மாற்றத்தின் அறிகுறி! | சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம் குறித்த தலையங்கம்

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நிறைவு பெற்றிருப்பது, மனித இனத்துக்குக் கிடைத்திருக்கும் அசாதாரண வெற்றி. 205-க்கும் அதிகமான நாடுகளின் 11,000-க்கும் அதிகமான போட்டியாளர்கள் 33 விளையாட்டுகளில் களம் கண்டு பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார்கள்.
 ஒலிம்பிக் 2020 நடக்குமா, நடக்காதா என்கிற ஐயப்பாட்டை உருவாக்கியது கொவைட் 19 தீநுண்மி நோய்த்தொற்று. கடந்த ஆண்டில் நடைபெற இருந்த 32-ஆவது ஒலிம்பிக் போட்டி ஓராண்டு தள்ளிப்போடப்பட்டது. ஜப்பானியர்களிடையேயும், உலக அளவிலும் கடுமையான எதிர்ப்புக்கும், அச்சத்திற்கும் நடுவிலும்கூட ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கும் ஜப்பான் அரசுக்கும், சர்வதேச ஒலிம்பிக் சங்கத்துக்கும் பாராட்டுகள்.
 2008-இல் துப்பாக்கி சுடுதலில் அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் வென்று 13 ஆண்டுகள் கழித்து இப்போது நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார். சர்வதேச தடகளப் போட்டிகளில் இந்தியாவால் தங்கம் வெல்ல முடியாது என்கிற கருத்தை 87.58 மீட்டர் தொலைவு ஈட்டியை வீசியெறிந்து முறியடித்து விட்டார் நீரஜ் சோப்ரா.
 கிரிக்கெட், ஹாக்கி, டென்னிஸ், கால்பந்து உள்ளிட்ட அணி சார்ந்த விளையாட்டுகளில் மட்டுமே சர்வதேச அளவிலான வெற்றிகளை ஈட்டி வந்திருக்கும் இந்தியா, "தடகளம்' என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், ஈட்டி எறிதல், உயரம் தாண்டுதல் போன்ற தனிநபர் போட்டிகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளைப்போல வெல்ல முடியாது என்கிற அபவாதம் இப்போது அகற்றப்பட்டிருக்கிறது.
 ஒலிம்பிக் வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது, 1900-இல் நடந்த பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஓட்டப் பந்தய வீரர் நார்மன் பிரிட்ச்சர்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் வென்றிருக்கிறார். ஆனால், அவர் பிரிட்டன் குடிமகன் என்பதால் அதை நாம் இந்திய வெற்றியாகக் கருத முடியாது.
 1984 லாஸ் ஏஞ்சலீஸ் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை நழுவவிட்ட பி.டி. உஷாவின் நிறைவேறாத தடகளத் தங்கப்பதக்கக் கனவு, 37 ஆண்டுகளுக்குப் பிறகு நீரஜ் சோப்ராவால் நனவாகி இருக்கிறது. 1960 ரோம் ஒலிம்பிக் போட்டியில் கண்ணிமைக்கும் நேரத்தில் வெண்கலப் பதக்கத்தை இழந்ததால் ஏற்பட்ட மில்கா சிங்கின் வாழ்நாள் சோகத்தை, நீரஜ் சோப்ராவின் தங்கப் பதக்கம் துடைத்தெறிந்திருக்கிறது.
 நீரஜ் சோப்ரா மட்டுமல்ல, இந்திய அணியைச் சேர்ந்த பல வீரர்கள் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்குப் பெருமை தேடித் தந்திருக்கிறார்கள். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியில் ஆறு பதக்கங்களை வென்ற நாம், இந்த முறை ஏழு பதக்கங்களை வென்றிருக்கிறோம். அமெரிக்கா, சீனாவுக்கு நிகராக நாம் பதக்கங்களை வெல்லவில்லை என்று ஆதங்கப்படுவதில் அர்த்தமில்லை. உலக விளையாட்டு அரங்கில் விளையாட்டு வல்லரசாக இந்தியா உயர்ந்து வருகிறது என்பதற்கான அறிகுறிகள் தோன்றத் தொடங்கிவிட்டன என்பதை டோக்கியோ ஒலிம்பிக் அறிவித்திருக்கிறது.
 பளு தூக்கும் போட்டியில் மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானுவும், மல்யுத்தப் போட்டியில் ஹரியாணாவைச் சேர்ந்த ரவிகுமார் தாஹியாவும் வெள்ளிப் பதக்கம் வென்றிருக்கிறார்கள். குத்துச்சண்டை போட்டியில் அஸ்ஸாமைச் சேர்ந்த லவ்லினாவும், பாட்மிண்டனில் தெலங்கானாவின் பி.வி. சிந்துவும், மல்யுத்தப் போட்டியில் பஜ்ரங் புனியாவும் வெண்கலப் பதக்கம் வென்றிருக்கிறார்கள். ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்றிருக்கிறது. இவை அனைத்துக்கும் சிகரம் வைத்தாற்போல, நீரஜ் சோப்ரா ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் பெற்று வந்திருக்கிறார்.
 2004 முதல் தொடர்ந்து மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்குப் பதக்கம் பெற்றுத்தந்த நமது துப்பாக்கி சுடும் அணியினர், இரண்டாவது முறையாகப் பதக்கம் வெல்லாமல் திரும்பி இருக்கிறார்கள். அதிதி அசோக், பவானி தேவி, ஃபௌவாத் மிர்ஸா மூவரும் பதக்க வாய்ப்பை இழந்தனர். அதேபோலத்தான் மகளிர் ஹாக்கி அணியும். ஆனால், சர்வதேச அளவில் இந்தியாவும் ஒரு கடுமையான போட்டி நாடு என்பதை அவர்கள் அனைவரும் நிறுவியிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும்.
 ஒலிம்பிக் போட்டியில் மிகப் பழைய விளையாட்டுகளில் ஒன்று வாள் வீச்சு. ஐரோப்பியர்கள் மத்தியில் பிரபலமான அந்த விளையாட்டுக்கு இந்தியா இதுவரை தகுதி பெற்றதில்லை. முதன்முறையாக டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியாவின் சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி பங்கேற்றார். அதேபோல, "ரோயிங்' எனப்படும் படகோட்டும் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்கும் முதல் பெண்ணாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் கலந்து கொண்டார். அவர்கள் பதக்கம் வெல்லாமல் போனாலும், இந்தியாவுக்கான சர்வதேச அங்கீகாரத்தை உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
 டோக்கியோவில் போட்டி தொடங்கிய முதல் நாளில் பளு தூக்கும் போட்டியில் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தையும், நிறைவடையும் தறுவாயில் நீரஜ் சோப்ரா தங்கப்பதக்கத்தையும் பெற்றது, ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்க்கத் தூண்டின. இத்தனைக்கும் கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நடந்து கொண்டிருந்தும்கூட, அதைத் தவிர்த்துவிட்டு பலர் ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அதுவே மிகப் பெரிய மாற்றத்தின் அறிகுறி என்றுதான் சொல்ல வேண்டும்.
 நீரஜ் சோப்ரா பெற்றிருக்கும் தங்கப் பதக்கத்தின் சுற்றளவு 85 மி.மீ. எடை 556 கிராம். அதன் மதிப்பு என்ன தெரியுமா? சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்குக் கிடைத்திருக்கும் அங்கீகாரம்!
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com