பாதுகாப்பு அச்சுறுத்தல்...| லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்த தலையங்கம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்...| லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு குறித்த தலையங்கம்

 பாகிஸ்தானின் எல்லையை ஒட்டிய மாநிலம் என்பதால், பஞ்சாபின் நிகழ்வுகள் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையக்கூடும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒருபுறம் மதத் தீவிரவாதமும், இன்னொருபுறம் பயங்கரவாத நடவடிக்கைகளும் பஞ்சாப் குறித்த அச்சத்தை அதிகரிக்கின்றன.
 தேர்தல் நெருங்கும்போது, பயங்கரவாதச் செயல்கள் தலைதூக்குவதும், அதன் மூலம் அரசியல் கட்சிகள் ஆதாயம் தேட முற்படுவதும் புதிதொன்றும் அல்ல. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரையில் கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னால் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம், அப்போது ஆட்சி செய்த அகாலிதள அரசுக்கு எதிராகத் திரும்பியது. அதைப் பயன்படுத்திக் கொண்டு அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.
 அமிருதசரஸ் பொற்கோயிலில் நடந்த கும்பல் கொலை சம்பவத்தின் பரபரப்பு அடங்குவதற்குள், லூதியானா நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஆறு பேர் காயமடைந்திருக்கிறார்கள். சில வாரங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அறிவிப்பு வர இருக்கும் நிலையில், இந்த குண்டு வெடிப்பு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
 பெரிய அளவிலான சேதத்தை ஏற்படுத்தும் திட்டமிடலுடன்தான் லூதியானா நீதிமன்ற வளாகத்தில் குண்டு வெடிப்புக்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். ஆனால், வழக்குரைஞர்களின் வேலை நிறுத்தம் அந்தத் திட்டமிடலைத் தகர்த்து விட்டது. அதனால், அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படாமல் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதன் பின்னணி என்ன, எப்படி, யாரால் குண்டு வைக்கப்பட்டது உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும்கூட விடை கிடைக்கவில்லை.
 பஞ்சாபில் கடந்த ஓராண்டில் இதுபோன்று பல சம்பவங்கள் நடந்துவிட்டன. ஆகஸ்ட் மாதம் அமிருதசரஸ் - அஜ்னாலா சாலையில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது. செப்டம்பர் மாதம் ஜலாலாபாதில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் உயிரிழந்தனர். கடந்த மாதம் பதான்கோட் ராணுவ முகாமின் மீது கையெறி குண்டு வீசப்பட்டது. குண்டு வெடிப்பு சம்பவங்கள் மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் இருந்து டிபன் பாக்ஸ் குண்டுகளும், "ஹேண்ட் கிரனேட்' எனப்படும் கையெறி குண்டுகளும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.
 பஞ்சாபில் நடைபெறும் இதுபோன்ற குண்டு வெடிப்பு சம்பவங்களுக்குப் பல்வேறு காரணங்கள் கூறலாம். முதலாவதும் முக்கியமானதுமான காரணம், பாகிஸ்தானுடனான எல்லை. பஞ்சாபில் கலவரத்தைத் தூண்டவும், குழப்பத்தை விளைவிக்கவும் பயங்கரவாத அமைப்புகள் எல்லை கடந்துவந்து செயல்படுவதைப் புறந்தள்ள முடியாது. முதல்வராக இருந்த கேப்டன் அமரீந்தர் சிங் ஓராண்டுக்கு முன்னால் தெரிவித்ததுபோல, "ட்ரோன்கள்' மூலமாக வெடிமருந்துகள், போதைப் பொருள்கள் போன்றவை பஞ்சாபில் போடப்படுவதை முற்றிலுமாக நிராகரிக்க முடியாது.
 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில் இதுபோன்ற சம்பவங்களை நிகழ்த்துவதன் மூலம் பயங்கரவாதிகளும், தேசவிரோத சக்திகளும் குழப்பத்தை விளைவிக்க முற்படுவது இயல்புதான். தீவிரவாத நடவடிக்கைகளையும், குண்டு வெடிப்புகளையும் ஆளும் காங்கிரஸ் கட்சியால் தடுக்க முடியவில்லை என்று, பாஜக-வும், ஆம் ஆத்மி கட்சியும் குற்றம் சாட்டுகின்றன. ஆட்சியில் இருக்கும் காங்கிரஸ் கட்சியோ, சிரோமணி அகாலிதளத் தலைவர் ஒருவர் மீது குற்றப்பத்திரிகை பதிவு செய்து, அந்தக் கட்சியின் மீது பழி சுமத்துகிறது.
 மத்தியில் ஆளும் பாஜக-வுக்கும், மாநிலத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸýக்கும் இடையேயான அரசியல் கருத்து வேறுபாடுகளை தேச விரோத சக்திகள் பயன்படுத்திக் கொள்ள முற்படுகின்றன. அது மட்டுமல்லாமல், ஆளும் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் கோஷ்டிப் பூசல்கள், சட்டம் - ஒழுங்கு நிர்வாகத்தில் கவனம் செலுத்த விடாமல் முதல்வரையும் அமைச்சர்களையும் திசைதிருப்புகின்றன.
 எல்லைப்புறத்தில் போதுமான பாதுகாப்பும், ஊடுருவல் ஏற்படாமல் இருப்பதை உறுதிப்படுத்தும் நிலையும் அவசியம் என்பதை எல்லா அரசியல் கட்சிகளும் உணராமல் இல்லை. அதே நேரத்தில், பயங்கரவாதத்துக்கும், தீவிரவாதிகளின் நடமாட்டத்துக்கும் எதிராக ஒருங்கிணைந்து செயல்பட கட்சிகள் தயாராகவும் இல்லை.
 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பும் இதுபோல பல குண்டு வெடிப்புகளும், பயங்கரவாத செயல்பாடுகளும் பஞ்சாபில் காணப்பட்டன என்பது என்னவோ உண்மை. 2017-இல் நடந்த குண்டு வெடிப்பு, தேர்தலுக்கு ஐந்து நாள்களுக்கு முன்பு நடந்தது என்பதும், அது இப்போதைய லூதியானா குண்டுவெடிப்பு போலல்லாமல் தீவிரமானது என்பதும் ஒருபுறமிருந்தாலும், ஒப்பிட்டுப் பார்க்காமல் இருக்க முடியவில்லை.
 மத்திய - மாநில ஆளும் கட்சிகள் இந்த சம்பவங்களில் அரசியல் ஆதாயம் அடையப் பார்க்காமல், தேசப் பாதுகாப்பு என்கிற கண்ணோட்டத்துடன் அணுகக் கடமைப்பட்டிருக்கின்றன. தீவிரவாத நடவடிக்கைகள் மட்டுமல்லாமல், மத ரீதியிலான பிளவும் தேர்தல் நெருங்க நெருங்கப் பெரிதாக்கப்படும் போக்கையும் பார்க்க முடிகிறது. போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளும் அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் நிலையில், குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது போல, தீவிரவாத அமைப்புகள் தலைதூக்கிவிடாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது.
 பஞ்சாப் மாநிலத்தின் காவல்துறைத் தலைவர் பதவி நிரப்பப்படாமல் இருக்கிறது. என்னவொரு பொறுப்பற்றதனம்...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com