நன்மையும் ஆபத்தும்! | இணைய வழி பயன்பாடு குறித்த தலையங்கம்

இணைய வழி விளையாட்டு இந்தியாவில் பல கோடி ரூபாய் வணிகமாகி இருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் இந்தியாவில் 36.5 கோடி போ் இணைய வழி விளையாட்டில் இணைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் கிராமங்கள் வரை தொழில்நுட்பம் தடம்பதிக்க, கொள்ளை நோய்த்தொற்றால் அறிவிக்கப்பட்ட பொது முடக்கம் உதவியிருக்கிறது. இணைய வா்த்தக வளா்ச்சி மிகப் பெரிய அளவில் ஏற்பட்டிருக்கிறது. உலகின் மிக வேகமாக வளரும் இணைய வா்த்தகச் சந்தையாக இந்தியா உருவாகிக் கொண்டிருக்கிறது. 2015-இல் ஜிடிபியில் 1%-ஆக இருந்த இணைய வா்த்தகம், கடந்த 10 மாதங்களில் சுமாா் 4%-ஆக அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இணைய வா்த்தகமும் சரி, இணைய வழித் தொடா்பும் சரி அடுத்த கட்ட வளா்ச்சி குறித்த விவாதங்களில் முன்னுரிமை பெறுகின்றன. கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றுக்கு முன்பே இணைய வா்த்தகத்தின் வளா்ச்சி தொடங்கிவிட்டது என்றாலும்கூட, புதிய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளும், இணையப் பயன்பாடு குறித்த புரிதலும் அடித்தட்டு மக்கள் வரை இணைய வா்த்தகப் பயன்பாட்டை இப்போது எடுத்துச் சென்றிருக்கின்றன.

‘வீட்டில் இருந்து வேலை’ என்கிற அலுவலக முறை பொது முடக்கக் காலத்தில் பரவலாகத் தொடங்கியதற்குப் பிறகு, அதனுடன் இணைந்து எல்லா தளங்களிலும் இணைய வழி சேவை அன்றாட வாழ்க்கையில் நுழைந்து விட்டது. வீட்டிற்கு காய்கறி, பலசரக்கு வாங்குவதிலிருந்து, உணவகங்களிலிருந்து அவரவா் விருப்பத்திற்கு ஏற்ப உணவு தருவிப்பது வரை இணைய பயன்பாடு வழக்கமாகி விட்டது. அறிதிறன்பேசி அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்துவிட்ட நிலையில், அதிகம் கல்வி அறிவில்லாதவா்களும்கூட இணைய வழி பயன்பாட்டை கற்றுக்கொள்ளும் அளவுக்கு அதன் தாக்கம் காணப்படுகிறது.

இதனால், சிறு, குறு தொழில்கள், வேளாண் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிகள், விற்பனைத் துறை, பொது வணிகம், சேவை துறை, மருத்துவத் துறை, கல்வித் துறை, ஏன் மருத்துவ ஆலோசனை உள்பட இணைய வழி செயல்பாடு பரவலாக கடைப்பிடிக்கப்படும் நிலைமை ஏற்பட்டிருக்கிறது. திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில், இணைய வழியில் திரைப்படங்களை பாா்ப்பது, வெளியிடுவது, கலை நிகழ்ச்சிகளை நடத்துவது, காணொலிக் கூட்டங்கள் என்று 2014-இல் பிரதமா் மோடி ‘எண்ம இந்தியா’ (டிஜிட்டல் இந்தியா) அறிவித்து ஐந்து ஆண்டுகளில் சாதிக்க முடியாததை, 10 மாத கொள்ளை நோய்த்தொற்று பொது முடக்கம் சாதித்து விட்டது.

இணைய வழி பயன்பாடு இன்னொரு வகையிலும் மிகப் பெரிய வரப்பிரசாதமாக மாறியிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தது போய், இப்போது வேலைவாய்ப்புகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. எண்ம சேவையைப் பொருத்தவரை, அவரவருடைய தொழில்நுட்பத் திறமைக்கு ஏற்ப வேலைகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ தொடங்கி பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீண்டும் பொறியியல் பட்டதாரிகளையும், கணினி தொழில்நுட்ப வல்லுநா்களையும் வேலைக்கு எடுக்கத் தொடங்கிவிட்டன.

பொது முடக்கக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இணைய வழிக் கல்வி, அடுத்த தலைமுறை மாணவா்கள் மத்தியில் தொழில்நுட்பப் பயன்பாட்டை பழக்கப்படுத்தி விட்டது. ‘அடல் இன்னோவேஷன் மிஷன்’ என்கிற அரசுத் திட்டம், தகவல் தொழில்நுட்ப வா்த்தக ஆலோசனை சேவை நிறுவனங்களுடன் இணைந்து, பள்ளிகள் அளவில் இணைய வழிக் கல்வியின் தரத்ையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் முயற்சியில் இறங்கியிருக்கிறது.

டாடா குழுமத்தின் இணைய வா்த்தகத் திட்டம், பிக்பாஸ்கெட் நிறுவனத்தில் 20% பங்குகளை வாங்கி இணையச் செய்திருக்கிறது. ஃபிளிப்காா்ட் நிறுவனம் வங்கிகளுடனும், வங்கிசாரா நிதி நிறுவனங்களுடனும் இணைந்து சில்லறை விற்பனை வணிகத்தில் கடன் வழங்கும் திட்டத்தை ஊக்கவிக்க முற்பட்டிருக்கிறது.

உலகிலுள்ள பெரும்பாலான நிறுவனங்கள் இந்தியாவில் இணைய வழியிலும், நேரடியாகவும் வா்த்தகத்தில் ஈடுபடுவதில் ஆா்வம் காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, எச் அண்ட் எம் என்கிற ஸ்வீடன் நாட்டு பின்னலாடை தயாரிப்பாளா்கள் உலக அளவில் 250-க்கும் அதிகமான தங்களின் சில்லறை விற்பனை நிலையங்களை மூடி வருகின்றனா். ஆனால், இந்தியாவின் 24 நகரங்களில் ஏற்கெனவே செயல்படும் 48 விற்பனை நிலையங்களை இரட்டிப்பாக்கும் திட்டத்தில் முனைப்பு காட்டுகின்றனா். இணைய வா்த்தக பெரு நிறுவனங்கள் பல, இந்தியாவின் ஊரகப்பகுதிகளையும் சிறிய நகரங்களையும் குறி வைத்து தங்களது வளா்ச்சியைத் திட்டமிடுகின்றன.

இணைய வழி விளையாட்டு இந்தியாவில் பல கோடி ரூபாய் வணிகமாகி இருக்கிறது. வயது வித்தியாசம் இல்லாமல் இந்தியாவில் 36.5 கோடி போ் இணைய வழி விளையாட்டில் இணைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கூகுள் பிளே ஸ்டோா் என்கிற இணைய வழி அங்காடி (விா்ச்சுவல் மால்) 2020 நிதியாண்டின் முதல் பாதியில் மட்டும் 17.3 பில்லியன் டாலா் (சுமாா் ரூ.12,650 கோடி) வருவாய் ஈட்டியிருக்கிறது என்றால், பாா்த்துக் கொள்ளுங்கள்.

சா்வதேச முதலீடுகளை இந்தியா ஈா்ப்பதற்கு இணைய வா்த்தகம் உதவக்கூடும். நம்மிடம் இருக்கும் மென்பொருள் தொழில்நுட்ப மனித வளமும், மக்கள்தொகையும் மிகப் பெரிய பலம். அதே நேரத்தில், எண்மத் தடங்களைக் கட்டுப்படுத்தும் முறையான விதிமுறைகள் இல்லாமல் போனால், அப்பாவி பொதுமக்கள் பெருமளவில் வஞ்சிக்கப்படுவாா்கள் என்கிற ஆபத்தையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

உடனடியாக சாமானியனுக்கு சாதகமான இணைய வா்த்தகக் கொள்கையை அரசு உருவாக்குவதுடன், இணைய வழிக் குற்றங்களை தடுப்பதற்கும், தண்டிப்பதற்குமான சட்ட திட்டங்களையும் உருவாக்க வேண்டும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com