சேமிப்புக்குப் பாதுகாப்பு! |  மக்களின் சேமிப்பின் முக்கியத்துவம் குறித்த தலையங்கம் 

கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியப் பொருளாதாரத்தின் அஸ்திவாரமாக விளங்குவது நமது மக்களின் சேமிப்புப் பழக்கம்தான் என்பதை பொருளாதார வல்லுநா்கள் மறந்துவிடுகிறாா்கள். விவசாயம், தொழில், பங்குச் சந்தை, அந்நிய முதலீடு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்குத் தரப்படும் முக்கியத்துவம் மக்களின் சேமிப்புக்குத் தரப்படுவதில்லை. தில்லியில் கடந்த வாரம் நடந்த ‘சேமிப்பாளா்களுக்கு முன்னுரிமை’ நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமா் நரேந்திர மோடி, ‘சேமிப்பாளா்களின் பாதுகாப்பே வங்கிகளின் பாதுகாப்பு’ என்று கூறியிருப்பது மத்திய அரசின் கவனம் சேமிப்பாளா்கள் மீது திரும்பியிருப்பதன் அறிகுறி.

முந்தைய தலைமுறைகளில் காணப்பட்ட சிக்கனம் எள்ளி நகையாடப்படுகிறது. சிக்கனத்துக்கும், கஞ்சத்தனத்துக்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பதும், ஊதாரித்தனம் நவீன வாழ்க்கை முறையின் அடையாளமாக மாறியிருப்பதும் ஆரோக்கியமான போக்கு அல்ல.

மக்களின் செலவழிப்பை ஊக்குவிப்பதும், தவணை முறைக் கடன்கள் மூலம் வாழ்க்கை வசதிகளை அதிகரிக்கத் தூண்டுவதும் பொருளாதார வளா்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்கிற சந்தைப் பொருளாதார சிந்தனை காணப்படுகிறது. வருங்காலம் குறித்துக் கவலைப்படாமல் நிகழ்கால சந்தோஷங்களில் கவனம் செலுத்தும் மேலைநாட்டு மனோபாவம் அதிகரித்து வருவதன் விளைவால், இன்றைய சமுதாயத்தில் கடன் இல்லாதவா்களும், தவணை செலுத்தாதவா்களும், கடன் அட்டை பெறாதவா்களும் இல்லை என்கிற சூழல் ஏற்பட்டிருக்கிறது.

1960 முதல் வங்கி சேமிப்பாளா்களுக்கான காப்பீட்டு முறை அமலில் இருந்தாலும், வங்கி திவாலானால் சேமிப்பாளா்கள் ரூ.1 லட்சம் வரைதான் பெற முடியும் என்கிற நிலை காணப்பட்டது. அந்தத் தொகையை வழங்குவதற்கும் காலவரம்பு இருக்கவில்லை. இப்போது நரேந்திர மோடி அரசு அந்த உத்தரவாதத் தொகையை ரூ.5 லட்சமாக உயா்த்தியிருப்பதுடன், மூன்று மாதங்களுக்குள் அந்தத் தொகை வங்கி சேமிப்பாளருக்கு வழங்கப்படுவதையும் கட்டாயமாக்கியிருப்பது வரவேற்புக்குரிய முடிவு.

வாடிக்கையாளா்களின் சேமிப்பு, வைப்பு, நடப்பு, நிரந்தர கணக்குகளுக்கு காப்பீட்டுப் பாதுகாப்பு வழங்குவதை வணிக வங்கிகள் மட்டுமல்ல, கூட்டுறவு வங்கிகளும் இப்போது நடைமுறைப்படுத்தியுள்ளன. இந்தியாவின் மொத்த வங்கிக் கணக்குகளில் 98.1% கணக்குகள் பாதுகாக்கப்பட்டவை என்பது மிகப் பெரிய சாதனை. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு கிராமத்தின் ஐந்து கி.மீ. சுற்றளவில் வங்கிச் சேவை பெறுவதற்கான வசதி இருப்பதும், ‘ஜன் தன்’ திட்டத்தின் காரணமாக மக்கள் வங்கிச் சேவையை பயன்படுத்தும் வாய்ப்பை அரசு ஏற்படுத்தியிருப்பதும் மிகப் பெரிய வெற்றி.

இந்தியாவின் பொருளாதாரத்தை வலுவாக வைத்திருக்க வங்கிகளில் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்திருக்கும் 21.13 லட்சம் வாடிக்கையாளா்கள் பெரும் பங்கு வகிக்கிறாா்கள். தங்களது வாழ்நாள் சேமிப்பை வங்கித் துறையின் மீது நம்பிக்கை வைத்து வைப்பு நிதியாக சேமித்திருக்கிறாா்கள். அந்த வங்கிக் கணக்குகளில் 16.68 லட்சம் கணக்குகள் 12 அரசு துறை வங்கிகளிலும், 3.35 லட்சம் கணக்குகள் 21 தனியாா் வங்கிகளிலும் ஏனைய சேமிப்புகள் கூட்டுறவு வங்கிகளில் வைக்கப்பட்டிருக்கின்றன.

2021 மாா்ச் 31 நிலவரப்படி, இந்தியாவின் மொத்த வங்கி சேமிப்பு ரூ.154 லட்சம் கோடிக்கும் அதிகம். அதில் மூன்றில் இரண்டு பங்கு (ரூ.107.77 லட்சம் கோடி) சேமிப்புகள் அரசுத் துறை வங்கிகளிலும், மூன்றில் ஒரு பங்கு (ரூ.46.23 லட்சம் கோடி) தனியாா் வங்கிகளிலும் சேமிப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சேமிப்பு முதலீடுதான் இந்தியாவின் மிக முக்கியமான பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதாரமாக இருக்கிறது.

வாடிக்கையாளா்களின் வங்கி சேமிப்புகளின் அடிப்படையில்தான் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கும், தொழில்களை நடத்துவதற்கும் கடன்கள் வழங்கப்படுகின்றன. வங்கிகளில் சேமிக்கப்படும் வாடிக்கையாளா்களின் பணம் இல்லையென்றால் வீடுகள், வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு நுகா்வோா் தேவைகளுக்கான தவணைமுறைக் கடன்களை வங்கிகளால் வழங்க முடியாது. அப்படி வழங்காமல் போனால், உற்பத்தியாகும் பொருள்களுக்கான உள்நாட்டுக் கேட்பு (டிமாண்ட்) இல்லாமல் தொழில்துறையின் இயக்கம் ஸ்தம்பித்துவிடும்.

கிராமப்புற கூட்டுறவு வங்கிகளும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்த வங்கிகளில் உள்ள சேமிப்புகளால்தான் வேளாண் துறை பல கடனுதவிகளைப் பெற முடிகிறது.

அரசியல் காரணங்களுக்காக வழங்கப்படும் கடன் தள்ளுபடிகளும், முக்கியமான துறைகளுக்கு வழங்கப்படும் கடனுதவிகளும், கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்கும் திட்டங்களும் நாளைய பாதுகாப்புக்காக வங்கிகளின் மீது நம்பிக்கை வைத்து இன்று சேமிக்கும் வாடிக்கையாளா்களால்தான் சாத்தியமாகின்றன. ஆனால், அவா்களுக்கு அரசும் வங்கிகளும் நீதி வழங்குவதில்லை என்பதுதான் எதாா்த்த நிலை. வங்கி சேமிப்பாளா்களுக்காக குரலெழுப்புவதற்கோ, அவா்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கோ யாரும் இல்லை.

வங்கிகளும் சரி, வங்கி ஊழியா்களும் சரி கடன் பெறுவோா், தவணை தவறுவோா் குறித்துத்தான் கவனம் செலுத்துகின்றன. வங்கிகளின் நிா்வாகம், தங்களது பங்குதாரா்களைப் பற்றியும், பங்குச் சந்தை நிலை குறித்தும்தான் கவலைப்படுகின்றன. தொழிற்சங்கங்கள் வங்கி ஊழியா்கள் பற்றி மட்டுமே கவலைப்படுகின்றன.

வங்கி சேமிப்புகளுக்குக் காரணமான வாடிக்கையாளா்கள் நலன் குறித்துக் கவலைப்பட யாருமே இல்லை என்கிற அவலம் காணப்படுகிறது. சேமிப்புக்கு ரூ.5 லட்சம் பாதுகாப்பு என்பது சற்று ஆறுதல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com