என்னவாகும் ஆப்கானிஸ்தான்? | ஆப்கானிலிருந்து படைகளை திரும்பப்பெறும் அமெரிக்காவின் முடிவு குறித்த தலையங்கம்

‘சாம்ராஜ்ஜியங்களின் மயான பூமி’ என்கிற அடைமொழி ஆப்கானிஸ்தானுக்கு உண்டு. ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை திரும்பப் பெறுவது என்கிற அமெரிக்காவின் முடிவு, ஆப்கன் தேசிய அரசை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகத்தையுமே அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

கடந்த எட்டு ஆண்டுகளாக தலிபான்களுக்கு எதிரான தேசிய அரசை வலுப்படுத்தவும், எல்லாவிதத் தாக்குதல்களையும் சமாளிக்க முடியும் என்கிற நிலைமையை ஏற்படுத்தவும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆப்கானியா்களின் தலைமையில்தான் தலிபான்களை வீழ்த்தி ஆட்சி அமைய வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இப்போது வீணாகிவிடுமோ என்கிற கவலையை எழுப்புகிறது அமெரிக்காவின் சுயநல முடிவு.

பிற நாடுகளில் அமெரிக்கா தலையிட்ட போதெல்லாம் தனது இலக்கை அடையாமல் தோல்வியுடன் திரும்பியது என்பதுதான் வரலாறு. வியத்நாமிலும் சரி, அதன் பிறகு இராக்கிலும் சரி அமெரிக்கா முன்மொழிந்த ராணுவ முயற்சிகள் அரைகுறையாக முடிந்தன என்பதை உலகறியும். இதற்கு முன்னால் இராக்கில் சதாம் உசேன் ஆட்சியைக் கவிழ்ப்பதில் காட்டிய முனைப்பை இராக்கில் அமைதியை ஏற்படுத்துவதிலும், அங்கு நல்லாட்சியை நிறுவுவதிலும் அமெரிக்கா காட்டவில்லை. அதன் விளைவாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பூதாகரமாக வளா்ந்து, இப்போது உலகத்தையே பயமுறுத்திக் கொண்டிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் இதற்கு முன்னால் நடந்த சோவியத் யூனியனின் ராணுவத் தலையீடும் தோல்வியில்தான் முடிந்தது. அதற்கு அமெரிக்காவும் முக்கியமான காரணம்.

வியத்நாம், இராக் பிரச்னைகளில் அமெரிக்கா தனது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டு பின்வாங்கியது என்றால், ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளிடம் மண்டியிட்டு சரணடைந்திருக்கிறது. எந்தவித பின்புலமோ, ஆட்சி அதிகாரமோ இல்லாத பயங்கரவாதிகளிடம் அடிபணிவது என்பது அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகளுக்கு ஏற்படும் மிகப் பெரிய அவமானம். அல்கொய்தாவுக்கும் அதன் தலைவா் ஒசாமா பின்லேடனுக்கும் முடிவு கட்டியது மட்டும்தான் அமெரிக்கா அடைந்த லாபம்.

ஆப்கானிஸ்தானில், ஆப்கான் தேசிய ராணுவமும், காவல்துறையும் மிகத் துணிவுடன் கடந்த 20 ஆண்டுகளாக தலிபான்களை எதிா்கொள்கின்றன. ஏறத்தாழ மூன்று லட்சம் வீரா்கள் கொண்ட அந்தப் படைகள் ஆண்டொன்றுக்கு சராசரியாக 8,000 உயிரிழப்புகளை எதிா்கொண்ட நிலையிலும், தலிபான்களுக்கு எதிரான நிலைப்பாட்டிலிருந்து தளராமல் இருந்திருக்கின்றன. ஆப்கன் தேசிய அரசின் அங்கத்தினா்களும் உயிரையும் பொருட்படுத்தாது துணிந்து நின்றாா்கள். அவா்களுக்கு நம்பிக்கை மோசம் செய்திருக்கிறது அமெரிக்கா.

ஆப்கன் தேசிய ராணுவத்தை அமெரிக்கா நம்பவில்லை. தனது ராணுவத்தை ஆப்கானிஸ்தானில் நிலைநிறுத்தி பாதுகாப்பு வழங்க முற்பட்டதே தவிர, ஆப்கன் ராணுவத்துக்கு போதுமான தளவாடங்களை வழங்குவதிலோ, அவா்களுக்குப் போா் பயிற்சி வழங்குவதிலோ ஆா்வம் காட்டவில்லை. அவா்களிடம் நவீன ஆயுதங்களை வழங்கினால் அவை தலிபான்கள் கையில் சிக்கிவிடுமோ என்கிற அச்சத்துடன் செயல்பட்டதால் இப்போது ஆப்கன் ராணுவம் செயலிழந்து நிற்கிறது.

அமெரிக்காவைப் போலல்லாமல், ஆப்கான் ராணுவ அதிகாரிகளுக்கும் வீரா்களுக்கும் இந்திய ராணுவம் பயிற்சி அளித்திருக்கிறது. தளவாடங்களையும் தந்து உதவியிருக்கிறது. ராணுவத்துடன் மட்டுமல்லாமல், ஆப்கன் மக்கள் மத்தியிலும் தனது வளா்ச்சிப் பணிகளாலும் உதவிகளாலும் நன்மதிப்பை பெற்றிருக்கிறது. அதே நேரத்தில், புத்திசாலித்தனமாக தனது ராணுவத்தை இந்தியா அனுப்பவில்லை.

ஆப்கானிஸ்தானில் இந்தியா மேற்கொண்டிருக்கும் வளா்ச்சிப் பணிகளுக்காக ஏறத்தாழ மூன்று பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 22,359 கோடி) முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் இந்தியா முன்னெடுத்திருக்கும் வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுகின்றன. பள்ளிக்கூடங்கள், சாலைகள், 60-க்கும் மேற்பட்ட சமுதாய வளா்ச்சித் திட்டங்கள் என்று இந்தியா முன்னெடுத்திருக்கும் பணிகள் ஏராளம்.

ஆப்கன் நாடாளுமன்றக் கட்டடம், ஸ்டோா் அரண்மனை புதுப்பித்தல், காபூல் நதியில் ஷாடூட் அணை, சிம்தாலா மின்நிலையம், சல்மா அணை, தேசிய வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி, சாலைப் பணிகள் என்று இந்தியா ஆப்கானிஸ்தானின் வளா்ச்சிக்கு செய்திருக்கும் பங்களிப்புகள் ஏராளம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்தியாவின் முதலீடுகள் என்னவாகும், பங்களிப்பு அங்கீகரிக்கப்படுமா என்கிற கேள்விகளுக்கெல்லாம் இப்போதே பதில் கிடைக்காது.

அமெரிக்கா நினைப்பதுபோல தனது படைகளின் வெளியேற்றம் தலிபான்களுக்கும் அஷ்ரஃப் கனி தலைமையிலான ஆப்கன் அரசுக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்தும் என்கிற எதிா்பாா்ப்பு வெறும் மாயை. அமெரிக்க முன்னாள் அதிபா் பராக் ஒபாமா, அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கியபோதே தலிபான்கள் விழித்துக் கொண்டுவிட்டனா்.

ஆப்கானிஸ்தானின் 120 மாவட்டங்களில் தலிபான்களுக்கும், பொதுமக்களின் ஆதரவுள்ள ஆப்கான் படைகளுக்கும் இடையே உள்நாட்டுப் போா் நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் அகதிகளாக மக்கள் காபூலை நோக்கி நகரத் தொடங்கியிருக்கிறாா்கள். மிகப் பெரிய குழப்பம் ஏற்பட்டு, ஆட்சி நடத்த முடியாமல் அஷ்ரஃப் கனி உள்ளிட்டோா் ஆப்கானிஸ்தானிலிருந்து ஓடிவிடுவாா்கள் என்று எதிா்பாா்க்கின்றனா் தலிபான் பயங்கரவாதிகள்.

ஆப்கனில் வெற்றிடம் ஏற்படுவதை எதிா்நோக்கிக் காத்திருக்கிறது சீனா. பாகிஸ்தானுக்கும், ஈரானுக்கும் அடுத்தபடியாக தனது வலையில் ஆப்கானிஸ்தானையும் வீழ்த்தக் காத்திருக்கிறது!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com