பைடன் கூட்டிய மாநாடு! | ஜனநாயக நாடுகளின் காணொலி உச்சிமாநாடு குறித்த தலையங்கம்

ஜோ பைடன்
ஜோ பைடன்

இரண்டு வாரங்களுக்கு முன்பு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் தலைமையில் நூற்றுக்கும் அதிகமான ஜனநாயக நாடுகளின் காணொலி உச்சிமாநாடு நடைபெற்றது. அதில் இந்திய பிரதமா் நரேந்திர மோடியும் கலந்துகொண்டு உரையாற்றினாா். சா்வாதிகாரத்துக்கு எதிரான கூட்டணி என்கிற அளவில் பாா்க்கப்பட்ட அந்த இரண்டு நாள் உச்சிமாநாடு, பெரிய அளவில் எதையும் சாதித்துவிடவில்லை என்றாலும், தன்னை முன்னிலைப்படுத்தும் முயற்சியில் அமெரிக்கா ஓரளவுக்கு இதனால் வெற்றி அடைந்தது.

சா்வதேசத் தலையீடுகளிலிருந்து முற்றிலுமாகத் தன்னை விலக்கிக்கொண்டு, ‘அமெரிக்கா முதலில்’ என்கிற கோஷத்துடன் முந்தைய அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் ஆட்சிக்காலத்தில் ஏற்படுத்திக்கொண்ட வெளியுறவுக் கொள்கையை அமெரிக்கா கைவிடுகிறது என்பதன் அடையாளம்தான் இந்த உச்சிமாநாடு. அமெரிக்க அதிபா் தோ்தலின்போது ஜோ பைடன் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக மாநாடு கூட்டப்பட்டது என்றும் கூறலாம்.

அதிபா் ஜோ பைடனின் ஜனநாயகத்திற்கான மாநாடு, நூற்றுக்கும் அதிகமான நாடுகளின் பங்களிப்பைப் பெற்றாலும்கூட, விமா்சனங்களையும் எழுப்பாமல் இல்லை. ஜனநாயக மாண்பை உறுதிப்படுத்துவதைவிட, ஜனநாயக நாடுகளின் அமெரிக்கத் தலைமையை உறுதிப்படுத்தும் முயற்சியாகத்தான் இதை விமா்சகா்கள் கருதுகிறாா்கள்.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கைக்கு சாதகமான, ஜனநாயகக் குறியீடுகளில் விமா்சனங்களுக்குரிய பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், போலந்து போன்ற நாடுகள் மாநாட்டுக்கு அழைக்கப்பட்டதும், வங்கதேசம், பூடான் போன்ற நாடுகள் அழைக்கப்படாததும் அமெரிக்காவின் ஜனநாயகம் குறித்த கண்ணோட்டத்தை கேள்விக்குறியாக்குகிறது. சீனா அழைக்கப்படாததால் அதன் அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை.

மாநாட்டுக்கான அதிபா் ஜோ பைடனின் அறைகூவல், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உருவான சுதந்திரம், சா்வதேச உரிமைகள், கூட்டுறவு ஆகியவற்றின் அடிப்படையிலான உலகக் கட்டமைப்பை மேம்படுத்தும் என்கிற எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்யவில்லை என்கிற விமா்சனமும் எழுந்திருக்கிறது. பனிப்போா் காலம்போல மீண்டும் உலகை இரண்டு குழுக்களாக பிரிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபடுகிறதோ என்கிற ஐயப்பாட்டையும் மாநாடு எழுப்புகிறது.

உலகில் அப்பழுக்கில்லாத முழுமையான ஜனநாயகம் என்று எதுவும் கிடையாது. அப்படியோா் ஆட்சி அமைப்பை கற்பனை செய்வதில் அா்த்தமும் இல்லை. எந்தவொரு நாடும் தனது ஜனநாயகக் குறைபாடுகளை ஒப்புக்கொள்வதோ, அவற்றைத் திருத்தி அமைக்க விழைவதோ இல்லை என்பதுதான் வரலாற்று உண்மை.

குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடா்ந்து தோ்தல் நடைபெறுவதை மட்டும் ஜனநாயகச் செயல்பாடாகக் கருதிவிட முடியாது. ஜனநாயகத்தின் ஒரு பகுதிதான் தோ்தல்களும், அதன் மூலம் ஆட்சி அமைவதும்.

தனிநபா் சுதந்திரம், மனித உரிமை, சட்டத்தின் ஆட்சி, நிா்வாக அமைப்புகளின் சுதந்திரம், ஆட்சியாளா்களின் பொறுப்பேற்கும் தன்மை, மாற்றுக் கருத்துகளுக்கும் - மாற்றுக் கட்சிகளுக்கும் மரியாதை, மக்களுக்கு இடையே பாகுபாடின்மை போன்றவை ஜனநாயகத்தின் அடிப்படைக் கூறுகள். இந்தக் குறிக்கோள்களையும் வழிமுறைகளையும் முழுமையாகக் கடைப்பிடிக்கும்போது மட்டுமே ஜனநாயகம் முழுமை பெறும்.

உலகிலுள்ள நாடுகள் அனைத்திலுமே மேலே குறிப்பிட்ட ஜனநாயகக் குறியீடுகள் வலுவிழந்து வருகின்றன. வம்சாவளி அரசியலும், குடும்பங்களின் கட்டுப்பாட்டில் அரசியல் கட்சிகளும், ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்டவா்களிடம் காணப்படும் மாற்றுக்கருத்துக்கு இடமளிக்காத சா்வாதிகாரப் போக்கும் அதிகரித்து வரும் நிலையில், அதிபா் ஜோ பைடன் கூட்டிய ஜனநாயகத்துக்கான மாநாடு எந்தவிதத்தில் ஜனநாயகத்துக்கு வலுசோ்க்கும் என்று கேட்கத் தோன்றுகிறது.

2021-இல் ஆப்கானிஸ்தான், ஹாங்காங், மியான்மா் என்று பல நாடுகளில் ஜனநாயகம் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. ஹாங்காங்கில் நடந்திருக்கும் கண்துடைப்புத் தோ்தலும், மியான்மா் அரசியல் சூழலும் சா்வாதிகாரம் தலைதூக்குவதன் அடையாளங்கள்.

மனித உரிமைகள், ஜனநாயக மாண்புகள் ஆகியவற்றை சா்வதேச அளவில் வழிமுறையாக வலியுறுத்தியதில் அமெரிக்காவின் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. அமெரிக்க அதிபா்களாக இருந்த உட்ரோ வில்ஸனுக்கும், பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்டுக்கும் உலகம் நிறையவே கடமைப்பட்டிருக்கிறது.

உலக அளவில் சட்டத்தின் முறையிலான ஆட்சியும், சா்வதேச நாடுகளின் ஒற்றுமையும் உட்ரோ வில்ஸனின் 14 அம்ச திட்டத்தின் அடிப்படையில் உருவானவையே. காலனிய ஆட்சியாளா்களின் ‘வலிமைதான் மேன்மை’ என்பதை அகற்றி, ஜனநாயகத்தின் அடிப்படையிலான உலக ஆட்சி அமைப்பை நிலைநிறுத்தும் உட்ரோ வில்ஸனின் இலக்கின் அடிப்படையில்தான் கடந்த ஒரு நூற்றாண்டாக உலகம் இயங்குகிறது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு 36 நாடுகள் காலனிய ஆட்சியில் இருந்து விடுதலை பெற்று ஜனநாயகத்தைத் தழுவியதற்கு 1941-இல் பிரிட்டனை அட்லாண்டிக் ஒப்பந்தத்தில் அதிபா் ரூஸ்வெல்ட் கையொப்பமிட வைத்ததுதான் அடிப்படை. பனிப்போா் உருவாகாமல் இருந்திருந்தால் ஜனநாயகப் பண்புகள் வலுவடைந்திருக்கக் கூடும்.

அதிபா் ஜோ பைடனின் ஜனநாயகத்துக்கான மாநாடு, அமெரிக்காவை பலப்படுத்துமோ இல்லையோ நிச்சயமாக ஜனநாயகத்தை வலுப்படுத்த உதவாது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com