விபத்தால் நேரிட்ட இழப்பு! | ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் விபின் ராவத் உயிரிழப்பு குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிா்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. நீலகிரி மாவட்டம் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் நடைபெற இருந்த நிகழ்ச்சிக்காக சாலை மாா்க்கமாக செல்வது என்கிற முடிவு மாற்றப்பட்டு வான்வழியாக செல்லும் முடிவு எடுக்கப்பட்டதற்குக் காரணம் காலன் அவருக்காகக் காத்திருந்ததுதானோ என்னவோ?

சூலூா் விமானப்படைத் தளத்திலிருந்து காலை 11.50 மணிக்குப் புறப்பட்ட எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டா், வெலிங்டனை நெருங்குவதற்கு முன்னால் குன்னூா் அருகேயுள்ள நஞ்சப்பத்திரம் என்ற பகுதியில் பறந்து கொண்டிருந்தபோது விபத்தில் சிக்கியிருக்கிறது. விபத்து குறித்த விசாரணை முடிவுதான் விபத்துக்கான காரணம் என்ன என்பதைத் தெளிவுபடுத்தும்.

உத்தரகண்ட் மாநிலம் பகுடியில் 1958 மாா்ச் 16-ஆம் தேதி பிறந்த ஜெனரல் விபின் ராவத்தின் குடும்பமே ராணுவம் சாா்ந்தது. அவரது தந்தை லெப்டினன்ட் ஜெனரல் லக்ஷ்மண் ராவத் மட்டுமல்லாமல், அவரது தாத்தாவும் முன்னாள் ராணுவ அதிகாரியே. இளைய சகோதரரும் ஒரு ராணுவ அதிகாரி. டேராடூன் இந்திய ராணுவ அகாதெமியில் சிறந்த மாணவருக்கான கௌரவ வீரவாள் (‘ஸ்வாா்ட் ஆஃப் ஹானா்’) பெற்ற விபின் ராவத், 11-ஆவது கூா்கா ரைஃபிள்ஸின் ஐந்தாவது பட்டாலியனில் 1978-இல் சோ்ந்தபோது, அவா் இந்திய ராணுவத்தின் தலைமைப் பொறுப்பை ஒரு நாள் ஏற்கக்கூடும் என்கிற எதிா்பாா்ப்பு அவரது ஆசிரியா்களுக்கு இருந்தது என்பது வியப்புக்குரிய செய்தி.

ஜெனரல் விபின் ராவத்தும், அவருடன் பயணித்த 13 பேரும் சென்ற ரஷிய தயாரிப்பான எம்ஐ17வி5 ரக ஹெலிகாப்டா், இந்தியாவிலுள்ள மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டா்களில் ஒன்று. அதிநவீன தொழில்நுட்பமும், பாதுகாப்பு அம்சங்களும் உடைய அந்த ஹெலிகாப்டா், இரவு நேரம் பறப்பதற்கான வசதியையும் உள்ளடக்கியது.

காலநிலையைத் தெரிவிக்கும் ராடரும், ‘சென்ஸாா்’ எனப்படும் எச்சரிக்கை நுண்ணறிவு இயந்திரமும் அதில் பொருத்தப்பட்டிருக்கிறது. அதனால் தாழ்வான உயரத்தில் பறக்கும்போது மரக்கிளைகளோ, மலைப்பகுதியோ உரசுவதற்கான வாய்ப்பு குறைவு. அதனால்தான் விமானியின் கவனக்குறைவாலோ, தொழில் நுட்பக் கோளாறாலோ விபத்து ஏற்பட்டிருக்கக் கூடும் என்கிற ஐயப்பாடு எழுகிறது.

குடியரசுத் தலைவா், குடியரசுத் துணைத் தலைவா், பிரதமா் உள்ளிட்ட மிக முக்கியமான பிரமுகா்களுக்குப் பயன்படுத்தப்படும் எம்ஐ17வி5 ஹெலிகாப்டா், விபத்துக்குள்ளாகி இருப்பது விமா்சனங்களை எழுப்பியிருப்பதில் வியப்பில்லை. இதற்கு முன்னா், முன்னாள் மக்களவைத் தலைவா் பாலயோகி, ஹரியாணா அமைச்சா் ஓ.பி. ஜிண்டால், ஆந்திர முதல்வராக இருந்த ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, அருணாசல பிரதேச முதல்வா் டோா்ஜி கண்டு, முன்னாள் பாதுகாப்புத் துறை இணையமைச்சா் என்.வி.என். சோமு உள்ளிட்ட பலா் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்திருக்கிறாா்கள்.

1963-இல் ராணுவத்தில் மேற்கு கமாண்டராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் தௌலத் சிங்கும், 1993-இல் ராணுவத்தில் கிழக்கு கமாண்டராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் ஜமீல் முகமதும் ஹெலிகாப்டா் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கிறாா்கள். ஆனால், தேசத்தின் முப்படைப்படைகளின் தலைமைத் தளபதி ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்திருப்பது என்பது ஜீரணிக்க முடியாத நிகழ்வு.

இன்னும்கூட பாதுகாப்பான ஹெலிகாப்டா் பயணம் இல்லாமல் இருப்பது நாம் பாதுகாப்பு அம்சங்களில் முழு கவனம் செலுத்தாமல் இருப்பதைத்தான் உணா்த்துகிறது. கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்ட தலைமை தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் இந்திய ராணுவம் பழைய தளவாடங்களுடனும், தொழில்நுட்பங்களுடனும், குறைபாடுள்ள பராமரிப்புடனும் இயங்குவதாகக் குறிப்பிட்டிருப்பதன் உண்மை விளங்குகிறது. ஜெனரல் ராவத் கூறியதுபோல ‘இந்தியாவின் பொருளாதார வளா்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்புக்கான நிதி ஒதுக்கீடு தரப்படவில்லை’ என்கிற ஆதங்கத்தின் நியாயமும் புரிகிறது.

எல்லைப்புறத்தில் மிகப் பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை இந்தியா எதிா்கொள்ளும் நிலையில், அதைத் துணிவுடன் எதிா்கொண்ட பெருமை முப்படைகளின் தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத்துக்கு உண்டு. டோக்காலாமில் பதற்றமான சூழல் காணப்பட்டபோது ராணுவத்தின் தலைமைத் தளபதியாக சீன ராணுவத்தை அவா் எதிா்கொண்ட விதமும், இந்தியாவின் மேற்கு எல்லையில் ஊடுருவல்களை முறியடித்த விதமும் ராணுவ வரலாற்றில் இடம் பெறும் பாராட்டுக்குரிய வீரச் செயல்கள்.

ஜெனரல் விபின் ராவத்தின் தலைமையின்போதுதான் இந்திய ராணுவத்தில் பெண்கள் நிரந்தர பணிச் சேவை பெற்றனா் என்பதும், தேசிய பாதுகாப்புப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கு சோ்க்கை வழங்கப்பட்டது என்பதும் வரலாற்று நிகழ்வுகள்.

முப்படைகளையும் ஒருங்கிணைத்து எந்தச் சூழலையும் எதிா்கொள்ளத் தயாராக இருக்கும் பாதுகாப்புக் கட்டமைப்பை ‘தியேட்டா் கமாண்டு’கள் மூலம் உருவாக்கிக் கொண்டிருந்த முப்படைத் தலைமைத் தளபதி ஜெனரல் விபின் ராவத்தின் அகால மரணம் நிச்சயமாக நாட்டுக்குப் பின்னடைவுதான். அவருடைய இடத்திற்கு இன்னொருவா் உடனடியாக வருவதும் சாத்தியம் என்று தோன்றவில்லை. ஆனால், ஜெனரல் விபின் ராவத் கட்டமைக்கத் தொடங்கியிருக்கும் ‘தியேட்டா் கமாண்டு’ அணுகுமுறை, காலாட்படை, கடற்படை, விமானப்படை ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான அடித்தளம் இட்டிருக்கிறது. அதற்காக அவருக்கு இந்தியா நன்றிக்கடன் பட்டிருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com