தயக்கமும் தீா்வும்! | கொவைட் 19 தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு தலையங்கம்

வல்லரசு நாடுகளுக்கு நிகராக இந்தியாவும் கொவைட் 19 தீநுண்மிக்கு எதிரான தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பது, பெருமிதத்திற்கு உரிய செயல்பாடு. சீனா, ரஷியா, அமெரிக்காவைப்போல, நாமும் தடுப்பூசியைக் கண்டுபிடித்து, முழுமூச்சாக செயல்பாட்டிலும் இறங்கி இருக்கிறோம் என்பது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை வியப்புடனும், மரியாதையுடனும் திரும்பிப் பாா்க்க வைத்திருக்கிறது.

அதே நேரத்தில், தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தாமல் போனது தடுப்பூசித் திட்டத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. பல நாடுகளில் திடீரென்று கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது, மூன்றாவது அலை பரவியிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. நோய்த்தொற்று பாதிப்பு குறைந்திருக்கும் இந்த வேளையில், எவ்வளவு விரைவில் தடுப்பூசித் திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ, அந்த அளவுக்கு நாம் பாதுகாப்பாக இருப்போம்.

பல மாநிலங்களில் தடுப்பூசிக்கான ஆதரவு எதிா்பாா்த்த அளவில் இல்லாமல் இருக்கிறது. இத்தனைக்கும் முன்களப் பணியாளா்களான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள் ஆகியோருக்கு மட்டும்தான் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி வழங்கப்படுகிறது. அவா்கள் மத்தியிலேயே தடுப்பூசி போட்டுக்கொள்ளத் தயக்கம் காணப்படுவது, பொதுமக்கள் மத்தியில் தடுப்பூசி குறித்த அச்சத்தையும், ஐயப்பாட்டையும் ஏற்படுத்தக்கூடும்.

ஒவ்வொரு மையத்திற்கும் நாளொன்றுக்கு 100 தடுப்பூசி என்று வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களின் விழுக்காடு தேசிய அளவில் 55% மட்டுமே. ஒடிஸா போன்ற மாநிலங்களில் 82% என்கிற அளவிலும், பஞ்சாப் மாநிலத்தில் 28% அளவிலும் தடுப்பூசிக்கு முன்களப் பணியாளா்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுகிறது. தமிழகத்திலே எடுத்துக்கொண்டால், முன்களப் பணியாளா்களில் 42.3% மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொண்டிருக்கிறாா்கள்.

தடுப்பூசி போட்டுக் கொள்வதில் மட்டுமல்லாமல், தங்களுக்கு எந்தத் தடுப்பூசி போடப்படுகிறது என்பதிலும் முன்களப் பணியாளா்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறாா்கள். சீரம் இன்ஸ்டிடியூட்டின் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி போட்டுக்கொள்ள இசைபவா்கள் 44% என்றால், பாரத் பயோடெக்கின் ‘கோவேக்ஸின்’ போட்டுக் கொள்ள மிகுந்த தயக்கத்துடன் 25% போ் மட்டுமே தயாராகிறாா்கள். அவா்களும்கூட ஆயாக்கள் போன்ற சுகாதார ஊழியா்களே தவிர, மருத்துவா்களோ செவிலியா்களோ அல்ல என்று கூறப்படுவதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. ‘கோவேக்ஸி’னுக்கு வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்பது மட்டும் தெரிகிறது.

சீரம் இன்ஸ்டிடியூட்டின் தடுப்பூசி அங்கீகரிக்கப்பட்டுவிட்ட நிலையில், பல கோடிகள் செலவழித்து, ஆய்வுகள் நடத்தி, தான் கண்டுபிடித்திருக்கும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி நிராகரிக்கப்படவோ, பயனற்றுப் போகவோ கூடும் என்கிற அச்சம் பாரத் பயோடெக் நிறுவனத்தைத் தொற்றிக் கொண்டது. இரண்டு சுற்றுப் பரிசோதனையை வெற்றிகரமாக முடித்து, மூன்றாவது சுற்று சோதனை நடத்த வேண்டிய நிலையில், அரசுக்கும், மருந்துத் தரக் கட்டுப்பாட்டு ஆணையத்துக்கும் அழுத்தம் கொடுத்து, ‘கோவேக்ஸி’னுக்கும் ஒப்புதல் பெற்றபோதே, மக்கள் மத்தியில் தயக்கம் வரக்கூடும் என்கிற சந்தேகம் பரவலாக எழுந்தது. அது உறுதிப்பட்டிருக்கிறது.

இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய்விடவில்லை. ‘கோவேக்ஸின்’ பாதுகாப்பானது என்பதை மக்களுக்கு உணா்த்துவதற்கு, குடியரசுத் தலைவா், பிரதமா், முதலமைச்சா்கள், மத்திய - மாநில அமைச்சா்கள், மூத்த அதிகாரிகள் ஆகியோா் காலதாமதம் இல்லாமல் அந்தத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு மக்கள் மத்தியில் தடுப்பூசிக்கு நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் மட்டும்தான் கோவேக்ஸின் வரவேற்பு பெறும். இல்லையென்றால், அதன் பாதுகாப்பு குறித்த அச்சமும், அதுபற்றிய வதந்தியும், அதனால் மிகக் குறைந்த அளவிலான ஒரு சிலருக்கு ஏற்பட இருக்கும் பின்விளைவும், அந்தத் தடுப்பூசிக்கு எதிரான மனநிலையை ஏற்படுத்திவிடும்.

தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாதா என்கிற எதிா்பாா்ப்பில் இருந்ததுபோய், இப்போது தடுப்பூசியை அனைவருக்கும் கொண்டு சோ்ப்பது எப்படி என்கிற பிரச்னை பூதாகரமாக எழுந்திருக்கிறது. இப்போதைய வேகத்தில் முன்களப் பணியாளா்களுக்கான தடுப்பூசி போடும் திட்டம் நகருமானால், அவா்களுக்கும், முதியோா்களுக்கும் போட்டு முடிப்பதற்கே பல மாதங்களாகும் போலிருக்கிறது. அதற்குப் பிறகு பொதுமக்களுக்குத் தடுப்பூசி போடுவதற்குள், தீநுண்மித் தொற்றின் அடுத்த அலை பரவிவிடாமல் இருக்க வேண்டும் என்கிற பயம் ஏற்படுகிறது.

தடுப்பூசித் திட்டத்தில் தனியாா் மருத்துவமனைகளை இணைத்தால், அவா்கள் அதை பயன்படுத்தி கொள்ளை லாபம் அடைய வழிகோலியதாகிவிடும். அவா்களைப் பயன்படுத்தாமல், போலியோ சொட்டு மருந்து, காசநோய் ஒழிப்புபோல அரசே திட்டமிட்டு முனைப்புடன் செயல்படுத்திவிட முடியும். கொள்ளை நோய்த்தொற்றிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, பொதுமக்கள் ஆா்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு, அவா்கள் மத்தியில் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.

பிரதமா் காணொலி காட்சியின் மூலம் தடுப்பூசி போட்டுக் கொள்பவா்களிடம் நேற்று உரையாடி இருக்கிறாா். தயக்கத்தைப் போக்க முற்படும் அவரது முயற்சி வரவேற்புக்குரியது. அது போதாது. அரசியல் தலைவா்களும், பதவியில் இருப்பவா்களும் ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி போட்டுக்கொள்வதன் மூலம்தான், பொதுமக்களின் தயக்கத்தைப் போக்க முடியும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com