வெறிச்சோடும் வானம்! | நிலைகுலைந்து போயிருக்கும் விமான சேவைத் துறை குறித்த தலையங்கம்

நோய்த்தொற்றிலிருந்து உலகம் மீண்டாலும்கூட எதிர்கொண்டிருக்கும் இழப்பிலிருந்து பல விமான சேவை நிறுவனங்கள் மீண்டெழுமா என்பது கேள்விக்குறியே.


நிகழ் நிதியாண்டிலும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவன விற்பனை சாத்தியமாகாது போலிருக்கிறது. ஒட்டுமொத்த விமானப் போக்குவரத்துத் துறையும் தள்ளாடிக்கொண்டிருக்கும் நிலையில், நிகழ் நிதியாண்டில் மேலும் இழப்பை எதிர்கொண்டு, கடன் சுமை அதிகரிக்குமே தவிர இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வர மாட்டார்கள். இந்தியன் ஏர்லைன்ஸ் என்றில்லை, ஒட்டுமொத்த விமான சேவைத் துறையும் கொள்ளை நோய்த்தொற்று பாதிப்பால் கடுமையான சோதனைக்கு உள்ளாகியிருக்கிறது. 

விமானப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து, விமான சேவைத் துறையே நிலைகுலைந்து போயிருக்கிறது. கடந்த மாத இந்திய விமானப் பயணிகளின் எண்ணிக்கை வெறும் 20 லட்சம் மட்டுமே. ஏப்ரல் மாதம் 57 லட்சமாக இருந்தது நோய்த்தொற்று அதிகரிப்பால் மேலும் குறைந்தது. 2019 மே மாதத்தில் கொவைட்-19 நோய்த்தொற்று  இல்லாமல் இருந்தபோது 1.22 கோடியாக இருந்த பயணிகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டால் வீழ்ச்சியின் தாக்கம் புரியும்.
கடந்த ஆண்டும் நிகழ் ஆண்டும் சேர்த்தால் இந்திய விமான போக்குவரத்துத் துறை சுமார் 8 பில்லியன் டாலர் (சுமார் ரூ.58,550 கோடி) அளவுக்கு இழப்பை எதிர்கொள்ளும் என்று கருதப்படுகிறது. இந்தியாவில் லாபகரமாக இயங்கும் விமான நிறுவனமான "இண்டிகோ' தன்னுடைய ஊழியர்களுக்கு ஊதியமில்லாத விடுப்பு அறிவித்திருக்கிறது. அடுத்த ஆண்டு வரை லாபத்தை எதிர்பார்க்க முடியாது என்று அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

கொள்ளை நோய்த்தொற்றால் பயணிகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது. இந்த ஆண்டில் அதிகபட்சமாக 8 கோடி பேர் முதல் 9 கோடி பேர் மட்டுமே பயணிப்பார்கள் என்று இந்திய விமானத் துறை எதிர்பார்க்கிறது. மூன்றாவது அலை நோய்த்தொற்று உறுதிப்படுமேயானால் அதுவும் சாத்தியமாகாது. 2019-இல் சுமார் 14 கோடி பயணிகள் பறந்ததுபோய், இப்போது உள்ளூர் விமான சேவை அதில் சரிபாதி அளவுக்கு குறையும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

பெரும்பாலான விமானங்கள் சேவை இல்லாமல் விமான நிலையங்களில் முடங்கிக் கிடக்கின்றன. ஆனாலும்கூட, பழுதடைந்து விடாமல் இருப்பதற்காக தினந்தோறும் சில மணி நேரங்கள் ஆகாயத்தில் பயணிகள் இல்லாமல் பறந்தாக வேண்டும். கொவைட்-19 நோய்த்தொற்றுக்கு முன்னால் தினந்தோறும் 2000-க்கும் அதிகமான விமானங்கள் இந்திய வான்வெளியில் பறந்ததுபோய், இப்போது அதில் சரிபாதி அளவிலான விமானங்கள்தான் பறக்கின்றன. அவையும்கூட மருத்துவ உபகரணங்களை எடுத்துச் செல்லவும், அதிகாரிகள், மருத்துவர்கள் போன்றோர்களின் அவசர கால சேவைக்காகவுமே பெரும்பாலும் இயக்கப்படுகின்றன. 

நோய்த்தொற்றுக்கு முன்னால் தில்லி விமான நிலையத்தில் நாள்தோறும் 2 லட்சத்துக்கும் அதிகமான பயணிகள் வந்து போய்க்கொண்டிருந்ததுபோய் இப்போது சுமார் 30,000 பயணிகள்தான் வருகிறார்கள். மூன்று முனையங்களில் இரண்டு மூடப்பட்டு, டெர்மினல்-2 மட்டுமே செயல்படுகிறது. மும்பை சத்ரபதி சிவாஜி பன்னாட்டு விமான நிலையத்திலும் இதுதான் நிலைமை. 

வெளிநாட்டுப் பயணிகள் வந்துபோவது என்பது முற்றிலுமாக முடங்கி விட்டது. அதிலும் இந்தியாவில் அதிகமாகக் காணப்படும் இரண்டாவது அலை நோய்த்தொற்றுப் பரவல் காரணமாகப் பல நாடுகளும் இந்தியாவுக்குப் பயணிப்பதை அனுமதிப்பதில்லை. பன்னாட்டு விமான நிறுவனங்களின் இந்திய சேவையும் குறைந்து விட்டது. இதே நிலை இந்த ஆண்டு முழுவதும் தொடருமே தவிர பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட வழியில்லை. 

அசுர வேகத்தில் வளர்ந்துகொண்டிருந்தது இந்திய விமான சேவைத் துறை. உள்நாட்டு விமானப் போக்குவரத்து அதிவேகமான வளர்ச்சியைக் கண்டதன் காரணமாக இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில்கூட விமான நிலையங்கள் உருவாகின. 2014 முதல் 2018 வரையிலான காலகட்டத்தில் இரட்டிப்பு வளர்ச்சியை எதிர்கொண்டது இந்திய விமான சேவைத் துறை. 2015-இல் 20.8%, 2016-இல் 22.2%, 2017-இல் 18.2%, 2018-இல் 18.6% என்று வளர்ந்து கொண்டிருந்த விமான சேவைத் துறை இப்படியொரு திடீர் வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என்று யாரும் கனவில்கூட எதிர்பார்த்திருக்க முடியாது. கொள்ளை நோய்த்தொற்று அந்தப் பாவத்தைக் கட்டிக்கொண்டது.

அதிவேகமான வளர்ச்சியை எதிர்கொள்ள முடியாமல் விமான நிலையங்கள் தவித்தன. 6 கோடி பயணிகளை ஆண்டுதோறும் எதிர்கொள்ளும் விதத்தில் அமைந்த தில்லி விமான நிலையம், 2018-19 இல், சுமார் 7 கோடி அளவிலான பயணிகள் வந்தபோது திகைத்துப் போனது. வளர்ச்சியின் வேகத்தை ஈடுகட்ட 10 கோடி பயணிகளை எதிர்கொள்ள விரிவாக்கத்துக்கு முனைந்தது. இதேதான் மும்பை, பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம் விமான நிலையங்களின் நிலைமையும். 

இப்போது விமான சேவையும் குறைந்து, பயணிகள் வருகையும் குறைந்த நிலையிலும் கடந்த ஓராண்டுக்கும் மேலாக, பராமரிப்புச் செலவுகள் குறையாததால் கடும் நிதி நெருக்கடியை விமான நிலையங்கள் எதிர்கொள்கின்றன. விமான ஊழியர்களை ஊதியமில்லா விடுப்பில் அனுப்புவதுபோல, விமான நிலைய ஊழியர்களையும், விமானப் பராமரிப்பு ஊழியர்களையும் குறைத்துவிட முடியாது. வரவில்லாமல் வழக்கம்போல பராமரிப்புச் செலவை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயம் விமான நிலையங்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

கொவைட்-19 கொள்ளை நோய்த்தொற்று, மனிதர்களைப் போலவே விமான சேவைத் துறையையும் முடக்கிப்போட்டிருக்கிறது. நோய்த்தொற்றிலிருந்து உலகம் மீண்டாலும்கூட எதிர்கொண்டிருக்கும் இழப்பிலிருந்து பல விமான சேவை நிறுவனங்கள் மீண்டெழுமா என்பது கேள்விக்குறியே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com