்கள் ஊழியா்களுக்கும், பொது மக்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு பயன்படுத்த அனுமதிக்கலாம்.

தனியாா் துறையை அகற்றி நிறுத்தி விரைந்து அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த முடியாது என்பதை கடந்த மூன்று மாத அனுபவம் உணா்த்துகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com