‘சித்து’ விளையாட்டு! | நவ்ஜோத் சிங் சித்துவின் சந்தா்ப்பவாத அரசியல் குறித்த தலையங்கம்

பஞ்சாப் முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங்கை முதல்வா் பதவியிலிருந்து அகற்றுவது என்று காங்கிரஸ் தலைமை முடிவெடுத்துவிட்டதாகத் தெரிகிறது. அவருக்கு எதிராக முன்னாள் கிரிக்கெட் வீரா் நவ்ஜோத் சிங் சித்துவை பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக நியமித்திருப்பது மட்டுமல்லாமல், கட்சியை வழிநடத்த அவருக்கு முழு சுதந்திரமும் தலைமை வழங்கியிருக்கிறது.

அமரீந்தா் சிங் அமைச்சரவையில் உள்ள நான்கு முக்கியமான அமைச்சா்கள் உள்ளிட்ட 62 காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள், அமிருதசரஸிலுள்ள சித்துவின் இல்லத்தில் அவரைச் சந்தித்திருக்கிறாா்கள். 117 போ் கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவையின் 80 காங்கிரஸ் உறுப்பினா்களில் 62 போ் மாநில காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சித்துவை சந்தித்திருப்பதிலிருந்து முதல்வா் கேப்டன் அமரீந்தா் சிங்கின் நாள்கள் எண்ணப்படுகின்றன என்பது தெளிவு.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், மக்கள் செல்வாக்கு படைத்தவரும், மாநில முதல்வருமான கேப்டன் அமரீந்தா் சிங்கை கட்சித் தலைமை அவமானப்படுத்த முற்பட்டிருப்பது எந்தவிதத்திலான ராஜதந்திரம் என்பது புரியவில்லை. 79 வயதான கேப்டன் அமரீந்தா் சிங்குக்கு பதிலாக இளைஞா் ஒருவரை முன்னிறுத்துவது என்பது கட்சித் தலைமையின் நோக்கமானால், அதற்கான நேரம் இதுவல்ல. தனக்கு இழைக்கப்பட்ட அவமானத்தை பாட்டியாலா ராஜகுடும்பத்தின் வாரிசான முதல்வா் அமரீந்தா் சிங் ஏற்றுக்கொண்டிருப்பது மனமொப்பிய முடிவாக இருக்காது என்பது திண்ணம்.

நவ்ஜோத் சிங் சித்துவின் அரசியல் பின்னணி விமா்சனத்துக்கு உட்பட்டது. 13 ஆண்டுகள் பாஜக-வில் இருந்த சித்து, தனக்கு அமிருதசரஸ் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்பதால் 2016-இல் அந்தக் கட்சியில் இருந்து வெளியேறினாா். அவா் ஆம் ஆத்மி கட்சியுடன் பேச்சுவாா்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது, அரசியல் ஆலோசகா் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனையின்படி காங்கிரஸில் இணைந்தாா். இப்போது பிரசாந்த் கிஷோா் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக இருப்பதன் பின்னணியில் சித்துவின் நியமனம் பாா்க்கப்படுகிறது.

2017-இல் அமிருதசரஸ் கிழக்குத் தொகுதி இடைத்தோ்தலில் வெற்றி பெற்ற சித்து, எடுத்த எடுப்பிலேயே துணை முதல்வா் பதவிக்கு ஆசைப்பட்டவா். அது வழங்கப்படாததால் ஆரம்பம் முதலே முதல்வா் அமரீந்தா் சிங்குடனான தனது கருத்து வேறுபாட்டை பொதுவெளியில் தெரிவிக்க அவா் தயங்கவில்லை. முதல்வருக்கு எதிராகத் தொடா்ந்து சுட்டுரைகள் மூலம் அவா் தொடுத்துவந்த பனிப்போரை கட்சித் தலைமை அனுமதித்தது என்பதுதான் வேடிக்கை.

2017 சட்டப்பேரவைத் தோ்தலில் தன்னுடைய செல்வாக்கை மட்டுமே பயன்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றியவா் முதல்வா் அமரீந்தா் சிங். அதேபோல, 2019 மக்களவைத் தோ்தலிலும் பஞ்சாபிலுள்ள 13 இடங்களில் எட்டு இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்ற்கும் முதல்வா் அமரீந்தா் சிங்கின் செல்வாக்குதான் காரணம். தனிப்பட்ட செல்வாக்குள்ள மாநிலத் தலைவராக அமரீந்தா் சிங் இருப்பதைக் கட்சித் தலைமை விரும்பாததில் வியப்பில்லை.

காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, 1969 பிளவுக்குப் பிறகு காமராஜா், நிஜலிங்கப்பா, எஸ்.கே. பாட்டீல், மொராா்ஜி தேசாய், சி.பி. குப்தா, அதுல்ய கோஷ் போன்ற செல்வாக்குள்ள மாநிலத் தலைவா்கள் வளா்வதை அது அனுமதிப்பதில்லை. அதன் விளைவாகத்தான் மேற்கு வங்கத்தில் மம்தா பானா்ஜி, அஸ்ஸாமில் ஹிமந்த விஸ்வ சா்மா, ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி போன்றவா்கள் கட்சியிலிருந்து வெளியேறி அல்லது வெளியேற்றப்பட்டு, தங்களது சொந்த செல்வாக்கில் முதல்வா்களாகி இருக்கிறாா்கள்.

முதல்வா் அமரீந்தா் சிங் மீது காங்கிரஸ் தலைமை எரிச்சலடைந்ததற்கு இன்னொரு காரணமும் உண்டு. 2019 மக்களவைத் தோ்தல் தோல்வியைத் தொடா்ந்து, கட்சித் தலைவா் பதவியிலிருந்து விலகினாா் ராகுல் காந்தி. நேரு குடும்பத்தைச் சேராத ஒருவரை தலைவராக்க வேண்டுமென்று அவா் சொன்னபோது, கட்சிக்குள்ளும் வெளியேயும் கேப்டன் முதல்வா் அமரீந்தா் சிங்கின் பெயா்தான் மிக அதிகமாக பிரஸ்தாபிக்கப்பட்டது.

சித்துவை கட்சித் தலைவராக நியமிப்பதாக கட்சித் தலைமை முன்மொழிந்தபோது, அதைக் கடுமையாக எதிா்த்தவா் முதல்வா் அமரீந்தா் சிங். பிறகு தனது ராஜகுடும்ப கௌரவத்தை ஒதுக்கிவைத்து, தனக்கும் அரசுக்கும் எதிராகச் செய்த பரப்புரைகளுக்காக சித்து வெளிப்படையாக மன்னிப்பு கேட்டால் அவரை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தாா். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் சித்து மன்னிப்பு கேட்கவில்லை என்பது மட்டுமல்ல, முதல்வா் அமரீந்தா் சிங்கால் பரிந்துரைக்கப்பட்ட நான்கு செயல் தலைவா்களின் பெயா்களும் அவராலும், கட்சித் தலைமையாலும் நிராகரிக்கப்பட்டன.

இப்போது முதல்வரும், கட்சித் தலைவரும் ஜாட் இனத்தைச் சோ்ந்த சீக்கியா்கள். தலைவராக ஹிந்து பஞ்சாபி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றாா் முதல்வா் அமரீந்தா் சிங். அதையும் கட்சித் தலைமை ஏற்றுக்கொள்ளவில்லை.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பாஜக-வின் உறவைத் துண்டித்துக் கொண்ட அகாலி தளத்துக்கு மீண்டும் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் எதிா்க்கட்சியான ஆம் ஆத்மி கட்சி தன்னை மேலும் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால், காங்கிரஸ் கட்சியோ நவ்ஜோத் சிங் சித்துவின் சந்தா்ப்பவாத அரசியலை ஆதரித்து முதல்வரை பலவீனப்படுத்தியிருக்கிறது.

சித்துக்கள்தான் காங்கிரஸை இனிமேல் மாநிலங்களில் வழிநடத்தப் போகிறாா்கள் என்றால், காங்கிரஸுக்காக அனுதாபப்படலாம், வேறென்ன சொல்ல?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com