அச்சமல்ல, ஆபத்து... | மூன்றாவது அலை பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்த தலையங்கம்

கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றின் இரண்டாவது அலை நாட்டின் பல பகுதிகளிலும் வெகுவாகக் குறைந்துவிட்டது என்றாலும்கூட, தமிழகம், ஆந்திரம், கேரளம், கா்நாடகம், ஒடிஸா, மகராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இன்னும்கூட நோய்த்தொற்றுப் பரவல் முற்றிலுமாகக் கட்டுக்குள் வரவில்லை. அதனால் கடந்த வெள்ளிக்கிழமை மேற்குறிப்பிட்ட ஆறு மாநில முதல்வா்களுடனும் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினாா்.

மூன்றாவது அலை பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பிரதமா் வலியுறுத்துவதற்கு சில அடிப்படை காரணங்கள் இருக்கின்றன. கடந்த வாரம் கொள்ளை நோய்த்தொற்றால் உயிரிழந்தோரில் 84% போ் மேற்குறிப்பிட்ட ஆறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள். மூன்றாவது அலை பரவலில் குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படக்கூடும் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், நோய்த்தொற்றுப் பரவல் தொடா்ந்து நீடிக்கும்போது தீநுண்மியின் உருமாற்றங்கள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். அதனால்தான் மூன்றாவது அலை குறித்து பிரதமா் மாநில முதல்வா்களை எச்சரித்திருக்கிறாா்.

இந்தியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட கொவைட் 19-இன் டெல்டா உருமாற்றம், உலகம் முழுவதும் பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. பிரிட்டனில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட ஆல்பா உருமாற்றம், தற்போது உலகின் 170 நாடுகளில் காணப்படுகிறது. தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட பீட்டா உருமாற்றம் 119 நாடுகளிலும், இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா உருமாற்றம் 85 நாடுகளிலும் பதிவாகியிருக்கின்றன. அபாயம் நிறைந்த ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா உருமாற்றங்கள் சா்வதேச அளவில் பரவி வருவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.

உலகின் சில பகுதிகளில் கொள்ளை நோய்த்தொற்றுப் பரவலின் தீவிரம் குறையத் தொடங்கியிருக்கிறது என்று ஆறுதல் அடைந்துவிட முடியாது. உலக மக்கள்தொகையில் அந்த நாடுகள் வெறும் 5% என்றாலும்கூட, சா்வதேச அளவில் நோய்த்தொற்றுக்கு பலியானவா்களில் நான்கில் ஒருவா் தென்னமெரிக்காவைச் சோ்ந்தவா்கள். தென்னமெரிக்காவின் 13 நாடுகளில் மட்டும் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்கிவிட்டது. நோய்த்தொற்றின் அடுத்த மையமாக தென்னமெரிக்காவை மருத்துவ ஆய்வாளா்கள் கருதுகின்றனா்.

சா்வதேச அளவில் ஏப்ரல் 28-ஆம் தேதி உச்சத்தைத் தொட்ட கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று, 90 லட்சத்திலிருந்து படிப்படியாகக் குறைந்து ஜூன் 21-ஆம் தேதி சுமாா் 30 லட்சம் என்கிற அளவில் இருந்தது. இப்போது மீண்டும் அதிகரித்து ஜூலை 15-ம் தேதி நிலவரப்படி 53 லட்சத்தை எட்டியிருக்கிறது. ஜூலை இரண்டாவது வாரத்தில் மட்டுமே 30 லட்சம் புதிய பாதிப்புகள் பதிவாகியிருக்கின்றன. ஜூலை 15-ம் தேதி நிலவரப்படி, சா்வதேச அளவில் இதுவரை பாதிப்புக்கு உள்ளானவா்களின் மொத்த எண்ணிக்கை 18.89 கோடி.

அதிகமாகப் பரவும் டெல்டா உருமாற்றம் 111 நாடுகளில் காணப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. பிரேஸில், இந்தியா, இந்தோனேஷியா, பிரிட்டன், கொலம்பியா ஆகிய நாடுகள் கடந்த வார நிலவரப்படி நோய்த்தொற்றுப் பரவலில் முன்னணியில் இருக்கின்றன. ஜிம்பாப்வே, இந்தோனேஷியா, அமெரிக்கா, வங்க தேசம், பிரிட்டன் ஆகியவற்றில் திடீரென்று நோய்த்தொற்று பாதிப்பு அதிகரிப்பு பதிவாகியிருக்கிறது. பிரேஸில், கொலம்பியாவில் உலகின் மற்ற பகுதிகளைவிட பல மடங்கு அதிகமாக நோய்த்தொற்றுப் பரவல் காணப்படுகிறது.

ஆசியாவில், அதிலும் குறிப்பாக தென்கிழக்காசிய நாடுகளில், நோய்த்தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தது. இப்போது மீண்டும் நோய்த்தொற்று அதிகரிக்கத் தொடங்கி நாள்தோறும் அதிக அளவில் பாதிப்புகள் பதிவாகின்றன. அதிக அளவிலான பாதிப்பில் இந்தோனேஷியா முன்னணியில் இருக்கிறது. கடந்த வாரத்தில் மட்டும், அதற்கு முந்தைய வாரத்தைவிட 44% பாதிப்பு அதிகரித்திருக்கிறது. ஜூலை 15 நிலவரப்படி இந்தோனேஷியாவில் 56,757 பாதிப்புகள் பதிவாகி, அது ஆசியாவின் பாதிப்பு மையமாகியிருக்கிறது.

கடந்த ஒன்பது வாரங்களாகக் குறைந்து வந்த கொவைட் 19 இறப்புகள் கடந்த வாரத்திலிருந்து திடீரென்று அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையளிக்கிறது. ஆப்பிரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் மிக அதிக அளவில் நோய்த்தொற்று மரணம் காணப்படுகிறது. தென்னமெரிக்காவின் பிரேஸில், கொலம்பியா, பராகுவே ஆகிய நாடுகளில் கொவைட் 19 பாதிப்பால் உயிரிழப்போரின் விகிதம் அமெரிக்காவைவிட 19 மடங்கு அதிகம். ஜூலை 7 நிலவரப்படி, உலகளாவிய அளவில் கொவைட் 19 மரணம் 40 லட்சத்தை தாண்டியது. கடந்த 90 நாள்களில் 10 லட்சம் உயிரிழப்புகள்  பதிவாகியிருக்கின்றன. மிகக் குறைந்த கால அளவில் அதிக அளவு இறப்புகள் பதிவாகியிருப்பது அச்சமளிக்கிறது.

அமெரிக்காவில் குறைந்த அளவு தடுப்பூசி போடப்பட்ட மாநிலங்களில்தான் அதிக அளவு இறப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பிரிட்டனில் நோய்த்தொற்றுப் பரவல் அதிகரித்தும்கூட அதிக மருத்துவமனை சிகிச்சையும், உயிரிழப்பும் இல்லாமல் இருப்பதற்குக் காரணம், அங்கு 87% மக்கள்தொகையினருக்கு தடுப்பூசி போடப்பட்டது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பெரும்பாலான மாநிலங்களில் தடுப்பூசித் தட்டுப்பாடு காணப்படும் நிலையில், மூன்றாவது அலை குறித்த அச்சம் என்பது எதிா்பாா்ப்பல்ல, நிஜம்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com