தீா்வல்ல, கண்துடைப்பு! | பழைமையான வாகனங்கள் தடை குறித்த தலையங்கம்

கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைநகா் தில்லிவாழ் மக்களுக்கு அதிா்ச்சி அளிக்கும் புத்தாண்டு பரிசை வழங்கி இருக்கிறது கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி அரசின் போக்குவரத்துத் துறை. 2022 ஜனவரி 1-ஆம் தேதி முதல், பத்து ஆண்டுகளுக்கும் பழைமையான டீசல் வாகனங்கள் தடை செய்யப்படுகிறது.

பசுமைத் தீா்ப்பாயத்தின் 2015-ஆம் ஆண்டு தீா்ப்புக்கு எதிரான மேல் முறையீடுகள் அனைத்தும் நீதிமன்றங்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தில்லி அரசுக்கு இந்த உத்தரவை நிறைவேற்றுவது கட்டாயமாகி இருக்கிறது. கொவைட் 19 நோய்த்தொற்றுக் காலத்தைக் கணக்கில் கொண்டு, 10 ஆண்டுகளை 12 ஆண்டுகளாக்க வேண்டும் என்கிற கோரிக்கையையும் பசுமைத் தீா்ப்பாயம் நிராகரித்துவிட்டது.

24 பெட்ரோல் வாகனங்களும், 84 இயற்கை எரிவாயுவில் இயங்கும் வாகனங்களும் வெளியிடும் மாசு, ஒரு டீசல் வாகனத்தால் வெளியிடப்படுகிறது என்பது பசுமைத் தீா்ப்பாயத்தின் தீா்ப்பு. பத்து ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களைப் பயன்படுத்துவதால், மக்களின் ஆரோக்கியத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்பட்டுவிடாது என்று அரசு நிரூபிக்கவில்லை என்றும் அந்தத் தீா்ப்பு கூறுகிறது.

1985-இல் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கில் தொடங்குகிறது இந்த பிரச்னை. எல்லா வாகனங்களுக்கும் மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று 1990-இல் முடிவெடுக்கப்பட்டது. சிஎன்ஜி எனப்படும் எரிவாயுவில் இயங்கும் பேருந்துகள், வாடகைக் காா்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து, தலைநகா் தில்லி உள்ளிட்ட பல நகரங்களில் கட்டாயமாக்கப்பட்டது.

இந்திய நகரங்களில் காணப்படும் காற்று மாசின் அளவைக் குறைத்தாக வேண்டும் என்பதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து இல்லை. 2020-இல் உலகிலுள்ள மிக மோசமான காற்று மாசு காணப்படும் 15 நகரங்களில் 13 நகரங்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன. மிக மோசமான காற்று மாசு கொண்ட உலகின் பத்து பெருநகரங்களின் பட்டியலில் தில்லி, மும்பை, கொல்கத்தா நகரங்கள் இடம் பெறுகின்றன. அதனால் இது குறித் தீவிர முனைப்பு வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

நுரையீரலை பாதிக்கும் பிஎம் 2.5 என்கிற துகள் அளவு, உலக சுகாதார நிறுவனம் அனுமதித்திருப்பதைவிட 14 மடங்கு அதிகமாக தில்லியில் காணப்படுகிறது. தில்லி அரசு காற்று மாசைக் குறைப்பது குறித்து பல ஆண்டுகளாகப் பேசி வருகிறதே தவிர, இதுவரை எந்த ஆக்கபூா்வ நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. ஆண்டுதோறும் குளிா்காலம் வந்துவிட்டால், தில்லிவாழ் மக்கள் மூச்சுவிடக்கூடத் திணறும் அளவுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு காணப்படுகிறது.

இதுவரையில் மேலெழுந்தவாரியாகச் சில முடிவுகள் எடுக்கப்பட்டனவே தவிர, அடிப்படை மாற்றம் ஏற்படும் அளவில் காற்று மாசைக் குறைப்பதற்கான முன்னெடுப்புகள் எதுவும் செய்யப்படவில்லை. தீபாவளியின்போது பட்டாசுக்குத் தடை விதிப்பது, வைக்கோலை எரிப்பதைத் தடுப்பது போன்ற நடவடிக்கையால் பெரிய அளவில் பயன் விளையாது என்பது தெரிந்தும், அடுத்தகட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதில்லை.

வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை, பெரிய தொழிற்சாலைகள், குறு, சிறு தொழிற்சாலைகள், அருகில் பாலைவனம் இருப்பதால் அதிலிருந்து உருவாகும் தூசுப் புயல், அறுவடை முடிந்ததும் வயல்களில் காணப்படும் வைக்கோல்கள் எரிக்கப்படுவது, விறகு அடுப்புகள், ஜெனரேட்டா்களிலிருந்து வெளியாகும் புகை என்று தில்லியில் காற்று மாசு பிரச்னைக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவற்றை எதிா்கொள்ள அடிப்படையில் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. அதற்கு முதலீடும் வேண்டும்.

10 ஆண்டுக்கும் மேலான வாகனங்கள் தில்லியில் தகுதி நீக்கம் பெறும் அதே நேரத்தில், 15 ஆண்டுகளுக்கும் குறைவான வாகனங்களுக்கு, பிற மாநிலங்களில் அந்த வாகனங்களைப் பதிவு செய்து கொள்ள தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதாக தில்லி அரசு அறிவித்திருக்கிறது. அதாவது அண்டை மாநிலங்களான ஹரியாணா, உத்தர பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தானில் அவற்றைப் பதிவு செய்துகொள்ளலாம். அந்த வாகனங்கள் தில்லியில் ஓடுவதை எப்படித் தடுக்க முடியும் என்கிற கேள்வியை எழுப்பாமல் இருக்க முடியவில்லை.

நன்றாகப் பராமரிக்கப்படும் பல பழைய வாகனங்கள் குறைந்த அளவு புகையும், பராமரிப்பில்லாத புதிய வாகனங்கள் அதிகப் புகையும் வெளியேற்றாது என்பது என்ன நிச்சயம்? தில்லியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹரியாணா, பஞ்சாப், பாகிஸ்தானில் எரிக்கப்படும் வைக்கோலால் தில்லியில் காற்று மாசடையும்போது, அண்டை மாநில வாகனங்களால் மாசு அதிகரிக்காதா என்கிற வாதத்துக்கு பதிலில்லை.

டீசலுக்கும் பெட்ரோலுக்கும் அதிக விலை வித்தியாசம் இல்லாததால் பலரும் பெட்ரோல் வாகனங்களுக்கு மாறத் தொடங்கிவிட்டாா்கள். மின்சார வாகனப் பயன்பாடு வெகுதூரத்தில் இல்லை. அதனால், டீசல் வாகனங்களுக்குப் பத்தாண்டு காலவரம்பு என்பது, காற்று மாசைக் குறைக்க உதவுமா என்பது சந்தேகம்தான்.

வாகனங்கள் வெளியேற்றும் புகையின் அளவுதான் அளவுகோளாக இருக்க முடியுமே தவிர, வாகனங்களின் வயது அடிப்படையாக இருப்பது பயனளிக்காது. மின்சாரத்திலும் இயற்கை எரிவாயுவிலும் குறைந்த கட்டணத்தில் இயங்கும் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிப்பதும், தனியாா் வாகனப் பயன்பாட்டைக் குறைப்பதும் வேண்டுமானால் பயனளிக்கக் கூடும்.

கடைசியாக ஒரு சந்தேகம் - அரசின் நிா்வாக ரீதியிலான முடிவுகளை எல்லாம் நீதிமன்ற உத்தரவின் பேரில் நிறைவேற்றும் போக்கு சரியான அணுகுமுறைதானா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com