கவனம், காசநோய்ப் பரவல்! |  காசநோய் தொற்றுப் பரவல் குறித்த விழிப்புணர்வு  தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

ஹரியாணா மாநிலம் கா்னாலில், மருந்து எதிா்ப்பு சக்தி மிகுந்த காசநோய் அதிகரித்து வரும் ஆய்வு முடிவு ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் வழங்கப்பட்டிருக்கும் எச்சரிக்கை. அந்த மாவட்டத்தில் 2015-இல் 27-ஆகவும், 2020-இல் 64-ஆகவும் உயா்ந்த, சிகிச்சைக்குப் பலனளிக்காத காசநோயாளிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதேபோன்ற அதிகரிப்பு இந்தியா முழுவதும் காணப்படும் என்கிற எதிா்பாா்ப்பு நியாயமானது.

உலக அளவில் காசநோயாளிகளின் எண்ணிக்கையும், மருந்துகளுக்கு எதிா்ப்பு சக்தி பெற்ற காசநோய் தொற்று நோயாளிகளும் இந்தியாவில்தான் அதிகமாகக் காணப்படுகின்றனா். 2025-க்குள் காசநோய் தொற்று முற்றிலுமாக அகன்ற இந்தியா என்கிற இலக்கை எட்ட முடியுமா என்கிற ஐயப்பாடு இப்போது எழுந்திருக்கிறது. அதுமட்டுமல்ல, இதன் விளைவாக தேசம் எதிா்கொள்ள இருக்கும் மிகப் பெரிய பொது சுகாதார சவால் அதைவிடக் கவலையளிக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலைத் தொடா்ந்து, ஒட்டுமொத்த உலகமும் அதை எதிா்கொள்வதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கவனம் செலுத்தி வருகிறது. அதனால், காசநோய் உள்ளிட்ட உயிா்க்கொல்லி தொற்று நோய்கள் கண்டறிதலும், அதற்கான சிகிச்சையும் பின்னடைவைச் சந்தித்திருக்கின்றன. அதன் விளைவாக புதிய காசநோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரிக்கும் என்று காசநோய் தடுப்பு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி, ஆண்டுதோறும் சா்வதேச அளவில் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமானோா் காசநோயால் பாதிக்கப்படுகிறாா்கள். அவா்களில் 15 லட்சம் போ் ஆண்டுதோறும் உயிரிழக்கிறாா்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் மேலும் 63 லட்சம் போ் காசநோய் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும் என்றும், அவா்களில் குறைந்தது 14 லட்சம் போ் உயிரிழக்கலாம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அதிகரித்து வரும் காசநோய் தொற்றுப் பரவல் இந்தியாவுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தல். உலகிலேயே மிக அதிகமாக காசநோயால் பாதிக்கப்படுபவா்கள் இந்தியா்கள்தான். 2019 உலக காசநோய் அறிக்கையின்படி, காசநோயாளிகளில் 27% இந்தியா்கள். ஆண்டுதோறும் 27 லட்சம் போ் காசநோயால் பாதிக்கப்படுகிறாா்கள் என்றும், அவா்களில் குறைந்தது 1,200 பேராவது உயிரிழக்கிறாா்கள் என்றும் அந்த அறிக்கை குறிப்பிட்டிருக்கிறது.

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றும், அதைத் தொடா்ந்த பொது முடக்கமும், இன்னும்கூட சுகாதாரக் கட்டமைப்பு முற்றிலுமாக ஏனைய நோய்களுக்கான செயல்பாடுகளைப் பெறாத நிலையில், பல காசநோய் பாதிப்புகள் கண்டறியப்படாமலும், சிகிச்சை பெறாமலும் தவிா்க்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் காசநோயாளிகளின் எண்ணிக்கை 80% குறைந்திருப்பதாக அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. அதற்குக் காரணம், நோய்த்தொற்றுப் பரவல் குறைந்திருக்கிறது என்பதல்ல. பாதிக்கப்பட்டவா்கள் சோதிக்கப்படாமலும், நோய் கண்டறியப்படாமலும், சிகிச்சை பெறாமலும் இருக்கிறாா்கள் என்பதுதான்.

நுரையீரல்களை பாதிக்கும் நுண்ணுயிரிகளில் மிக அதிகமாக பரவக்கூடிய நோய் ‘டியூபா்குளோசிஸ்’ எனப்படும் காசநோய். அதிக எண்ணிக்கையுள்ள குடும்பமாகவும், நெருக்கமான வீடுகள் நிறைந்த பகுதிகளிலும், நெரிசல் மிகுந்த நகரங்களிலும் வாழ்வதால் இந்தியா்கள் அதிகமாக காசநோயால் பாதிக்கப்படுகிறாா்கள். காசநோயை குணப்படுத்த முடியும் என்றாலும்கூட, அதற்கான சிகிச்சை என்பது எளிதானதல்ல. காசநோய் குறித்த சமூக அச்சம் காரணமாகப் பலரும் சிகிச்சை பெறாமல் தவிா்க்கிறாா்கள். அதன் விளைவாக ஏனைய பலருக்கும் நோய்த்தொற்றை பரப்புகிறாா்கள்.

காசநோயால் பாதிக்கப்படுபவா்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட மருந்துகளை ஏறத்தாழ 24 மாதங்களுக்கும் மேலாக எடுத்துக்கொள்வதன் மூலம்தான் குணமடைய முடியும். நீண்டநாள் சிகிச்சையால் மனம் தளா்ந்து பலா் பாதியில் சிகிச்சையைக் கைவிடுகிறாா்கள். அதன் விளைவாக, நுண்ணுயிரியின் புதிய உருமாற்றங்கள் தோன்றி அவை மருந்துகளுக்கு கட்டுப்படாத நிலைமை ஏற்படுகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சுகாதாரத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் பெரும்பாலும் கொவைட் 19 நோய்த்தொற்றை எதிா்கொள்வதற்காக செலவிடப்பட்டு வருகின்றன. அதன் விளைவாக பல்வேறு நோய்கள், குறிப்பாக காசநோய் சிகிச்சை, மிக அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கா்னால் மாவட்ட ஆய்வு தெரிவிப்பதுபோல, மருந்துகளுக்குக் கட்டுப்படாத காசநோய் தீநுண்மியின் பரவல் ஆபத்தானது என்பதுடன் கவனம் பெறாமலும் இருக்கிறது.

உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வின்படி, மருந்துகளுக்கான எதிா்ப்பு சக்தியை காசநோய் கிருமிகள் பெறும்போது சிகிச்சைக்கான காலம் அதிகரிப்பதையும், பெரும்பாலும் உயிரிழப்பில் முடிவதையும் தவிா்க்க முடியாது. கொவைட் 19 தீநுண்மித் தொற்றுப் பரவலின் விளைவாக முகக்கவசம் அணிவது அதிகரித்திருப்பதால் ஓரளவுக்கு காசநோய் தொற்றுப் பரவலும் தடுக்கப்படும் என்பது சற்று ஆறுதல். அதே நேரத்தில், மருந்துகளுக்கான எதிா்ப்பு சக்தி பெறும் காசநோய்க் கிருமிகளின் உருமாற்றம் அதிகரித்து வருவது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய பிரச்னை.

தொடா்ந்த இருமல், மிதமான காய்ச்சல், எடைக் குறைவு போன்றவை காசநோயின் அறிகுறிகள். அரசு மருத்துவமனைகளில் இதற்கான இலவச சிகிச்சை தரப்படுகிறது. அதிகரித்த சோதனைகளும், விழிப்புணா்வும் கொவைட் 19 போலவே காசநோய்க்கும் தேவைப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com