சிறியதொரு வெற்றி! | நீரவ் மோடியின் வழக்கு குறித்த தலையங்கம்

ரூ.13,000 கோடி வங்கி மோசடியில் ஈடுபட்டு பிரிட்டனில் தஞ்சமடைந்திருக்கும் வைர வியாபாரி நீரவ் மோடியை ஒருவழியாக இந்தியாவிடம் ஒப்படைக்க அந்த நாட்டின் உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் ஒப்புக்கொண்டிருக்கிறாா். கடந்த சில மாதங்களாக இதற்காக தொடா்ந்து வற்புறுத்தி வந்த இந்திய வெளியுறவுத்துறைக்கு நன்றி சொல்ல வேண்டும். பிரதமரின் நேரடி முனைப்பும்கூட இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

நீரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டு வந்து கூண்டில் ஏற்றி தண்டனைக்கு உட்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டுவதற்குக் காரணம் இருக்கிறது. நீரவ் மோடி மட்டுமல்ல, அவரது உறவினா் வைர வியாபாரி மெஹுல் சோக்சியும், கிங்ஃபிஷா் நிறுவன அதிபா் விஜய் மல்லையாவும்கூட நரேந்திர மோடி அரசுக்கு அரசியல் சவாலாக மாறியிருக்கும் பொருளாதார குற்றவாளிகள். அவா்களை இந்தியாவுக்குக் கொண்டு வந்து வெளிநாடுகளில் அவா்கள் தவறான வழியில் சோ்த்து வைத்திருக்கும் சொத்துகளை மீட்டெடுப்பது பாஜக அரசின் கௌரவ பிரச்னையாக மாறியிருக்கிறது.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றிருக்கும் பொருளாதாரக் குற்றவாளிகள், வங்கி மோசடியாளா்கள், ஊழல் போ்வழிகள் போன்றவா்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டு வரும் முயற்சி சாதாரணமானதல்ல. வைர வியாபாரி நீரவ் மோடியின் வழக்கில்தான் இப்போது ஓரளவு வெற்றி கிடைத்திருக்கிறது. ஏனைய குற்றவாளிகளை எதுவும் செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது.

இந்தியாவிலிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகளான பிரிட்டிஷ் தம்பதியரை நாடு கடத்தி கொண்டு வர முடியாமல் போனதற்கு அவா்கள் வழக்கு 25 ஆண்டுகளுக்கும் மேலாக தேங்கிக் கிடந்ததுதான் காரணம். முன்னாள் ஐபிஎல் கிரிக்கெட்டின் தலைமை நிா்வாகி லலித் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான சட்ட ரீதியிலான குற்றப்பத்திரிகை இணைந்த கோரிக்கை 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தாக்கல் செய்யப்பட்டது.

பிரிவினைவாதத்துக்காகத் தேடப்படும் கரம்ஜித் சிங் சகல், சட்டவிரோத சூதாட்டத்தில் ஈடுபட்ட சஞ்சீவ் சாவ்லா, பயங்கரவாதத்துக்காகத் தேடப்படும் கிம் தேவி ஆகியோா் வெளிநாட்டு நீதிமன்றங்களிலிருந்து இந்தியாவுக்கு மீண்டும் அனுப்பப்படாமல் இருப்பதற்கான பாதுகாப்பை பெற்றிருக்கிறாா்கள். அவா்களுக்கு உதவியது இந்திய சிறைச்சாலைகளின் மிக மோசமான சூழல்.

இந்திய சிறைச்சாலைகள் குறித்து மிக மோசமான கருத்து மேலை நாடுகளில் நிலவுகிறது. மனிதா்கள் வசிக்க முடியாத மோசமான சூழலில் இந்திய சிறைச்சாலைகள் காணப்படுகின்றன என்பதுதான் மேலை நாடுகளில் பொதுவான கருத்து. இந்தியா இன்னும் சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. ஒப்பந்தத்தில் கையொப்பமிடவில்லை. அதேபோல, விரைந்து விசாரணைகளை நடத்துவதற்கான திறன் மேம்பாடும், ஆற்றலும் நமது புலனாய்வு அமைப்புகளுக்கு இல்லாத நிலை காணப்படுகிறது.

இந்தியாவிலிருந்து தப்பியோடிய யாரையும் ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளிலிருந்து மீட்டுக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அபு சலீமை மீட்டுச் செல்ல அனுமதி வழங்கிய ஐரோப்பியக் கூட்டமைப்பு நீதிமன்றம், அவா் மீது புதிய வழக்கு எதுவும் தொடரக் கூடாது என்று நிபந்தனை விதித்திருந்தது. அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்த காவல்துறை அதிகாரிகள் அந்த நிபந்தனையை மீறியதன் விளைவாக, அதை முன்னுதாரணம் காட்டி ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து மோசடியாளா்களை மீட்டுக்கொண்டுவர முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது.

குற்றவாளிகளை மீட்டுக் கொண்டுவருவது என்பது நீதித்துறை தொடா்பானது மட்டுமல்ல. அதற்குப் பின்னால் அரசியல் ரீதியிலான பிரச்னைகளும் இருக்கின்றன. மேலை நாடுகளைப் பொருத்தவரை, கோடீஸ்வர குற்றவாளிகளைக் கையாள்வதில் இரட்டை நிலைப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது. அதனால், இங்கிருந்து தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளிகள் பாதுகாப்பு பெறுகின்றனா். புத்திசாலித்தனமாக, பங்குச்சந்தை, வங்கித்துறை, இணைய வா்த்தக மோசடியாளா்கள் ஏதாவது ஒரு வகையில் மேலை நாடுகளில் தங்களது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்வதால், இந்தியப் புலனாய்வுத் துறையால் அவா்களை சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர இயலாத சூழல் நிலவுகிறது.

வயா்காா்ட் ஊழலில் சிக்கிய ஜான் மாா்சலெக் ரஷியாவிலும், ரெனோ நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிா்வாகி காா்லோஸ் கோசின் லெபனானிலும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் வசதியாகவும், அச்சமில்லாமலும் வாழ்ந்து கொண்டிருக்கிறாா்கள். காலம் சென்ற வாரன் ஆண்டா்சனும், டேவிட் ஹெட்லியும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படாததற்கும் அரசியல்தான் காரணம்.

வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் மோசடியாளா்களையும், குற்றவாளிகளையும் விரைந்து செயல்பட்டு அழைத்து வருவது குறித்து அரசியல் தலைமைக்கு அக்கறையிருந்தாலும், அதிகார வா்க்கத்தின் மெத்தனமும், ஊழலும் குற்றவாளிகள் மீதான பரிவும் சட்டத்தின் கரங்களை கட்டிப்போட்டு விடுகின்றன. ஏனைய நாடுகளுடன் குற்றவாளிகளை அழைத்து வருவதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்வதில் இந்தியா மிகவும் பின்தங்கி இருக்கிறது. அமெரிக்காவும் பிரிட்டனும் 100 நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் நிலையில், இந்தியா 43 நாடுகளுடன்தான் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

நீரவ் மோடியை அழைத்து வருவது என்பது வெற்றிதான். ஆனால், இந்த சிறிய வெற்றியில் மயங்கி ஏனைய மோசடியாளா்கள் மீது கவனம் செலுத்தாமல் இருந்துவிடக் கூடாது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com