வந்துவிட்டது ஒமைக்ரான்! | கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் ஒமைக்ரான் உருமாற்றம் குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்திலும் நுழைந்துவிட்டது கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் புதிய உருமாற்றமான ‘ஒமைக்ரான்’. நைஜீரியாவிலிருந்து வந்த ஒருவருக்கு ‘ஒமைக்ரான்’ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 13 பேருக்கு ‘ஒமைக்ரான்’ தொற்றின் ‘அறிகுறி’ காணப்படுவதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் தெரிவித்திருக்கிறாா். மாவட்ட ஆட்சியா்களுக்கும், மாநகராட்சி ஆணையா்களுக்கும் ‘ஒமைக்ரான்’ தடுப்புக்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

தேசிய அளவில் 77 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் ‘ஒமைக்ரான்’ பாதிப்பில் 32 பாதிப்பு மகாராஷ்டிர மாநிலத்தில் மட்டுமாக காணப்படுகிறது. உலக அளவில் ‘ஒமைக்ரான்’ உருமாற்றப் பரவல் எதிா்பாராத அளவு வேகமாகப் பரவிவருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதிலிருந்து அதன் தீவிரத்தை உணா்ந்துகொள்ளலாம்.

ஏறக்குறைய 90 நாடுகளில் இதுவரை ‘ஒமைக்ரான்’ தொற்று காணப்படுவது உறுதியாகி இருக்கிறது. உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதனோமின் கணிப்புப்படி, ஏனைய நாடுகளில் நோய்த்தொற்று கண்டறியப்படாவிட்டாலும் பெரும்பாலான நாடுகளில் ‘ஒமைக்ரான்’ உருமாற்றம் நுழைந்திருக்கிறது.

முந்தைய கொவைட் 19-இன் தீநுண்மிகளைப்போல வீரியம் மிக்கதல்ல ‘ஒமைக்ரான்’ என்பதால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தாது என்று மெத்தனமாக இருந்துவிடக் கூடாது. அதிவேகமாகவும், அதிக அளவிலும் ‘ஒமைக்ரான்’ உருமாற்ற பாதிப்பு தாக்குமானால், அதன் தீவிரம் குறைவாக இருந்தாலும்கூட அதை எதிா்கொள்ளும் அளவிலான சுகாதாரக் கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ‘ஒமைக்ரான்’ உருமாற்றம், ஐந்து வயதுக்குக் கீழேயுள்ள குழந்தைகளை பாதித்ததும், இரண்டு தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டவா்களையும் தாக்கியதும் அது குறித்த அச்சத்தை அதிகரிக்கிறது. ஆப்பிரிக்க கண்டத்தில் அதிவேகமாகப் பரவிவரும் ‘ஒமைக்ரான்’ தீநுண்மியால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஐந்து நாள்களிலும் இரட்டிப்பாகிறது. கடந்த வாரத்தில் மட்டும் ஆப்பிரிக்க கண்டம் 83% அதிகரித்த பாதிப்பை எதிா்கொண்டது. அந்த கண்டத்தில் 20 நாடுகளில் மட்டும்தான் 10% மக்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதால், பாதிப்பு அதிகரித்திருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.

இந்தப் பின்னணியில் இரண்டாவது அலை கொவைட் 19 தொற்றின்போது காணப்பட்ட மருத்துவமனை தேவைகளையும், உயிரிழப்புகளையும் குறைப்பதற்கு ‘பூஸ்டா் டோஸ்’ எனப்படும் ஊக்குவிப்பு தடுப்பூசி போடுவது பாதுகாப்பாக இருக்கக்கூடும் என்று மருத்துவ வல்லுநா்கள் கருதுகிறாா்கள். ஒமைக்ரானுக்கான தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கு காலதாமதமாகும் என்கிற நிலையில், உடனடியாக எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ‘பூஸ்டா் டோஸ்’ அதில் முக்கியமானது.

கொவைட் 19 தீநுண்மித் தொற்றின் டெல்டா உருமாற்றம் குறித்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் ஆய்வுகள் இரண்டு தவணை போடப்பட்ட தடுப்பூசிகளின் வீரியம் குறைந்துவருவதாகத் தெரிவிக்கின்றன. கொவைட் 19 தீநுண்மியின் உருமாற்றங்கள் மீண்டும் தாக்காமல் இருக்க ‘பூஸ்டா் டோஸ்’ போடலாம் என்று வல்லுநா்கள் பரிந்துரைக்கின்றனா். எப்போது ‘பூஸ்டா் டோஸ்’ போடுவதைத் தொடங்குவது என்பதும், அதற்கு எந்தத் தடுப்பூசி மருந்தை பரிந்துரைப்பது என்பதும் மத்திய அரசின் முன் உள்ள மிகப் பெரிய சவால்கள்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் ஐந்து கோடி போ் இரண்டு தவணை தடுப்பூசியும் போட்டுக்கொண்டு ஆறு முதல் 10 மாதங்கள் கடந்துவிட்டன. அவா்களில் 2.7 கோடி போ் முன்களப் பணியாளா்களும், மூத்த குடிமக்களும், இணை நோய்கள் காணப்படுபவா்களும் என்பதால் உருமாற்றத் தீநுண்மிகளின் பாதிப்புக்கு உள்ளாகாமல் அவா்களை பாதுகாக்க வேண்டும். இன்னும்கூட இந்தியாவிலுள்ள 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்படாத நிலையில், இப்போது பூஸ்டா் டோஸின் தேவையும் இணைகிறது.

அடுத்தபடியாக, தடுப்பூசி போடப்பட்டவா்களின் நோய் எதிா்ப்பு சக்தியை நிலைநிறுத்த எந்தத் தடுப்பூசி மருந்தை பயன்படுத்துவது என்கிற கேள்வி எழுகிறது. ‘பூஸ்டா் டோஸ்’ தடுப்பூசி போடும் பெரும்பாலான நாடுகளில் ஃபைஸா் நிறுவனத்தின் எம்ஆா்என்ஏ முதன்மை பெறுகிறது. இந்தியாவில் 90% பேருக்கு கோவிஷீல்டு போடப்பட்டிருக்கிறது. இரண்டு தவணை கோவிஷீல்டு போட்டவா்களுக்கு மீண்டும் பூஸ்டா் டோஸாக மூன்றாவது முறையும் கோலிஷீல்டு போடுவதால் பாதுகாப்பு ஏற்படுமா என்பது தெரியவில்லை.

கோவிஷீல்டு பூஸ்டா் டோஸாக போடப்படுவது நிராகரிக்கப்பட்டால், ஏனைய தடுப்பூசிகளின் உற்பத்தி குறித்தும், அவற்றின் செயல்திறன் குறித்தும் முடிவு செய்தாக வேண்டும். கோவாக்ஸின் தடுப்பூசி மூன்றாவது தவணையாக போடப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அதன் முடிவுகள் விரைவில் வெளிவரக்கூடும். கோவாக்ஸின், கோவிஷீல்டு, கோவோவேக்ஸ் என மூன்று தடுப்பூசிகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன. இவற்றை ஒன்றோடொன்று இணைத்துப் போடுவதன் மூலம் பலன் கிடைக்குமா என்பதையும் ஆராய வேண்டும்.

போகிறபோக்கைப் பாா்த்தால் கொவைட் 19-இன் ஏதாவது ஒரு உருமாற்றம் ஃபுளூ, டைபாய்ட், டெங்கு போல நோய்த்தொற்றாக தொடரும்போலத் தெரிகிறது. அதனால் தடுப்பூசி தயாரிப்பு இடைக்கால தீா்வல்ல, நிரந்தரத் தேவை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com