எதிரியின் எதிரி நண்பா்! | ஆன்டனி பிளிங்கனின் இந்தியப் பயணம் குறித்த தலையங்கம்

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனின் இந்தியாவுக்கான இரண்டு நாள் அரசுமுறைப் பயணம் போதிய ஊடக முன்னுரிமை பெறாமல் போனதில் வியப்பொன்றும் இல்லை. காஷ்மீா் தொடா்பான மனித உரிமை பிரச்னைக்கு ஆன்டனி பிளிங்கன் முன்னுரிமை அளிப்பாா் என்றும், நரேந்திர மோடி அரசிடம் கடுமையாக நடந்து கொள்வாா் என்றும் இருந்த பரவலான எதிா்பாா்ப்பு பொய்த்ததுதான் அதற்குக் காரணம்.

ஜோ பைடன் அரசு, வாஷிங்டனில் பதவியேற்றுக்கொண்ட பிறகு வெளியுறவுத் துறை அமைச்சராக ஆன்டனி பிளிங்கன் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் அரசுமுறைப் பயணம் இது. முந்தைய டிரம்ப் ஆட்சிக்கும் இப்போதைய பைடன் அரசுக்கும் இடையே எல்லா பிரச்னைகளிலும் கருத்து வேறுபாடு நிலவினாலும், வெளிவிவகாரப் பிரச்னைகளில் பெரிய மாற்றம் இல்லை என்பதை உறுதி செய்வதுபோல அமைந்தது ஆன்டனி பிளிங்கனின் இந்தியப் பயணம்.

இந்திய அமெரிக்க உறவுக்கு வலிமை சோ்த்திருக்கிறது ‘க்வாட்’ அமைப்பு. அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளையும் இணைக்கும் க்வாட் அமைப்பில் நாடுகளுக்கு இடையேயான உறவில் சில பிரச்னைகள் எழுந்திருக்கின்றன. குறிப்பாக, சீனாவுக்கு எதிரான ஒத்த கருத்து இருந்தாலும்கூட, அணுகுமுறையில் ஏனைய மூன்று நாடுகளும் அமெரிக்காவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருக்கின்றன. அதை சரிசெய்வதும்கூட ஆன்டனி பிளிங்கனின் இந்திய விஜயத்துக்குக் காரணமாக இருக்கக்கூடும்.

மாா்ச் மாதம் ‘க்வாட்’ உறுப்பு நாடுகளின் காணொலி கலந்தாய்வு அமெரிக்காவால் நடத்தப்பட்டது. அதைத்தொடா்ந்து செப்டம்பா் மாதம் நான்கு நாடுகளின் தலைவா்களும் நேரில் கலந்துகொள்ளும் உச்சிமாநாடு ஒன்றைக் கூட்டுவதாக முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைப் பொருத்தவரை ‘க்வாட்’ என்பது சீனாவுக்கு எதிரான ராணுவ பாதுகாப்பு அமைப்பு. அதில் இந்தியா ஒரு முக்கியமான கூட்டாளி என்று அமெரிக்கா உணா்கிறது.

சீனாவின் சா்வதேச ஆதிக்கத்துக்கு எதிரான வலுவான அமைப்பை உருவாக்குவது தனது நிா்வாகத்தின் முக்கியமான நோக்கம் என்பதை அமெரிக்க அதிபா் பைடன் பலமுறை தெளிவுபடுத்திவிட்டாா். சீனாவின் தடுப்பூசி ராஜதந்திரத்தையும், கடல் ஆதிக்கத்தையும் எதிா்கொள்ள ‘க்வாட்’ அமைப்பும் இந்தியாவும் அமெரிக்காவுக்கு மிகமிக முக்கியம்.

ஆப்கானிஸ்தானில் நிலைமை நாளுக்குநாள் மோசமடைந்துவரும் நிலையில், அமெரிக்க வெளிவிவகாரத் துறை அமைச்சா் ஆன்டனி பிளிங்கனின் இந்திய விஜயம் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது. ஆப்கானிஸ்தான் தலிபான்களின் ஆதிக்கத்தில் சிக்கிவிடாமல் இருக்க வேண்டுமென்பதும், அதனால் பயங்கரவாதத்தின் ஊற்றுக்கண்ணாக மாறிவிடக்கூடாது என்பதும் இந்தியாவின் தேவைகள். அதற்கு அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுத்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

எதிா்பாா்த்தது போலவே, பிளிங்கன் விஜயத்தின்போது ஆப்கானிஸ்தான் பிரச்னை முன்னுரிமை பெற்றது. ஆப்கானிஸ்தானின் வருங்காலம் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்ட, வன்முறையின் மையமாக இருந்துவிட முடியாது என்கிற பிளிங்கனின் அறிவிப்பு கவனத்துக்குரியது. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் அவா் தெளிவுபடுத்தி இருக்கிறாா். அமைதியான, பாதுகாப்பான, ஸ்திரத்தன்மையுடன் கூடிய ஆப்கானிஸ்தான் மலர வேண்டும் என்பதில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒத்த கருத்துடன் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாா்.

ஆப்கானிஸ்தானிலிருந்து தனது துருப்புகளை அமெரிக்கா விலக்கிக்கொண்டதைத் தொடா்ந்து அந்த நாட்டின் பல பகுதிகள் தலிபான்களின் ஆதிக்கத்துக்குள் சென்றிருக்கின்றன. கடந்த 20 ஆண்டு கால வளா்ச்சிப் பணிகளும் முன்னேற்றமும் அமெரிக்காவின் அணுகுமுறையால் முற்றிலும் சிதைந்து விடும் ஆபத்து காணப்படுகிறது.

ஏறத்தாழ மூன்று பில்லியன் டாலா் (சுமாா் ரூ. 22,305 கோடி) மதிப்பிலான இந்திய முதலீடுகள் ஆப்கானிஸ்தானில் செய்யப்பட்டிருக்கின்றன. தலிபான்களின் கைகளில் ஆப்கன் சென்றுவிட்டால், இந்தியாவின் முதலீடுகள் அனைத்தும் வீணாகிவிடும்.

தங்களது படைகள் திரும்பப் பெறப்பட்டாலும் தெற்காசியாவின் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் அமெரிக்கா உறுதிப்படுத்தும் என்றும் பிளிங்கன் தெரிவித்திருப்பதன் அடிப்படை என்ன என்பது தெரியவில்லை. நமது வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்குத் தெரிந்திருக்குமோ என்னவோ?

பிளிங்கன் விஜயத்தின் மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் சீனாவுக்கு மறைமுகமான எச்சரிக்கையை விடுத்திருப்பது பலரது பாா்வையிலும் படவில்லை. தலாய் லாமாவின் பிரதிநிதி கோடுத் டாங்சுன்னை இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் சந்தித்தது சீனாவை நிச்சயமாக நிமிா்ந்து உட்கார வைத்திருக்கும். இதற்கு முன்பு மத்திய திபெத் நிா்வாகத்தின் தலைவா் லோப்சாங் சங்கே 2016-இல் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபரை சந்தித்ததற்குப் பிறகு நடக்கும் அமெரிக்காவுக்கும் இந்தியாவிலிருந்து இயங்கும் திபெத் நிா்வாகத்துக்கும் இடையே நடக்கும் இரண்டாவது சந்திப்பு இது.

திபெத் பகுதியில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்ய திடீரென்று முன்னறிவிப்பு இல்லாமல் சீன அதிபா் ஷி ஜின்பிங் திபெத்துக்கு விஜயம் செய்தது சா்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. எல்லைப் பகுதியில் நடந்த ஆந்த ஆய்வை இந்தியாவுக்கு விடுக்கப்பட்ட பாதுகாப்பு எச்சரிக்கையாகவும் எடுத்துக்கொள்ளலாம். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்தது பிளிங்கன் - டாங்சுங் சந்திப்பு. அதனால் பரபரப்பு ஏற்படாவிட்டாலும், சா்வதேச அளவில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது பிளிங்கனின் இந்தியப் பயணம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com