எப்போதுதான் முடிவு? | மின்சார வாரியத்தை சீர்படுத்துவது குறித்த தலையங்கம்

எப்போதுதான் முடிவு? | மின்சார வாரியத்தை சீர்படுத்துவது குறித்த தலையங்கம்

 "எந்தவொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் அதேபோல செய்துகொண்டு அதன் முடிவுகள் வெவ்வேறாக இருக்கும் என்று எதிர்பார்ப்பது பைத்தியக்காரத்தனம்' என்பது விஞ்ஞானி ஐன்ஸ்டீனின் பிரபலமான கருத்துரை. வருங்கால இந்தியாவின் நிர்வாகம் குறித்து அவர் தீர்க்கதரிசனமாக இதைத் தெரிவித்திருக்கிறார் என்று தோன்றுகிறது. கடந்த அரை நூற்றாண்டாக எந்தவொரு பிரச்னையையும் மாறி மாறி பதவிக்கு வரும் அரசியல் கட்சிகளும், அதிகாரிகளும் ஒரேபோலத்தான் கையாள்கிறார்கள்.
 இந்தியாவிலுள்ள பெரும்பாலான மாநிலங்களில் மின்சாரம் அரசுத் துறையாகத்தான் இயங்கி வருகிறது. அப்படி இயங்கி வரும் எல்லா மாநிலங்களும் கடனில் மூழ்கிக் கொண்டிருக்கின்றன என்பதுடன், அந்த பிரச்னை குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடரவும் செய்கின்றன. மாநிலங்களின் ஆபத்தான நிதி நிலைமைக்கான காரணங்கள் தெரிந்தும்கூட அவற்றிற்கு விடை தேடுவதற்கு பதிலாக, தேவையில்லாமல் புதிய பளுவை ஏற்றிக் கொள்ளவும் துணிகின்றன என்பதுதான் விசித்திரம்.
 சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான நிலக்கரித் தட்டுப்பாட்டுக்கு முக்கியமான காரணம், மாநில மின்சார வாரியங்கள். அவை அனல் மின் நிலையங்களுக்கு முறையாகப் பணம் கொடுப்பதில்லை. தொடர்ந்து மாநில மின் வாரியங்கள் இழப்பை எதிர்கொண்டாலும் அதைச் சீர்படுத்தவோ, செயல்பாட்டை மேம்படுத்தவோ அக்கறை காட்டாமல், இலவச மின்சாரம் வழங்கி வாக்குவங்கியைத் தக்கவைத்துக் கொள்வதில்தான் மாநில அரசுகள் முனைப்புக் காட்டுகின்றன.
 தெலங்கானா மாநிலத்திலுள்ள இரண்டு மின்சார வாரியங்களும் ஆண்டுதோறும் கடுமையான இழப்பை எதிர்கொள்ளும் அரசுத் துறை நிறுவனங்கள். மின் கட்டணத்தை அதிகரித்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்பதற்காக, ஆளுங்கட்சியும் வேறு வழியில்லாமல் வேடிக்கை பார்க்கிறது.
 கடந்த ஆறு ஆண்டுகளாக மின் கட்டணம் அதிகரிக்கப்படாததால், நிகழ் நிதியாண்டில் மின் வாரியத்தின் பற்றாக்குறை ரூ.21,552 கோடி. மின் கட்டணத்தை உயர்த்தினாலும்கூட அதிகபட்சமாக ரூ.4,000 கோடி வருவாயை அதிகரிக்க முடியுமே தவிர, பற்றாக்குறையையோ ஏற்கெனவே சுமந்து கொண்டிருக்கும் இழப்பையோ ஈடுகட்ட முடியாது. 2023-இல் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்டண உயர்வுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ் அனுமதிப்பாரா என்பதும் சந்தேகம்.
 நமது அண்டை மாநிலமான கேரளத்தில் ஒரு வழியாக முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது முன்னணி அரசு மின் கட்டணத்தை அதிகரிக்க முடிவெடுத்திருக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான புதிய மின் கட்டணம் அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்பு 2019 ஜூலை மாதத்தில், கேரளத்தில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
 நமது தமிழகத்துடன் ஒப்பிடும்போது, மின் மிகை மாநிலமான கேரளத்தில் எந்த அளவு கட்டணமும் இலவச மின்சாரமும் வழங்கப்படுகிறது என்பது அதிர்ச்சியளிக்கிறது. இதுவரை 20 யூனிட் வரையிலான பயனீட்டாளர்களுக்கு மட்டுமே இலவச மின்சாரம் வழங்கி வந்த கேரளம், அதை மாதத்துக்கு 30 யூனிட்டாக அதிகரிக்க இருப்பதாகத் தெரிவிப்பது நகைப்பை வரவழைக்கிறது. தமிழகத்தில் 100 யூனிட்டுகள் இலவசம்.
 கேரள மின்சார ஒழுங்காற்று ஆணையம், மின் கட்டண உயர்வு குறித்த விவாதத்துக்கான வழிமுறையை ரத்து செய்திருக்கிறது என்பதுதான் அதைவிட வேடிக்கை. தேவைக்கு அதிகமான மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு விற்பதற்கு பதிலாக, வெளி மாநிலங்களிலிருந்து மின்சாரம் வாங்கும் தனியார் மின் விநியோகப் பயனீட்டாளர்களுக்கு வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டிருக்கிறது.
 தமிழகத்தின் நிலைமையும் மெச்சும்படியாக ஒன்றும் இல்லை. தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை அடங்கிய தமிழ்நாடு மின்சார வாரியத்தின் ஒட்டுமொத்த நிலுவைக் கடன் ரூ.1,59,638.67 கோடி. ஆட்சிகள் மாறுகின்றனவே தவிர, இழப்பில் இயங்கும் மின்சார வாரியத்தை சீர்திருத்தும் முயற்சியில் துணிந்து ஈடுபட யாரும் தயாராக இல்லை.
 தென் மாநிலங்கள் மட்டுமல்ல, இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இதுதான் நிலைமை. மானியங்களுக்குப் பிறகு மாநில மின்வாரியங்களின் மொத்த நிலுவை இழப்பு 2019 - 20 நிலவரப்படி ரூ.38,093 கோடி. இதுவரையில் எதிர்கொண்ட மொத்த இழப்பு ரூ.5.07 லட்சம் கோடி. அவை எதிர்கொள்ளும் கடன் சுமை ரூ.5.14 லட்சம் கோடி.
 திவாலாகும் மாநில மின்வாரியங்களைக் காப்பாற்ற 2000, 2012-இல் மத்திய அரசு கை கொடுத்தது. அதற்குப் பிறகு 2015-இல் நரேந்திர மோடி அரசால் "உதய்' திட்டம் முன்மொழியப்பட்டது. இப்போது 2021-இல் மீண்டும் ஐந்தாண்டுக்கான ரூ.3.03 லட்சம் கோடி உதவித்திட்டம் முன்மொழியப்பட்டிருக்கிறது. இப்படியே இது தொடர்ந்தால் எப்படி?
 வழங்கப்படும் மின்சாரத்துக்கான உற்பத்திச் செலவுக்கும், அதற்கு வசூலிக்கப்படும் கட்டணத்துக்கும் இடைவெளி இருக்கக் கூடாது. நிர்வாகக் குறைபாடுகளுக்கும், மின் கசிவுகளுக்கும், இலவச மின்சாரம் வழங்குவதற்கும் மக்களின் வரிப்பணம் விரயமாவது இருக்கட்டும். ஒழுங்காக மின்சாரம் தடையில்லாமல் கிடைக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. மின்வாரியங்களின் ஏகபோகம் அகன்று, போட்டி ஏற்பட்டால்தான் இதற்கு விடிவுகாலம் என்கிற கருத்து வரவேற்புக்குரியது.
 ஒரு சிலர் வாழ, பலர் வாடுவது சமதர்மமாகாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com