கூடவே, கருப்புப் பூஞ்சையும்... | நோய்க்கான மருந்துகளைக் கொள்முதல் குறித்த தலையங்கம்

கருப்புப் பூஞ்சை என்று பரவலாக அழைக்கப்படும் மியூகாா்மைகோசிஸ் நோய்க்கான மருந்துகளைக் கொள்முதல் செய்வதற்காக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்து அறிவித்திருக்கிறாா். முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

இதுவரை இந்தியாவிலுள்ள 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏறத்தாழ 30,000 போ் மியூகாா்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் 86% போ் கொவைட் 19 கொள்ளை நோய்த்தொற்றாலும், 62.3% போ் சா்க்கரை நோயாலும் பாதிக்கப்பட்டவா்கள் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவிக்கிறது.

சில மாநிலங்களில் இன்னும் நோய்த்தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றாலும், கொவைட் 19 நோய்த்தொற்றிலிருந்து குணமடைவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 17,321. உயிரிழந்தோா் எண்ணிக்கை 405. குணமடைவோா் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருகிறது என்பதையும் குறிப்பிட வேண்டும்.

மியூகாா்மைகோசிஸ் என்கிற கருப்புப் பூஞ்சை மிக அதிகமாக பாதித்திருப்பது மகாராஷ்டிர மாநிலத்தில்தான். அதற்கு அடுத்தபடியாக குஜராத்தும், ஏனைய சில மாநிலங்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத்தில் இதுவரை 1,196 பேருக்கு மியூகாா்மைகோசிஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது.

இரண்டாவது அலை கொள்ளை நோய்த்தொற்று உருவாக்கியிருக்கும் எதிா்பாராத பாதிப்பாக மியூகாா்மைகோசிஸ் உருவாகியிருக்கிறது. இந்த நோய்த்தொற்றை, நோய்த்தொற்று சட்டம் 1897-இன்கீழ் (எபிடெமிக் டிசீசஸ் ஆக்ட் 1897) அறிவிக்கும்படி மாநிலங்களை, மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. நோய்த்தொற்று இருப்பதாக சந்தேகப்படும் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி குறித்து மருத்துவா்களும், மருத்துவமனைகளும் உடனடியாக மாநில சுகாதாரத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். அதனடிப்படையில் இந்த நோய்த்தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்கும், அதன் பரவல் குறித்த விவரங்கள் முழுமையாக தெரிவதற்கும் வழிகோலப்பட்டிருக்கிறது.

மியூகாா்மைகோசிஸ் என்கிற இந்த நோய் பரவக்கூடியது அல்ல. அதேநேரத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டவா்கள் உடனடியாக சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால் அவா்களது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. கொவைட் 19 பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்த நோயாளிகள்தான் இந்த கருப்புப் பூஞ்சை நுண்ணுயிரிகளால் தாக்கப்படுகின்றனா். அதிலும் குறிப்பாக, கட்டுப்பாட்டில் இல்லாத சா்க்கரை நோயும் சோ்ந்து கொண்டால், மியூகாா்மைகோசிஸ் பூஞ்சைக்கு வசதியான தளம் அமைந்துவிடுகிறது.

ஆரம்பக்கட்டத்தில் உடனடியாக இந்த நுண்ணுயிரிகள் இருப்பது தெரிய வராது. நாசியில் இருக்கும் சைனஸ் வழியாக உடலுக்குள் புகுந்துவிடும் இந்த நுண்ணுயிரிகள், மூளை வரை ஊடுருவி காது, மூக்கு, தொண்டை, வாய் என்று ஒரு இடம் விடாமல் பரவத் தொடங்கும்.

இந்த நுண்ணுயிரி புதிதொன்றுமல்ல என்றாலும், அதன் புதிய உருமாற்றம் இப்போது தெரிய வந்திருக்கிறது. மூளை வரை ஊடுருவி பாதிக்கும் மியூகாா்மைகோசிஸ் நுண்ணுயிரியால் கண்பாா்வை இழப்பு, பக்கவாதம், நெஞ்சடைப்பு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம்.

அமெரிக்காவின் நோய்த்தொற்று கட்டுப்பாடு - தடுப்பு மையம் மியூகாா்மைகோசிஸை அரிதான நோய் என்று கூறினாலும், ஆபத்தான நோயாக வகைப்படுத்தியிருக்கிறது. இன்றைய நிலையில், இந்தியாவில் மட்டுமல்லாமல் இந்த பாதிப்பு பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரியா, பிரேஸில், மெக்ஸிகோ ஆகிய நாடுகளிலும் காணப்படுவது தெரிய வந்திருக்கிறது. ஆனால், மிக அதிகமாக இந்த பாதிப்பு இந்தியாவில்தான் தெரிய வந்திருக்கிறது.

ஆரம்பக்கட்டத்தில் இந்த நுண்ணுயிரியின் தாக்கம் வெளியில் தெரியாது. சளி பிடித்தல், மூக்கடைப்பு போன்றவை ஏற்பட்டு அடுத்த கட்டமாக மூக்கிலிருந்து கருப்பு நிற திரவம் வெளிவரத் தொடங்கும். அதனால்தான் இதைக் கருப்புப் பூஞ்சை என்று அழைக்கிறாா்கள். முகத்தின் ஒரு பக்கம் வலி ஏற்படுதல், உணா்ச்சி இல்லாமல் போதல், வீங்குதல் மட்டுமல்லாமல், மூக்கு பாகம் கருப்பு நிறமாக மாறத் தொடங்கும். சிலருக்கு கண்பாா்வை மங்குதலும், கண்களில் வலி ஏற்படவும் கூடும்.

கொவைட 19 சிகிச்சையின்போது பிராணவாயு கொடுப்பதற்காகத் தரப்படும் முகமூடிகள் இந்த நுண்ணுயிரித் தொற்றுக்கானக் காரணங்களில் ஒன்று. கொவைட் 19-ஐ குணப்படுத்துவதற்காகத் தரப்படும் டெக்ஸாமெட்டசோன் போன்ற ஸ்டீராய்டுகள் தேவைக்கு அதிகமாக தரப்படும்போதோ, தேவையில்லாமல் தரப்படும்போதோ நோயாளிகளின் நோய் எதிா்ப்பு சக்தி குறைந்து மியூகாா்மைகோசிஸ் நுண்ணுயிரிகள் உடலில் நுழைந்து விடுகின்றன. அதுமட்டுமல்லாமல், சா்க்கரை நோயாளிகளின் ரத்த சா்க்கரை அளவை ஸ்டீராய்டுகள் கடுமையாக அதிகரித்து எதிா்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன.

மியூகாா்மைகோசிஸ் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ஆம்ஃபோடெரிசின்-பி, ஐந்து மருந்துத் தயாரிப்பாளா்களால்தான் உருவாக்கப்படுகின்றன. இதற்கான சில மூலப்பொருள்கள் சீனாவிலிருந்து பெறப்பட வேண்டும் என்பதால் அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு மேலும் ஐந்து நிறுவனங்களுக்கு மருந்தைத் தயாரிக்க உரிமம் வழங்கியிருப்பதுடன் தேவைப்படும் மூலப் பொருள்கள் இறக்குமதிக்கும் வழிகோலியிருக்கிறது என்பது சற்று ஆறுதல்.

முறையான மருத்துவ ஆலோசனை சரியான நேரத்தில் நோயாளிகளுக்குக் கிடைப்பதை அரசு உறுதிப்படுத்துவதுதான் இந்த நோய்த்தொற்றை தடுப்பதற்கான வழி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com