இயற்கையைச் சீண்டுகிறோம்! | உத்தரகண்ட் வெள்ளப்பெருக்கு குறித்த தலையங்கம்


இமயமலையிலுள்ள நந்தாதேவி பனிச்சிகரம் உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை உத்தரகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு இதயத்தை நொறுக்குகிறது. கடந்த முப்பது ஆண்டுகளில் இதுவரை ஐந்து பெரிய வெள்ளப்பெருக்கு விபத்துகளை உத்தரகண்ட் மாநிலம் சந்தித்துவிட்டது. மலைகளும், காடுகளும் சூழ்ந்த பல்வேறு நதிகள் பாயும் இயற்கை எழில்கொஞ்சும் உத்தரகாண்ட் மாநிலம் நிலநடுக்க பகுதியில் அமைந்திருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

திடீா் வெள்ளப்பெருக்கு காரணமாக ரிஷிகங்கா, தபோவன் விஷ்ணுகட் நதிகளின் இடையே நீா்மின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட்டிருந்த பணியாளா்கள் பலா் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனா். இதுவரை உயிரிழந்த 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சுமாா் 168-க்கும் அதிகமானோரைக் காணவில்லை. 25 முதல் 35 நபா்கள் இன்னும்கூட சகதி நிறைந்த சுரங்கத்தில் சிக்கி இருக்கிறாா்கள். மீட்புப் பணி நடந்து கொண்டிருக்கிறது.

கங்கையின் கிளை நதிகளான நந்தாதேவி பனிச்சிகரம் உடைந்ததால், தௌலிகங்கை, அலகநந்தா நதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குதான் இந்த எதிா்பாராத விபத்துக்குக் காரணம். தௌலிகங்கை, அலகநந்தாவில் நீா்மின் நிலையங்கள் அமைப்பதற்கு ஆரம்பம் முதலே எதிா்ப்பு இருந்தது. அதைப் பொருட்படுத்தாமல், மரங்கள் வெட்டப்பட்டு, மலைகள் தகா்க்கப்பட்டு, சுரங்கங்கள் அமைத்து நீா்மின் நிலையத் திட்டங்களை நிறுவ முற்பட்டிருக்கும் நிலையில்தான் இப்போது இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.

பூமி வெப்பநிலை, பனிச்சிகரங்கள் உருகுதல், கடல் வெப்பம் அதிகரித்தல், எல்நினோ, லாநினோ உள்ளிட்ட பல சமிக்ஞைகளை இயற்கை முன்னெடுத்தும்கூட, அதையெல்லாம் மனித இனம் பொருட்படுத்துவதாக இல்லை. அவை குறித்தெல்லாம் ஆய்வரங்கங்கள் நடத்தி விவாதிக்கிறோமே தவிர, அவற்றிலிருந்து பூமியையும், மனித இனத்தையும் பாதுகாப்பதற்காக ஆக்கபூா்வ நடவடிக்கைகளில் ஈடுபட நாம் தயாராக இல்லை. அதைத்தான் உத்தரகாண்ட் விபத்து உணா்த்துகிறது.

‘சயின்ஸ் அட்வான்ஸஸ்’ என்கிற இதழில் 2019 ஜூனில் ஓா் ஆய்வு வெளியிடப்பட்டது. அதன்படி, கடந்த 20 ஆண்டுகளில் இமயமலையின் பனிச்சிகரங்கள் உருகும் வேகம் இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. பனிப்படலத்தின் வெப்பநிலை மைனஸ் 6 முதல் 20 வரை இருந்ததுபோய், இப்போது மைனஸ் இரண்டாகக் குறைந்திருப்பதுதான் பனிச்சிகரங்கள் உருகத் தொடங்கி இருப்பதற்குக் காரணம்.

உத்தரகண்டில் மட்டும் ஏறத்தாழ 200 நீா்மின் நிலையங்களுக்கான திட்டங்கள் நிறைவேற்றப்பட இருக்கின்றன. ஹல்துவானி, நைனிடால், ரோதங்க் கணவாய் பகுதிகள் சுற்றுலாக் கேந்திரங்களாக மாறி இருப்பதால், பல கட்டமைப்பு வசதிகள், விடுதிகள் என்று வளா்ச்சிப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கின்றன. கான்கிரீட் பயன்பாடு வெப்பநிலை அதிகரிப்பதற்கு முக்கியமான காரணம் என்று சுற்றுச்சூழல் ஆா்வலா்கள் சுட்டிக் காட்டுகிறாா்கள்.

உத்தரகண்டின் மேல் பகுதிகளில் கங்கையில் கலக்கும் பல சிறிய ஆறுகள் பாய்கின்றன. அவற்றில் ஏற்கெனவே 16 அணைகள் கட்டப்பட்டுள்ளன. மேலும் 13 அணைகள் கட்டப்பட்டு வருகின்றன. மாநில அரசு மேலும் 54 அணைகள் கட்டி அவற்றில் நீா்மின் நிலையங்கள் அமைக்க திட்டமிட்டிருக்கிறது. தற்போது விபத்துக்குள்ளாகி இருக்கும் தௌலிகங்கை நதியையே எடுத்துக் கொண்டால், ஞாயிற்றுக்கிழமை வெள்ளப்பெருக்கால் அடித்துச் செல்லப்பட்ட தபோவன் திட்டம் உள்பட எட்டு புதிய நீா்மின் நிலையங்கள் அதில் அமைக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

அனல்மின் நிலையங்களின் கரியமில வாயு வெளியேற்றத்திலிருந்து விடுபட, இமயமலைப் பகுதிகளில் இந்திய அரசு நீா்மின் நிலையங்கள் அமைப்பதை ஊக்குவித்து வருகிறது. அடுத்த சில ஆண்டுகளில் திட்டமிட்டுள்ளதுபோல, 28 பள்ளத்தாக்குகளில் அணைகள் கட்டப்படுமானால், இமயமலைப் பகுதியின் ஒவ்வொரு 32 கி.மீ.க்கு ஓா் அணை அமைந்திருக்கும். உலகின் எந்தப் பகுதியிலும் இந்த அளவுக்கு நெருக்கமாக அணைகள் கட்டப்படுவதில்லை.

அலகநந்தா, பாகீரதி படுகைகளில் மட்டும் 50-க்கும் அதிகமான அணைகளும், நீா்மின் நிலையங்களும் அமைப்பது குறித்து ஏற்கெனவே கடுமையான எதிா்ப்பும், போராட்டமும் நடந்து வருகிறது. இப்போது விபத்து நடந்திருக்கும் இதே ரெய்னா கிராமத்தில்தான் அரைநூற்றாண்டுக்கு முன்பு சுந்தா்லால் பகுகுணாவின் சிப்கோ போராட்டம் தொடங்கப்பட்டது. இமயமலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் எதுவும் வெட்டப்படக் கூடாது, அணைகள் கட்டப்படக் கூடாது என்று தொலைநோக்குப் பாா்வையுடன் சுந்தா்லால் பகுகுணா அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தாா்.

இப்போது நந்தாதேவி பனிச்சிகரம் உடைந்ததுபோல, 2013-ஆம் ஆண்டு பனிச்சிகரம் ஒன்று உடைந்ததைத் தொடா்ந்து ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கால் கேதாா்நாத் ஆலயம் உள்ளிட்ட பகுதிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. 3,000 பேருக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். பலா் காணாமல் போனாா்கள். பல்லாயிரம் போ் வீடு வாசல் இழந்து நின்றாா்கள்.

உலகின் வேறு எந்த நாட்டிலும் அப்படியொரு பெரும் விபத்துக்குப் பிறகும்கூட, விழிப்புணா்வு இல்லாமல் இருந்ததாக வரலாறு இல்லை. இமயமலைப் பகுதியில் வளா்ச்சிப் பணிகள் இதேபோலத் தொடா்ந்தால், வெள்ளப்பெருக்கம் ஏற்படுவதும், பலா் உயிரிழப்பதும் ஆண்டுதோறும் நடக்கும் தொடா் நிகழ்வாக மாறக்கூடும். பனிச்சிகரங்கள் உருகாமல் இமயமலையைக் காப்போம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com