முடிந்துவிடவில்லை... | டிரம்ப்புக்கு எதிரான இரண்டாவது பதவி நீக்கத் தீர்மானம் குறித்த தலையங்கம்


அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட இரண்டாவது பதவி நீக்கத் தீர்மானம், அமெரிக்க மேலவையில் (செனட்) தோல்வி அடையும் என்பது அனைவருக்கும் முன்கூட்டியே தெரியும். இருந்தாலும்கூட, ஜனவரி 6-ஆம் தேதி வாஷிங்டனில் நடந்த கலவரத்துக்கு முன்னாள் அதிபர் டிரம்ப்பின் ஆதரவு இருந்தது என்பதை வருங்காலத்திற்குப் பதிவு செய்வதற்கு அந்தப் பதவி நீக்கத் தீர்மானம் உதவியது என்கிற அளவில் பலருக்கும் ஆறுதல். 

அமெரிக்க ஜனநாயகம் வெட்கப்படும் அளவிலான கலவரமும், வெறியாட்டமும் ஜனவரி 6-ஆம் தேதி நடைபெற்றது. அதை அமெரிக்கா மட்டுமல்ல, உலக வரலாறு மறந்துவிட முடியாது. ஜோ பைடன் தலைமையில் ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தபோது அந்தக் களங்கத்தைத் துடைக்கும் விதமாக, முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவின் மக்களவையில் (காங்கிரஸ்) பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றியது. 

அமெரிக்காவில் அதிபர்களைப் பதவி நீக்கம் செய்வது என்றால், அது அவ்வளவு சுலபம் அல்ல. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலவையில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முதலில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மை இருந்தால் மட்டுமே மேலவையின் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். அந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக மேற்கோள் காட்டப்பட்ட முன்னுதாரணம் இந்தியா தொடர்பானது என்பதுதான் வேடிக்கை. 

பிரிட்டிஷ் இந்தியாவில் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் வாரன் ஹேஸ்டிங்ஸ். அவர் 1785-இல் பதவி ஓய்வு பெற்ற பிறகு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானம் முன்மொழியப்பட்டது. 

இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருக்கும்போது சொத்துக் குவிப்புக்காகவும், அச்சுறுத்திப் பணம் பறித்ததற்காகவும், அவரை எதிர்த்த மகாராஜா நந்தகுமார் என்பவரை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டதற்காகவும் வாரன் ஹேஸ்டிங்ஸ் மீது பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் விவாதிக்கப்பட்டது. அந்தத் தீர்மானம் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது என்றாலும், அமெரிக்க மேலவையில் அதிபர் டிரம்ப்புக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்துக்கு அது முன்னுதாரணமாக சுட்டிக் காட்டப்பட்டது.

"ஒருவர் பதவியில் இருந்து விலகினாலும், தனது பதவிக் காலத்தில் அவர் செய்த தவறுகளுக்காக அவரை விசாரிப்பதிலும், அவருக்கு எதிராகப் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவதிலும் தவறில்லை. அதற்கு வாரன் ஹேஸ்டிங்ஸூக்கு எதிராக பிரிட்டிஷ் நாடாளுமன்ற நடவடிக்கை முன்னுதாரணம் இருக்கிறது' என்று ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜேமி ரஸ்கின் வாதிட்டார்.

அதிபர் டிரம்ப்புக்கு எதிரான வாதத்தில் சில நியாயங்கள் இருக்கின்றன. அமெரிக்காவில் தேர்தல் முடிவுகள் நவம்பர் மாதம் வெளியாகிவிடும். ஆனால், புதிய அதிபர் பதவியேற்பு அடுத்து வரும் ஜனவரி 20-ஆம் தேதிதான் நடைபெறும். இடைப்பட்ட காலகட்டத்திலும் அதிபராக இருப்பவர் முழு அதிகாரமும் பெற்றவராக வெள்ளை மாளிகையில் தொடருவார். 

பதவிக் காலம் முடிய இருக்கும் அதிபரின் செயல்பாடுகள் முக்கியமானவை. அதிபர் பதவி வழங்கும் பாதுகாப்பில், வெள்ளை மாளிகையில் கழிக்கும் தனது கடைசி நாள்களில் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட அதிபர்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற முன்னுதாரணத்தை "ஜனவரி விதிவிலக்கு' ஏற்படுத்திக் கொடுத்துவிடலாகாது என்கிற வாதம் கவனத்துக்குரியது. 

நான்கு மணிநேர விவாதத்துக்குப் பிறகு, ஏழு குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பதவி நீக்க விசாரணைக்கு ஆதரவாக வாக்களித்ததால், விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் இரண்டு முறை பதவி நீக்க விசாரணையை எதிர்கொண்ட ஒரே அதிபர் என்கிற (அவப்)பெயர் பெற்றவர் டொனால்ட் டிரம்ப் மட்டுமே. அதேபோல மிகக் குறைவான நாள்கள் விவாதிக்கப்பட்ட பதவி நீக்க விசாரணையும் இதுவாகத்தான் இருக்கும். 

விசாரணையின் முடிவில் எதிர்பார்த்தது போலவே தீர்மானம் தோல்வி அடைந்தது. தீர்மானத்தை விவாதத்துக்கு அனுமதிக்கலாமா என்பதற்குப் பெரும்பான்மை பலம் போதும். ஆனால், தீர்மானத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. அதனால், தீர்மானம் தோல்வி அடைந்தது. 

அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத்  தீர்மானம் தோல்வி அடைந்ததால், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப், 2024-இல் நடக்கவிருக்கும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கவில்லை என்பதுதான் இதிலிருந்து வெளிப்படும் முக்கியமான செய்தி. பதவி நீக்கத் தீர்மானம் தோல்வி அடைந்தது என்பதாலேயே, முன்னாள் அதிபர் டிரம்ப்பின் பிரச்னைகளும், கவலைகளும் தீர்ந்துவிடவும் இல்லை. 

அமெரிக்க அரசமைப்புச் சட்ட 14-ஆவது சட்டத்திருத்தத்தின் 3-ஆவது பிரிவின்படி, எந்தவொரு தனிநபரும் கலவரத்தை தூண்டுபவராக இருந்தால், அவர்களைப் பதவி வகிக்கத் தகுதியற்றவர்களாக அறிவிக்க முடியும். அதற்கு இரண்டு அவைகளிலும் சாதாரணப் பெரும்பான்மை இருந்தாலே போதும். பதவியிலிருந்து அகன்றது முதல் டொனால்ட் டிரம்ப் சாதாரண அமெரிக்கக் குடிமகன் ஆகிவிடுவார். அவர் மீதான கிரிமினல் வழக்குகளை நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும்.

இதெல்லாம் ஆனாலும், முன்னாள் அதிபர் டிரம்ப்பையும் அவர் முன்னெடுத்திருக்கும் "டிரம்ப்பிஸம்' என்கிற குடியேற்றத்துக்கு எதிரான அமெரிக்க இனவெறிக் கொள்கையையும், அமெரிக்காவிலிருந்து அகற்ற இயலாது. ஏழரை கோடி அமெரிக்கர்கள் அவருக்கு வாக்களித்திருக்கிறார்கள், அவரை ஆதரிக்கிறார்கள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com